Monday, April 27, 2015

சித்த மருத்துவம் ஒரு கண்ணோட்டம்

சித்த மருத்துவம் ஒரு கண்ணோட்டம்
முனைவர், பேராசிரியர் தண்டாங்கோரை நடேச கணபதி
முதற்கண் என்னைப் பற்றிக்கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு சித்த (யோக) ஆராய்ச்சியாளன்; சித்த மருத்துவன் அல்லன். இருப்பினும் நான் படித்தறிந்த சித்த நூல்கள், ஓலைச்சுவடிகள் மூலமாக நான் கண்டறிந்த ஆங்காங்கே காணப்பட்ட சித்த மருத்துவத்தைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தை இந்தக் கட்டுரை மூலமாகப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.
சித்த மருத்துவம் என்பது குண்டலினி யோகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவ முறை. ஓரளவாயினும் யோகத்தையும், குண்டலினி யோக முறையையும் சக்கரங்களையும் பற்றிய அறிவு ஒவ்வொரு சித்த வைத்தியனுக்கும் இன்றியமையாதவை. சித்த மருத்துவம் என்பது மருத்துவ உலகில் ஒரு வியக்கத்தக்க முறையாகும். அகத்தியர், போகர், தேரையர், கோரக்கர், யூகிமுனி, தன்வந்திரி ஆகிய சித்தர்கள் கண்டறிந்த முறையே சித்த மருத்துவம் எனப்படுகிறது.
சித்த மருத்துவம் ரசவாதத்துடன் இன்றியமையாத தொடர்பு கொண்டது. ரசவாதம் என்பது ஒரு வேதியியல் முறை. ரசவாதம் என்பது தமிழ்ச் சித்தர் மரபில் வகார மார்க்கம் என்றழைக்கப் படுகிறது. வகாரம் (வங்காரம் என்பதன் திரிபு) என்றால் பொன் அல்லது தங்கம் என்று பொருள்.
சித்தர்களை ரசவாதிகள் என்று கருதும் போக்கு தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. பாதரசத்தைக் கூட சித்தரசம் என்றே அழைக்கிறார்கள். இராசேஸ்வர தரிசனம் என்ற நூல் பாதரசம் சாகாவரம் தரும் வல்லமையுள்ளது என்று கூறுகிறது. சாதனமாலா என்ற தந்திர நூல் ரசவாதத்தை ஒரு சித்தி என்று குறிப்பிடுகிறது. ஊர்வசி ரசவாத சிட்கா என்ற நூல் ரசவாதம் பற்றிய விவரக் குறிப்புகள் தருகிறது.
ரசவாதம் என்ற மரபறிவியல் உலோகங்களின் மீது செயல்படுவது மட்டுமல்ல. ஆன்மாவின் மீதும் செயல்படுவது. சித்தர்கள் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மிக ரசவாதம் என்று கருதினார்கள்.
ரசவாதிக்கும் சித்தனுக்கும் இடைப்பட்ட ஒப்புமையைக் கவனித்தால் நமக்கு ஒன்று புலப்படும். ரசவாதி எவ்வாறு தாழ்ந்த உலோகத்தைத் தங்கமாக மாற்றுகிறானோ அவ்வாறே சித்தன் தன்னுடைய உடலையும் உள்ளத்தையும் சார்ந்து நிற்கும் உயிரை எந்தச் சார்புமற்ற ஆன்ம நிலைக்கு மாற்றுகிறான். இந்தியாவில் தங்கம் என்பது மரணமின்மைக்கான குறியீடு. "அம்ருதம் ஆயுர் ஹிரண்யம்" என்கிறது ஒரு வடமொழிச் சுலோகம். இந்த நோக்கில் பார்த்தால் ஒவ்வொரு சித்தனும் ஓர் ஆன்மிக ரசவாதியாகிறான். அவனது சாதனை காய சாதனை, அஃதாவது உடம்பைப் புடமிடுதல்.
சித்தர்களின் ரசவாதம் என்பது முழுமை பெறாத வேதியியல் என்றோ முதிர்ச்சியுறாத அறிவியல் என்றோ கருதவேண்டாம். அது மரணமின்மைக்கும் ஆன்ம சுயாட்சிக்கும் வழி நடத்துகிற ஓர் அற்புத ஆன்மத் தொழில் நுட்பம்.
