Friday, April 24, 2015

காமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என்றுதான் சொன்னார்கள்

செக்ஸ்" என்கிற ஒரு ஒற்றை சொல் நம் நாட்டில் கெட்ட வார்த்தை போல் பாவிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாண்மையோரை இந்த ஒற்றை சொல் தான் ஆட்கொண்டிருக்கிறது. இந்த ஒற்றை சொல்லை உபயோகித்தால் பத்திரிகைகள் விற்று தீர்கின்றன, திரைப்படங்கள் வசூல் சாதனை புரிகின்றன, தொலைக்காட்சி சேனல்களின் டி ஆர் பி ரேட்டிங்குகள் உயர்கின்றன.

உதாரணத்திற்கு நித்யானந்தாவின் கதையை எடுத்துக் கொள்வோம். சன் குழுமம், அவரின் படுக்கை அறையில் வைத்து எடுத்த காட்சியினால் பல கோடி வருவாயை ஈட்டியது என்றால், அது மிகையில்லை. நக்கீரன் போன்ற பத்திரிகைகளும் அதனால் பெரும் பணம் சம்பாதித்தது. இந்த சம்பவத்தை வைத்து அவர்கள் பல நாட்கள் வியாபாரம் செய்தார்கள். சிலர் தங்கள் ஆழ்மனதுள் உள்ள ஆசைகளையும் ஏக்கங்களையும் இன்னும் சேர்த்துக்கொள்ள இதை பல முறை பார்த்தார்கள், படித்தார்கள். ஒரு சிலரோ "ஹிந்துவாய் இருப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன்" என்றார்கள்

ஆனால் நம் முன்னோர்கள் அத்தகைய மனோநிலையில் இருந்தார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதை வேண்டாம் என்று வெறுக்கிறாயோ அதைதான் நம் மனம் பற்றிக் கொள்கிறது. காரண அறிவால் அதை நீ சிற்றின்பம் என்று அறிந்துக் கொண்டு, பின்னர் அச்சிற்றின்பத்தை தாண்டி வர முயல்வது அறிவு.

அது சரி ஏன் சிற்றின்பம் ? எத்தனை முறை அனுபவித்தாலும் நிலையான திருப்தியை தராத எதுவும் சிற்றின்பம். சீக்கிரம் திகட்டிவிடும், பின்னர் மீண்டும் திரும்ப கேட்கும். சமுத்திரத்தில் உள்ள அலைகளை போல் மீண்டும் மீண்டும் நம் மனதில் வந்து கொண்டே இருக்கும்.

அனைவருக்கும் தெரிந்த கதை. குருவிடம் "தியானம்" என்றால் என்ன எனக் கேட்கும் ஒரு சீடனிடம், "சம்மனம் இட்டு உட்கார்ந்துக் கொண்டு மனதை ஒருங்கினைதுக் கொள் ஆனால் குரங்கை மட்டும் நினைத்து விடாதே" என்று குரு சொன்னாராம். சீடனும் மீண்டும் மீண்டும் குரங்கை நினைக்கக் கூடாது என்று நினைக்கையில் குரங்கு மனதில் வந்துக் கொண்டே இருக்கிறது. குரு, குரங்கை பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் குரங்கு வந்திருக்காது. எதை அழிக்க நினைக்கிறோமோ மனம் அதை பல மடங்கு பெருக்குகிறது.

ஆக காமத்தை நம் முன்னோர்கள் அழித்துவிடு என்று சொல்லவில்லை,"கடந்துவிடு" என்றுதான் சொன்னார்கள். எதை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது வளர்கிறது.

அனைத்தையும் கட உன் உள்ளே இருக்கிறான் என்பதையே நாம் அற்புதமாய் "கடவுள்" என்கிறோம். அதனால்தான் கோவில் கோபுரங்களில் கீழே அழகான பெண்களின் தோற்றத்தையும், மேலே உயரத்தில் இறைவனையும் வைத்தார்கள்.

No comments:

Post a Comment