Sunday, April 26, 2015

குழந்தை தெய்வங்கள்

குழந்தை தெய்வங்கள்
முனைவர் ஹெச். பரமேஸ்வரன், திருவனந்தபுரம்
ஹிந்து மத வழக்கப்படி, மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நால்வரும் நமது வணக்கத்திற்குரிய தெய்வங்களாகக் போற்றப்படுகிறார்கள். இந்த வரிசையில் தாய்க்குத்தான் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. தெய்வத்திற்குக்கூட நான்காம் இடம்தான் அளிக்கப்பட்டுள்ளது.
தாய், தந்தை, ஆசான், ஆண்டவன் ஆகிய நால்வரும் சேர்ந்துதான் ஒரு மனிதனை முழு மனிதனாக உருவாக்குகிறார்கள். மனிதனுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த நால்வர் ஆற்றும் பங்கு வெகுவாகப் போற்றத் தகுந்தது. ஆயினும், தாய்தான் தன் குழந்தை நன்கு வளர்ந்து உருவாகவேண்டும் என்று கவலை கொள்வதோடு மட்டுமன்றி அதன் படிப்படியான வளர்ச்சியைக் கண்டு பெருமிதமும் அடைவாள். இந்தப் பேறு மற்றெவருக்கும் கிட்டாது.
முதன்முதலாக குழந்தை சிரித்து மகிழ்கிறது, தவழ்ந்து விளையாடுகிறது, உட்காருகிறது, நிற்க முயலுகிறது, பிறகு மெதுவாக நடக்கிறது. நிற்பதில் வெற்றி கண்டவுடனேயே தன் பெருமிதத்தை தன் புன்சிரிப்பினால் வெளிப்படுத்துகிறது. காலைத் தூக்கி வைத்து நடக்க முற்படுகிறது. தடால் என்று விழுகிறது. பல முறை விழுந்துவிட்டு தை, தை என்று நடக்கிறது. இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். குழந்தை, நடந்து வெற்றி காண்பதற்கு தாய் அளித்து வரும் ஊக்கம் விலைமதிக்க முடியாத ஒன்று. தன் குழந்தை தானாகவே நடப்பதைக் காணும்பொழுது, அந்தத் தாய் அடையும் மகிழ்ச்சியும் வருணிக்கவியலாத ஒன்று.
இராமனும், கிருஷ்ணனும் இந்தியர்களின் அன்புக்குரிய குழந்தைத் தெய்வங்கள். கோசலையும், யசோதையும், இந்த அன்புத் தெய்வங்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் செய்த ஒவ்வொரு செய்கைகளையும் நேரில் கண்டு பெருமிதம்கொண்ட பாக்கியசாலிகள்.
ஒவ்வோர் இந்திய மொழியிலுமுள்ள பக்தி இலக்கியத்திலும் இவ்விரு தெய்வங்களுடைய குழந்தைப் பருவம் மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சக்கரவர்த்தித் திருமகனான இராமன், மனித நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து காட்டிய தெய்வம். கிருஷ்ணனோ ஒரு சாதாரண மனிதனின் குணநலன்களைக் கொண்டு எளிமையாக வாழ்ந்து காட்டி மக்கள் மனங்களைக் கவர்ந்த தெய்வம். அதனாலேயே, குழந்தைத் தெய்வங்களுள் கிருஷ்ணனுக்கு அதிக மதிப்பு அளிக்கப்படுகிறது.
தீபாவளி கொண்டாடும் இனிமையான நற்றருணத்தில், துளஸிதாஸரின் இராமனையும், ஸூர்தாஸரின் கிருஷ்ணனையும் சற்றே காண்போம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எனவே, ஒரே ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இவ்விருவரும் தங்கள் தாய்மார்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து அவர்களை எவ்வாறு பெருமிதப்படச் செய்தனர் என்பதைக் காண்போம்.