இந்த ஆன்மத் தொழில் நுட்பத்தை விளக்கும் முயற்சியில் சித்தர்கள் சர்வசாதாரணமாக ரசவாதக் குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு உலோகத் துகள்களின் கலவை சூடேற்றப்படும் போது அவற்றில் ஏற்படும் ரசாயன மாற்றத்தை யோக சாதனைக்காக நாம் எழுப்பும் உட்சூட்டினால் நமக்குள் ஏற்படும் மாறுதல்களோடு ஒப்பிடுகிறார்கள். இடைக்காலங்களில் மேலை நாடுகளிலும் கூட ரசவாதம் இத்தகைய உள் மாற்றங்களோடு தொடர்பு படுத்திப் பேசப்பட்டது.
ரசவாத முறை, வேதியியல் தத்துவங்களின் அடிப்படையில் செயலாற்றுவது. அதன்படி உடலிலுள்ள மாற்ற முடியாத கூறுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்கு பாதரசம், கந்தகம், காக்கைப் பொன் என்று சொல்லப்படுகின்ற மைக்கா முதலிய வேதிப் பொருள்களின் கலவை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையை வேதகாலத்து முனிவர்களே கையாண்டிருப்பதாகச் சான்றுகள் சொல்கின்றன. அவர்கள் சோம வேள்வி செய்து சோம ரசம் பருகினார்கள் என்று சொல்லப்படுவது இதைக் குறித்ததுதான். தாந்திரிக பௌத்தர்கள் வாருணீ என்ற ஒரு வகைப் பானத்தைப் பருகியிருக்கிறார்கள். அதைப் பருகுவதால் சாவா நிலை பெறலாம் என்று அவர்கள் கருதினார்கள். ரசவாத இருதய தந்திரம் என்ற நூல் ரசத்தை (வேதியியற் பொருளை - குறிப்பாகப் பாதரசத்தை) பயன்படுத்தி உடம்பை அழிவில்லாமல் செய்து கொள்ள முடியும் என்று சொல்கிறது.
ரசவாத முறைகள் எல்லாமே முப்பொருள் கொள்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. உப்பு, கந்தகம், பாதரசம் ஆகியனவே அம்மூன்று பொருள்கள். ஆனால் இந்த மூன்றும் நமக்குத் தெரிந்த சாதாரண உப்பு, கந்தகம், பாதரசம் இல்லை என்று ரசவாதிகள் கருதுகிறார்கள். பாராசெல்சஸ் (Paracelsus 1493-1541) என்ற ரசவாதியின் கருத்துப்படி பாதரசம் என்பது உணர்வு; கந்தகம் என்பது ஆன்மா; உப்பு என்பது உடம்பு. தமிழர்களின் ரசவாத முறைகளில் முப்பு என்ற சொல் புழங்கப்படுகிறது. அது மேற்சொன்ன மூன்று பொருள்களின் கலவையேயாகும். அதை உண்டால் உடல் பொன் மயமாகும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்ச் சித்தர்களின் ரசவாதக் கருத்துகள் மறை பொருட் கூற்றுகளாக, குழூஉக் குறிகளாக எழுதப் பட்டுள்ளன. அவை யோகம், தந்திரம், மருத்துவம் என்ற மூன்று நிலைகளையும் அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத் தக்கவையாக அமைந்திருக்கின்றன. என்னுடைய சித்த மருத்துவ நண்பர் ஒருவர் முப்புவுக்கு "வெண்புலி", "கருநாகம்", "செம்பருத்திப்பூ" என்று பொருள் கூறினார். சீனத்து ரசவாத நூல்களும் "வெண்புலி", "நீல நாகம்", "பறக்கும் முத்து" என்பவற்றைக் குறிப்பிடுகின்றன.
