Monday, April 27, 2015

ஜோதி வழிபாடு

ஜோதி வழிபாடு
          கோடா ஸ்ரீ வேங்டேஸ்வர சாஸ்திரிகள்
மனித இனத்திற்கு மிகவும் சிறந்த வழிபாடு ஜோதி வழிபாடே. ஐந்து பூதங்களின் நடுவானது ஜோதிஸ் அல்லது அக்னி ஆகும். ஆயினும், ஆகாசம், வாயு என்ற இரண்டு பூதங்களை நாம் பார்க்க முடியாது. நாம் பார்த்து அனுபவிக்கும் பூதங்களில் முதன்மையானது இந்த ஜோதிஸ்ஸே ஆகும். ஜோதிஸ் என்றால் ஒளி - வெளிச்சம். இதுவே மனிதனின் வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் தேவைப் படுகிறது. இருட்டில் எதையும் செய்ய முடியாதல்லவா? இருட்டைப் போக்குவதற்கு ஒளியைத் தவிர வேறொரு வழியில்லை. இவ்விருட்டு நமக்கு வெளியிலும் நமக்கு உள்ளேயும் ஊடுருவி நிற்கிறது. எவ்வளவு படித்த போதிலும் மேலும் அறியாத விஷயங்கள் பலப்பல காணப்பட்டுக் கொண்டே இருக்கும். கலைகளுக்கு அரசியான கலைச் செல்வியும் இன்னும் ஜகன்மாதாவிற்குக் கல்வியின் பொருட்டுப் பணிபுரிகிறதாக லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வரும் “ஸசாமர ரமாவாணீ ஸவ்ய தக்ஷிண சேவிதா” என்னும் நாமாவினால் அறிகிறோம்.
ஜோதிஸ் வெளி இருட்டையே போக்கடிக்கும். ஆனால் நம் இதயத்தில் சூழ்ந்துள்ள உள்ளிருட்டைப் போக்குவதற்கு ஜோதிஸ்ஸுக்கு ஜோதிஸ் ஆன பரம்பொருளின் தயவு வேண்டியிருக்கிறது. “தத் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி: ஆயுர்ஹோ பாஸதே ம்ருதம்” என்று ப்ருஹதாரண்யக உபநிடதம் உரைக்கிறது. இந்த சித் ஜோதிஸ் உலகில் உள்ள சப்தம், ஸ்பர்ஸம். சுவை முதலிய எல்லாவற்றையும் அறிவிக்கும். இந்தப் பரம்பொருளை அறிந்து, அதனால் ஸகல நன்மையையும் முக்தியையும் பெறுவதற்குத் தொடங்கும் முயற்சியே தீபாவளி எனப்படும். மகாபாரத த்தில் “தீப ப்ரத: ஸ்வர்க லோகே தீப மாலேவ ராஜதே” எனச் சொல்லப்பட்டுள்ளதால் இந்தப் பண்டிகை நாலாயிரம் வருடங்கள் முன்பாகவே இருப்பதாக அறியப்படுகிறது.
மனிதர்களைத் துன்புறுத்தும் பாபங்களை நரகன் எனும் அசுரனாகச் சித்திரித்து அவரை ஸ்ரீகிருஷ்ண பகவான் அழித்ததன் பொருட்டு இப்பண்டிகை கொண்டாடப் படுவதாக உலகில் ப்ரசித்தி. ஆனால், இங்கு நரகன் என்றால் நம்மைத் துன்புறுத்தும் அறியாமையே ஆகும். அதைப் பிளந்து நமக்கு நிம்மதியையும் ஆனந்தத்தையும் அளிக்கவே, பகவான் கிருஷ்ணனாக அவதரித்து, உண்மையாக நடந்து கொள்வது எனும் சாதனத்தைக் கையாண்டு (ஸத்ய பாமாவின் சஹாயத்தினால்) ஜகத்குருவாகத் திகழ்ந்தார். அதைக் குறிப்பதற்காக தீபாவளி - தீபங்கள் வரிசையாக ஏற்றி வைப்பது - மரபாக உள்ளது.
அப்பொழுது
“தீபஜ்ஜோதி பரம்ப்ரம்ஹ |
தீபஜோதி மகேஸ்வர: ||
தீபேன சாத்யதே ஸர்வம் |
ஸந்த்யா தீபம் நமோஸ்துதே ||”
என்று தீபத்தை வணங்குவார்கள். இந்த ஜோதி வழிபாட்டினால் வெளியில் உள்ள இருட்டும் நமக்குள் இருக்கும் பாபம் எனும் இருட்டும் அகன்று விடும்.
அக்னி ஹோத்ரம் எனும் வைதிக யாகங்களும், இந்த ஜோதி வழிபாட்டையே உணர்த்துகிறது. ஸகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கத் தக்கது இந்த ஜோதி வழிபாடே! ஆகையால், இந்த தீபாவளிப் பண்டிகையை லக்ஷ்மீ பூஜையாகவும் கொண்டாடுவர். வேதத்தில் உள்ள ஸ்ரீ ஸூக்தம் எனும் துதியும் இந்த அக்னி வழிபாட்டிற்குச் சேர்ந்ததே ஆகும். இங்கு ஸ்ரீ எனும் சொல், ஐஸ்வர்யம், அறிவு, மனநிம்மதி, தெய்வ அருள் எனப் பல அர்த்தங்களைக் கொண்டது. மறைகளும் “தமஸோமா ஜோதிர் கமய” என்று வழிபட நம்மைத் தூண்டுகிறது. “இருட்டினின்று என்னை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்” என்று இதற்குப் பொருள்.
மனிதன் தன் வாழ்க்கையில் காரிருளை நீக்கி ஒளிமயமான நிலையைப் பெற வேண்டுமென்பது நோக்கமாகும். அதே போல் பயங்களில் கொடிய சிறந்த பயம், ப்ராண பயமே ஆகும். தன்னுயிரைக் காக்க எவ்வளவு செலவு ஆனாலும் எந்த நஷ்டம் வந்த போதிலும் அதை ஏற்றுக் கொண்டே வாழ யத்தனிக்கிறான். ஆகையால், யமனையும் சித்ரகுப்தனையும் பண்டிகையன்று வழிபடுவதுண்டு.
இப்படி தீபாவளிப் பண்டிகை லக்ஷ்மீ கடாக்ஷத்திற்கும், கலைச் செல்வியின் அருளைப் பெறவும், அதனால் உயர்ந்த ஆத்மானுபவத்தையும் முக்தியும் பெறுவதற்கும் எடுத்துக் காட்டாக உள்ளது. இந்தப் பரமானந்தத்தை நோக்கிக் கொண்டாடப்படும் தீபாவளியன்று எல்லோரும் சந்தோஷமாகப் புது ஆடைகளைத் தரித்து, இனிப்பு வகைகளை உட்கொண்டு, பெரியவர்களின் ஆசியை அடைந்து, இறைவனை வழிபட்டு, சமூக சேவையையும் மேற் கொள்வது நம் நாட்டின் சான்றோர்களால், உருவாக்கப்பட்ட வழி. இந்தக் கொண்டாட்டத்தில் கவனிக்கத் தக்கது ஜோதி வழிபாடே. ஆகவே, தீபாவளியன்று எல்லோரும் ஆத்ம ஜோதியை அறிந்து வழிபட்டுச் சிறந்த நன்மையை அடைவோமாக!

No comments:

Post a Comment