துளசிதாசர், இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறியதும், பெரியதுமாகப் பல படைப்புகளைச் செய்துள்ளார். அவற்றுள், இராமசரிதமானஸ் என்பது ஸம்பூர்ண இராமாயணம். அவர் எழுதிய கீதாவலியில், இராமாயணத்திலுள்ள மிக முக்கியமான, மனத்தைத் தொடும்படியான பல நிகழ்வுகளை, படிப்பவர் மனத்தைக் கவரும் வண்ணம் கவிதைகளாக வடித்துள்ளார்.
முகம் நோக்கிச் சிரிக்கும் பருவம், தவழ்ந்து விளையாடும் பருவம் ஆகியவற்றைக் கடந்த நிலையில் இருக்கும் குழந்தை இராமன், இன்று காலைத் தூக்கி வைப்பான், நடப்பான் என்று ஆர்வத்துடன் அன்னை கோசலையும், பணிப்பெண்களும், எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவன் காலைத் தூக்கியவுடனேயே காலில் சலங்கையை மாட்டி, அவனை நடுவில் நிறுத்தி, சிறிது இடைவெளிவிட்டு வட்டமாக அமர்ந்திருந்தார்கள்.
துளசி தாஸருக்கு அவசரம். அவர் பாடிவிடுகிறார்.
குழந்தை இராமன், டுமக், டுமக் (தப், தப்) என்று காலை மிதித்து நடக்கிறான். சலங்கைக்கோ அதைவிட அவசரம். அது கிலு, கிலு என்ற ஒலியை எழுப்பிய வண்ணம் இருக்கிறது.
‘கிலுகிலாத உடத தாய்
கிரத பூமி லடபடாய
தாய மாத கோத் லேத்
தஸரத் கீ ரனியா‘
கிலு, கிலுவென்று ஒலி எழுந்ததுமே, இராமன் கீழே விழாதவாறு அவனைப் பிடித்துக்கொள்ள வேண்டுமே என்றெண்ணி தாதிப் பெண்கள் அவசர அவசரமாக எழுந்துவிட்டனர். இராமனுக்கோ அதைவிட அவசரம். டப்,டப் என்று இரண்டு அடிகள் எடுத்து வைத்து விழுந்தும் விட்டான். தாதிப் பெண்ணும், தசரதனின் இராணி கோசலையுமாக அவனைப் பிடித்து மடியில் கிடத்திக் கொண்டார்கள். இந்த அழகான காட்சியை சிறிது கற்பனை செய்து பாருங்களேன்.
‘அஞ்சலரஜ அங்கதாரி
விவித பாந்தி ஸே துலாரி
தன, மன, தன, வாரி, வாரி
கஹது ம்ருது வசனியா’
இராமன் உடலில் படிந்த புழுதியை, புடைவைத்தலைப்பில் வாங்கிக்கொண்டு, தங்கள் மனம், மெய், பொருள், அனைத்தையும் இராமனுக்கு அர்ப்பணம் செய்து, கனிவான சொற்கள் பேசி அனைவரும் கொஞ்சி மகிழ்ந்தார்கள்.
‘துளஸிதாஸ் அதி அனந்த
நிரகி கே முகாரவிந்த
த்ரிபுவன சபி தேத் மார்
ரகுவர சபி பனியா’
துளஸிதாஸர் இந்தக் காட்சியைத் தன் மனக்கண்ணால் கண்டு, “இராமனுடைய தாமரை முகத்திற்கீடான மற்றொரு முகத்தை மூவுலகிலும் காண முடியாது” என்று கூறி மகிழ்ச்சியடைகிறார்.
‘ரகுபர கே சபி ஸமான்
ரகுபர சபி பனியா’
இராமனுடைய அழகிற்கீடாக இராமனுடைய அழகையே குறிப்பிட முடியும். ஒப்பற்ற அழகுடையவன் இராமன் என்று பொருள் கொள்ளும் விதத்தில், தென்னிந்தியர்கள் தங்கள் பஜனைப் பாடலை மாற்றி அமைத்துள்ளனர் .