ஊர்வசி ரசவாத சிட்கா என்ற நூலில் ரசவாதம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மூலிகை (இயற்கையான செடி, கொடி, தழைகள்), காரசாரம் (செயற்கையான வேதிப் பொருள்கள்) என்பன. காரசாரத்தைக் கைக் கொண்டவர்கள் வேதியியலாளர்களாகவும் மூலிகையைக் கைக் கொண்டவர்கள் சித்த மருத்துவர்களாகவும் ஆயினர். என்றாலும் இவை இரண்டும் ஒன்றோடொன்று கை கோத்துச் செயல்படுவன என்பது நினைவில் கொள்ளத் தக்கது. ரசவாதத்தால் மாறுபட்ட உடலுக்கு ரசமயீதனு என்று பெயர். இரச இருதய தந்திர நூலில் பதினெட்டு இரச கன்மங்கள் என்ற ரச சம்ஸ்காரங்கள் உள்ளன. அந்த முறைகளைப் பின்பற்றும் போது உடம்பு பூரண வலிமை பெறுகிறது என்று கூறுகிறது. மகாயான பௌத்தத்தின் முதன்மையாளர்களில் ஒருவரான நாகார்ச்சுனர் ரசவாதத்தில் மிகுந்த வல்லமை பெற்றிருந்தார். அதன் காரணமாக வியத்தகு ஆற்றல்கள் பலவற்றையும் அவர் பெற்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது.
முப்பு என்ற ஒன்றைப் பற்றிச் சித்தர் பாடல்கள், குறிப்பாக, மருத்துவப் பாடல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. முப்பு என்பது வாலையை அதாவது குண்டலினி ஆற்றலைக் குறிக்கின்றது. மேலும் அது சகஸ்ராரத்தையும் குறிக்கிறது. முப்பு என்பது மூவகை என்று ஒரு விளக்கம் தரப்படுகிறது. அம்மூன்றாவன: வைத்திய முப்பு, வாத முப்பு, யோக முப்பு ஆகியனவாம். முதல் இரண்டு முப்புகளும் மருத்துவக் கலைச் சொற்களாகும். மூன்றாவது முப்பாகிய யோக முப்பு என்பது குண்டலினி யோகத்தைக் குறிக்கிறது. யோக முப்பு ஒரு குருவின் மூலமாகப் பயிலப்பட வேண்டியதாகும். அது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றினால் ஆனது.
முப்பு என்பது சாதாரண உலோகங்களைத் தங்கமாக மாற்றம் செய்யும் ஒரு பொருள் என்றும் சித்தர் இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் முப்பு என்பது ஒரு வகையான உப்பு என்றும் இது மூன்று வகைப்பட்டது என்றும் சித்தர்கள் கூறுகின்றனர். அவையாவன: அதி உப்பு, இது வெட்ட வெளியிலிருந்து கிடைக்கப்படுவது என்றும், நதி உப்பு என்பது இயற்கைப் பொருள்களிலிருந்து பெறப்படுவது என்றும், சமாதி உப்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கப்படுவது என்றும் சித்தர் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. யோக முறையைப் பயின்று தவத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த முப்பு என்கிற பொருளைப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முப்பு என்கிற பொருளைப் பெற்றவர்களே சித்தர்கள் என்று கூறும் ஒரு மரபு தமிழகத்தில் உள்ளது.
சித்தர்கள் தங்களுடைய மருத்துவ முறையைப் பொதுவாக கருக்கிடை வைத்தியம் என்று கூறுகிறார்கள். இதற்கு மிகுந்த ஈடுபாட்டுடன் மருத்துவத் துறையில் செய்யப்பட்ட, கண்டறியப் பட்ட வேலை அல்லது முறை என்று பொருள். கருக்கிடை என்றால் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட்ட வைத்தியச் செயல் என்று பொருள். சித்தர்கள் தங்கள் மருத்துவமுறைக்கு திறவு கோல் என்ற ஒரு பெயரையும் கூறுகிறார்கள். திறவுகோல் என்றால் சாவி, நுழைவாயில் என்று பொருள். இந்தப் பெயரைச் சித்தர்கள் பலரும் தங்கள் வைத்திய முறைக்கு வைத்திருக்கின்றனர். அதாவது வைத்தியத் திறவு கோல் என்பது.