அரசகுமாரன் இராமனின் வளர்ச்சியில், அன்னை கோசலைக்கீடான பங்கு அவரது பணிப்பெண்களுக்கும் உண்டு என்று கூறி அரசகுல வழக்கத்தை எடுத்தியம்புகிறார் துளஸிதாஸர். அதுபோன்றே குழந்தை விளையாடுவதனால் உண்டாகும் பெருமிதம் அரசிக்கு மட்டுமன்றி பணிப்பெண்களுக்கும் உரித்தானது என்றும் கூறுகிறார்.
கோசலை மைந்தனாகிய இராமனை துளஸிதாஸர் எவ்வாறு வருணித்துள்ளார் என்பதைக் கண்டோம்.
இப்பொழுது யசோதா நந்தனனாகிய கண்ணனை ஸூர்தாஸர் எவ்வாறு வருணிக்கிறார் என்று பார்ப்போமா?
கண்ணனுடைய பரம பக்தரும், இளமையிலேயே நன்றாகப் பாடும் திறமை பெற்றவரும், பிறவிக் குருடருமான ஸூர்தாஸ் தன்னைக் கரையேற்றும்படி கண்ணனை வேண்டி அழுது பாடிக்கொண்டு அலைந்தாராம். அப்பொழுது அவரிடம் அவரது குருநாதர் கேட்டாராம்.
‘ஸூர்! ஐஸோ கிகியாத் க்யோங்
ஸகுண லீலா பத் காவோ’
‘ஏனடா இப்படி அழுகிறாய் ஸூர்? கண்ணனின் லீலைகளைப் பாடக்கூடாதா?’என்றாராம். அதற்கு ஸூர்தாஸ் ஒரே வார்த்தையில்
‘எனக்குத் தெரியாதே குருநாதா’ என்று பதிலளித்தாராம்.
‘தெரியாதா? இப்படிவா, நான் சொல்கிறேன். கேட்டுக்கொள்’ என்று கூறி ஒரே இரவில் கண்ணனின் முழு வரலாற்றையும் கூறி முடித்துவிட்டாராம். ஸூர்தாஸர் தன் குருநாதர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார். அவை ‘ஸூர்ஸாகர்’ என்ற புத்தகத்தில் அடங்கியுள்ளன.
நாம் அன்புடன் ‘கண்ணன்’ என்றழைக்கும் கிருஷ்ணனை, ஹிந்தி மொழி பேசுபவர்கள் ‘கான்ஹா’ என்றழைக்கின்றனர்.
பொதுவாக, குழந்தை அடி மேல் அடி வைத்து நடக்கத் தொடங்கும்பொழுது, தாய் மிகுந்த பெருமிதத்துடன் அதனிடம் ‘தை தை’ என்று கூறி மேலும் மேலும் முன்னேற ஊக்குவிப்பாள்.
ஸூர்தாஸரின் ‘கான்ஹ சலத் பக த்வை த்வை தரனீ’ எனத் தொடங்கும் பாடல் பெரும் பாலும் தென்னிந்திய பஜனைகளில் பாடப்படுகிறது. குட்டிக் கண்ணன் தன் கால்களை தை தை என்று வைத்து நடந்து வருவதை இது வருணிக்கிறது.
நந்தகோபரின் கரனீ (இல்லத்தரசி) எந்தக் காட்சியைக் காண இத்தனை நாள்களாக ஏக்கத்துடன் காத்திருந்தாளோ அந்த ஆசை இன்று நிறைவேறிவிட்டது .
துளஸிதாஸர், தன் இராமனின் கால்களில் சலங்கை அணிவிக்க வைத்ததைப் போன்றே ஸூர்தாஸும் தன் கண்ணனின் கால்களில் சலங்கை அணிவிக்க வைத்துவிட்டார்.