அகத்தியர் கர்ம காண்டம்-300 எனும் நூல் நோய்களுக்கும் ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கும் அடிப்படைத் தொடர்பு உண்டு என்று அடித்துக் கூறுகின்றது. அந்நூலிலிருந்து சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், காச நோயால் அவதியுறுவர் என்றும், மரங்களையும், செடி கொடிகளையும் கண் மண் தெரியாமல் வெட்டுபவர்கள் மூட்டு நோயால் அவதியுறுவர் என்றும், நல்ல குடியைக் கெடுத்தவர்கள் தொழுநோயால் அவதியுறுவர் என்றும், பழுக்காத காய்களைப் பறித்தல், விதைகளையும், இளம் செடிகளையும் அழித்தல், கன்றுக்குத் துளியும் பாலில்லாமல் மாடுகளைக் கறப்பவர்கள் ஆகியோர் கரு குறித்த நோய்களால் அவதியுறுவர் என்றும், பொய் பேசுபவர்கள், புறம் கூறுபவர்கள், பல்வலி, நாக்கு, வாய்ப் புண், மார்பகங்களில் கட்டி, முகத்தில் புற்று நோய் ஆகிய நோய்களால் அவதியுறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்களைக் காம இச்சையுடன் பார்ப்பது, பார்க்கக் கூடாதவற்றைப் பார்ப்பது ஆகியவை 96 வகையான கண் நோய்களை உண்டாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊர்வசி ரசவாத சிட்கா என்னும் நூல் கர்மவினைக் கோட்பாட்டின் படி அறிந்தே செய்கிற வினைகளுக்கும் அதன்பின் வருகிற நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுகிறது.
கீழே சொல்லப் பட்ட செயல்களில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ செய்தால் செய்தவன் நோய்வாய்ப் படுவான்; எந்தத் தேவையுமின்றி இளந்தளிர்களைப் பறித்தல், செடிகளை வெட்டுதல்; நீர் வாழ்வனவற்றை நீரிலிருந்து அகற்றி வெயிலில் காய விடுதல்; ஊர்வனவற்றையும் நடப்பவனவற்றையும் பாதை மறித்து இடையூறு செய்தல்; பறப்பனவற்றைக் கவண் வீசித் தாக்குதல்; தன்னைவிட மூத்த பெண்ணைப் புணர்தல், மாத விடாய்க் காலத்தில் புணர்தல்; மிதமிஞ்சிய கட்குடி; காலையோ மாலையோ, ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்பது; எல்லாவற்றிலும் அதீதமான ஈடுபாடு; யோகிகளையும் பெரியவர்களையும் அவமதிப்பது; இரவில் தனியாக நடத்தல்; தன் ஆற்றலைத் தானே ஐயுறுதல், இன்னபிற, இவையெல்லாம் காய்ச்சல், மலேரியா, தலை சுற்றல், மூலம், முடக்குநோய், தொழுநோய், சர்க்கரை நோய், இரைப்பு நோய், வயிற்று அழற்சி, சோகை, காமாலை. நச்சுக் காய்ச்சல், சிறுநீரகக் கோளாறு முதலிய நோய்களில் கொண்டு போய் விடும். கொடிய வினைகள் செய்யச் செய்ய மேற்சொன்ன நோய்களின் பட்டியல் நீளும்.
சுர நூல் என்கிற தமிழ் நூல் ஜுரங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்த நூலில் கோள்கள், நக்ஷத்திரங்களின் தசாபுக்தியால் எவ்வாறு உடல் பாதிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இருபத்தி ஏழு நக்ஷத்ரங்களைப் பற்றிய குணாதிசயங்களையும் அவை எவ்வாறு மனித உடலில் தோன்றும் ஜுரம் போன்ற வியாதிகளுக்குக் காரணமாக அமைகின்றன என்றும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சித்தர்களின் தத்துவமான அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது என்ற அடிப்படையில், நோய்க்குக் காரணம் கிரஹங்களின் அமைப்பு என்று கூறுகிறது.
இது சித்தர்களின் மற்றுமொரு கருத்துக்கு ஒத்து உள்ளது. சித்தர்கள் கிரஹங்கள் பற்றியும் மருத்துவம் பற்றியும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரஹங்கள் அமைப்புக்கும் அவருடைய வியாதிக்கும் ஒரு நேரடித் தொடர்பு உண்டு என்று சித்தர்கள் கருதினார்கள். எப்படி மருத்துவத்தில் வல்லவர்களோ அதே போல் சித்தர்கள் சோதிட சாத்திரத்திலும் வல்லவர்கள். அகத்தியர் கரும சூத்திரம்-44 என்னும் சித்தர் நூல் ஒன்று உள்ளது. ஒரு குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு அதன் ஜாதகப்படி அந்தக் குழந்தை அதன் ஆயுட்காலத்தில் சந்திக்க இருக்கிற நோய்கள், இடையூறுகள், அவற்றின் தன்மை, குணாதிசயங்கள், வாய்ப்புகள், அவற்றிற்கான பரிகாரங்கள் ஆகியவற்றைப் பற்றித் துல்லியமாகக் கூற முடியும் என்பதை இந்த நூல் கூறுகிறது. பிறந்த நேரத்தைச் சரியாகக் குறித்துக் கொடுத்தால் ஒரு மனிதனின் தன்மை, குணாதிசயங்கள், வரக்கூடிய வாய்ப்புகள், நோய்கள் ஆகியவை பற்றிச் சரியாகக் கூற முடியும் என்று இந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனைப் பற்றிய கணிப்பு அவனுடைய பிறந்த நக்ஷத்திரம், அன்று இருந்த கிரகங்களின் நிலை, மேஷ இராசியிலிருந்து மீன இராசி வரை இராசி மண்டலத்தையும், லக்னத்தையும் துல்லியமாகச் சித்தர்களால் கணக்கிட்டுக் கூறமுடியும் என்று இந்த நூல் கூறுகிறது. அதே போல் அந்த அந்த இராசியில் பிறந்தவர் எத்தகைய நோய்களால் பீடிக்கப்படுவார்கள் என்றும் முன்கூட்டியே சித்தர்களால் கூற முடியும் என்று இந்த நூல் கூறுகிறது.
நோய்கள் பற்றியும், அதனைக் குணப்படுத்துதல் பற்றியும், ஒரு மனிதனின் ஆரோக்ய நிலை பற்றியும் அறிய சித்தர்கள் கீழ்வரும் நான்கு முறைகளைக் கடைப்பிடித்தனர்.
1.சாத்திரச் சான்றுகள்
2.நேரடி அனுபவம்
3.அனுமானம்
4.சோதனை முறைகளினால் அறியப்பட்ட சான்றுகள்
இந்த நான்கு முறைகளையும் உபயோகித்து அவர்கள் கீழ்வரும் ஆராய்ச்சி அறிவினைப் பெற்றனர்:
1. 500 வகைக்கு மேற்பட்ட வியாதிகளின் தன்மைகள்.
2. 2000க்கும் மேற்பட்ட மருந்துகளின் தாவர, மருத்துவக் கூறுகள் பற்றிய அறிவு.
3. 15000க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்புகள், அவற்றின் பல வகைக் கூறுகள்.
4. பலவகைப்பட்ட மருந்துகளின் தாவர, உலோகக்கூறுகள், அவற்றைச் சுத்தப்படுத்தி, அவற்றின் உயிரகத்தன்மை அறிதல்.
5. இடங்களைக் பொருத்து பருவநிலைக்கேற்ப நோய்கள் பற்றிய கட்டுப்பாட்டு முறையும், உடல் ஆரோக்ய முறைகளையும் பற்றிய அறிவு.
மேற்கண்ட முறைகளைக் கொண்டு சித்த மருத்துவத்தில் நோய்களும் அவற்றை நீக்கும் மருத்துவச் செயல்பாடுகளும் கீழ்வருமாறு அறியப்பட்டன.