‘ருனக் ஜுனக் நூபுர பாஜத்
பக் யஹ் அதி ஹை மன ஹரனீ’
பைட்ஜாத் புனி உடத் துரத் ஹீ
ஸோ சபி ஜாய் ன பரனீ.‘
கண்ணன் கால்களில் கட்டியிருந்த சலங்கைகள் எழுப்பிய கிலுகிலுக்கும் ஓசை, அன்னை யசோதையின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது. அவள் தன்னை மறந்து, கண்ணனைப் பார்த்துக் கொண்டும், சலங்கை ஒலியைக் கேட்டுக் கொண்டும் இருந்தாள். இந்த மெய்மறந்த நிலையில் குழந்தை எங்காவது விழுந்துவிடக்கூடாதே என்ற எண்ணம் அவள் மனத்தில் சிறிதும் எழவில்லை. ஆனால் குழந்தை கண்ணனோ, தன்னுடைய தாயும், குழுமியிருந்த மற்றவர்களும் கண்மூடித் திறப்பதற்குள், தொப்பென உட்கார்ந்து, தான் விழுந்ததை இவர்கள் யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி பெருமிதத்தோடு எழுந்து விட்டான். சரி. விழுந்து, எழுந்து புன்சிரிப்புடன் நின்ற அவனது அழகை வருணித்துவிடலாமென்றால் (ஸோ சபி ஜாய் ந பரணி) “அதைச் சொற்களால் வருணிக்க முடியாது. ஏனெனில், நான் என் அகக் கண்களால் கண்ட இந்தக் காட்சியை, ‘கண்டவர் விண்டிலர்’ என்பதற்கிணங்க மற்றவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் என்னால் வருணித்துக் கூற இயலாதப்பா” என்று ஸூர்தாஸ் கூறுகிறார்.
‘வ்ரஜ யுவதி ஸப் தேகி தகித பயி
ஸுந்தரதா கீ ஸரனீ’
அன்னை யசோதாவின் கண்ணன், கோகுலத்துப் பெண்களுடைய கண்ணனுமல்லவா? அழகு ஊற்றெடுத்துப் பெருகும் புன்சிரிப்புடன் கண்ணன் நிற்கும் அந்தக் காட்சியைக் கண்ட அவர்கள் அனைவரும் சொக்கிப் போயினராம்.
ஸூர்தாஸ் பாடலை முடிக்கும் அழகு அந்தப் பார்வையிழந்த பக்த கவியின் பக்திப்பெருக்கைப் பறைசாற்றுகிறது.
சிரஜீவோ ஜஸுதா கோ நந்தன
ஸூர்தாஸ் கோ தரணீ
‘யசோதையின் மைந்தன் சிரஞ்சீவியாக இருக்கட்டும்’ என்று வாழ்த்து கூறுகிறார்.
குழந்தைகள் நன்றாக விளையாடுவதைக் கண்டு, யார் கண்ணாவது பட்டுவிடப் போகிறதே என்று தாய்மார்கள் பயப்படுவது இயல்பு.
அன்னை யசோதையும் இதற்கு விதிவிலக்கல்லள். எனவே பெரியவர் ஸூர்தாஸ் ‘யசோதை மைந்தன் நீடூழி வாழ்க’ என்று ஆசீர்வாதம் செய்து தாயான யசோதையின் பயத்தையும் தெளிவுறச் செய்திருக்கிறார் போலும்.
அவர் இறுதியில், ‘கண்ணா! என்னையும் கரையேற்றி விடப்பா’ என்று வேண்டிக்கொள்ளவும் செய்கிறார். ஆம், ஸூர்தாஸரை மட்டுமன்றி நம் அனைவரையும் கரையேற்றும் ஆற்றல் கண்ணனைத் தவிர வேறு யாருக்கு உள்ளது?

No comments:

Post a Comment