1. நோய்க்கான காரணங்கள்
2. பஞ்ச பூதங்களின் தன்மைகள்
3. ஆறு பருவ காலங்கள், அவற்றின் தன்மைகள்
4. கிரகங்களினால் ஏற்படும் மன நோய்கள்
5. நோய்களின் வகைகள்:
5.1. பால்வினை நோய்கள்
5.2. ஆகாரக் கோளாறினால் வரும் நோய்கள்
5.3. உள்புற, வெளிப்புறக் காயங்களினால் தோன்றும் நோய்கள்
5.4. விஷக் காய்ச்சல் நோய்கள் (சான்றாக பன்றிக் காய்ச்சல் ப்ளூ போன்றவை)
5.5. மாதவிடாய் நோய்கள்
5.6. பரம்பரை நோய்கள்
5.7. தொற்று நோய்கள்
இத்தகைய மருத்துவ அறிவைக் கொண்டு சித்தர்கள் தங்கள் மருந்துகளை உருவாக்கினர். அவற்றில் சில:
1. செந்தூரம் (உலோக வேதிப் பொருள்)
2. ரசச் செந்தூரம் (பாதரச வேதிப் பொருள்)
3. பற்பங்கள் - சான்றாக சாதிலிங்கப் பற்பம், காரீயப் பற்பம்
4. சுரக் குளிகைகள்
5. திரவ மருந்துகள்
6. மருந்து உப்புகள், சான்றாக வெடியுப்புகள்
7. மெழுகுகள் (சான்றாக வீர மெழுகு, ரச மெழுகு முதலியன)
8. லேகியங்கள்
9. வடகங்கள் (மூலிகை மற்றும் நறுமணச் சரக்குகள் - (spices) சான்றாக சாதிபத்ரி வடகங்கள்.
10. செய நீர் (எலுமிச்சை+நவச்சாரம் சேர்ந்த கலவை)
வீர சுண்ணம் என்கிற மருந்தைக் கொண்டு யூகி முனிவர் ஒரு கருங்காக்கையை வெள்ளைக் காக்கையாக மாற்றியதாக ஒரு கதை கூறப்படுகிறது.
சித்தர்கள் தங்கள் மருந்துகளை பற்பம் (பவுடர்) என்றும், லேகியம் என்றும், செந்தூரம் என்றும், எண்ணைய் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
இது தவிர கற்பம் என்பது சித்த மருத்துவத்திலேயே உள்ள ஒரு தனிப் பெயர். கற்பம் என்பது உடலை ஆரோக்யமாகவும் நீண்ட நாள்கள் வீர்யத்துடனும் வைக்கும் ஒரு மருந்து. மூலிகைக் கற்பம், காய கற்பம், நவநீத கற்பம், செந்தூரக் கற்பம், வெண் சாரைக் கற்பம் என்று கற்பத்தில் பல வகை உண்டு. காய கற்பம் என்பது உடலை என்றும் அழியாமல் வைக்கும் ஓர் அமிர்தம். இது உடல் உறுப்புகள் சீரழிவைத் தடுத்து, உடலைப் பொன் போல் வைத்துக் கொள்ள உதவும் கற்பமாகும். உடலின் அழகைக் கெடாமல் காப்பது நவநீத கற்பமாகும். செந்தூரக் கற்பம் என்பது உடலுக்கு உறுதி கொடுக்கும் ஓர் உயிரகை (oxide), வெண் சாரைக் கற்பம் என்பது முப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
சித்தர்கள் நாடி பார்ப்பதில் சிறந்தவர்கள். அகத்தியர் நாடி சாத்திரம் எனும் நூல் இது பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது. வாயுக்களின் வகைகளையும் (10 வகைகள்) அவற்றின் தன்மைகளையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல் அகத்தியர் குறுநாடி-300 எனும் நூல். அகத்தியர் கர்ப்ப சூத்திரம்-16 எனும் நூலில் கருத்தரித்தல் முறை பற்றியும், கருத்தரிக்கா திருப்பதற்கான காரணங்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறது. கருவில் குழந்தை வளரும் ஒவ்வொரு நிலை பற்றி இந்த நூல் மிகவும் விரிவாகக் கூறுகிறது. நிஹ்ஸீணீநீஷீறீஷீரீஹ் என்ற தற்காலப் பெண் மருத்துவ முறை தோன்றும் முன்பே சித்தர்கள் இது பற்றித் துல்லியமாகக் கூறியுள்ளது மருத்துவ உலகையே வியப்படையச் செய்துள்ளது. நயன சாத்திரம் என்னும் நூலில் கண்பற்றியும் அவற்றில் தோன்றும் வியாதிகள் பற்றியும் நுணுக்கமாகக் கூறப் பட்டுள்ளது.
அகத்தியர் குறுநாடித் திறவுகோல்-36 எனும் நூல் வர்மக் கலை பற்றிப் பேசுகிறது. நம் உடலில் வர்மம் எனும் நுண்ணிய குறியிடங்கள் உள்ளன. இந்த வர்ம இடங்கள் மறைபொருள் புள்ளிகள். நம் உடலில் இத்தகைய வர்ம இடங்கள் 108 உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு. இந்த வர்ம இடங்கள் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேளையிலும், காலை, பகல், மாலை, சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் என்று வேளைக்கு வேளை வித்தியாசப்படும் நுண்ணிய இடங்கள். நோயைக் கண்டறியவும், அந்த நோயைத் தீர்ப்பதற்கு உரிய வைத்திய முறையையும் இந்த வர்ம இடங்களைத் தொட்டு அறிய முடியும் என்கிற வர்மக் கலையை அக்கலையை அறிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
சித்தர்கள் மருத்துவத்தைக் கீழ்வரும் எட்டு துறைகளாகப் பிரித்து அறிந்தார்கள்: அறுவைச் சிகிச்சை, கழுத்துக்கும் அதற்கு மேல் புறத்திலும் தோன்றும் வியாதிகள், சரியான மருந்துகள், மனம் சம்பந்தப் பட்ட வியாதிகள், குழந்தை மருத்துவம், நஞ்சூட்டாய்வு மருத்துவம், நீடூழி வாழ்வு மருத்துவம், சத்து மருந்து ஆகியவை. சுற்றுச் சூழல், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றின் தாக்கம் இவை உடல் நலத்திற்கும், மருத்துவ முறைக்கும் மிகவும் இன்றியமையாத கூறுகள் என்று சித்தர்கள் அறிந்திருந்தனர். சித்த மருத்துவக் கொள்கையின்படி மனித உடலில் ஏழு வகையான தாதுக்களும், மூன்று வகையான தோஷங்களும் அமைந்துள்ளன. ஏழு வகைத் தாதுக்களாவன: நிணநீர், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்கிலம். மூன்று வகை தோஷங்களாவன: வாதம், பித்தம், கபம். இந்த தாதுக்களையும், தோஷங்களையும், யோகமுறையினால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கண்டறிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களைப் பொறுத்த மட்டில் உடம்பில் பல்வேறு மண்டலங்கள் ஒன்றோடொன்று இயைந்து செயல்பட்டால் உடல் நலமாயிருக்கிறது என்று பொருள். அம்மண்டலங்களாவன: நரம்பு மண்டலம், சுரப்பி மண்டலம், மூச்சு மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியன. மருந்துச் சரக்குகளை ஆண் சரக்கு, பெண் சரக்கு என்று வகைப்படுத்தும் தன்மையும் சித்த மருத்துவத்தில் காணப்படுகிறது. மருந்து காலாவதியாகும் நேரங்களும் சித்தர்களால் வரையறுக்கப் பட்டிருந்தன. சில சித்த மருந்துகள் ஐந்து நூற்றாண்டுகள் வரையிலும் கூடக் கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மை உடையவை. நோய் கண்டறியும் முறைகளில் (Diagnostic methods), மருத்துவரின் நோய் கண்டறியும் மதி நுட்பம், நோயாளியைப் பரிசோதித்தல், அவரைக் கூர்மையாக கவனித்தல், நாடித் துடிப்பு கண்டறிதல், அவருடைய நோய் பற்றிய வரலாறு (clinical history) ஆகியவை பற்றியும் சித்த நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நோயாளிகளின் வாழ்க்கை முறையும், அன்னாரின் உணவுப் பழக்கங்களும் சித்த மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் உணவு முறைக்கு முக்கிய இடம் உண்டு. இதுவே பத்தியம் எனப்படும்.
சித்த மருத்துவத்தில் நோயற்ற வளமான வாழ்வு என்பது நோயின்றி வாழ்வது மட்டுமன்றி, சமூக, சுற்றுச் சூழல், மனநிலை ஆகியவற்றையும் சார்ந்தது. நோயைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல் நோயே வராமல் தடுப்பதற்கும் சித்த மருத்துவம் வழி சொல்லித் தருகிறது. அதற்குச் சான்று கீழ் வரும் தேரையர் பிணியணுகா விதி என்ற சித்த மருத்துவப் பாடல்:
உண்பதிரு போதொழிய மூன்றுபொழு துண்ணோம்
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்
பெண்ணுறவு திங்களொரு காலமன்றி மருவோம்
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்
நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!

No comments:

Post a Comment