Sunday, April 26, 2015

ரிக் வேதமும் அதில் சில காட்சிகளும்

ரிக் வேதமும் அதில் சில காட்சிகளும்
புஷ்பா தங்கதுரை
ரிக் வேதத்தில் நுழைவோம்:
இது தான் மிகப் பழைமையான உலக நூல்!
இதில் மிகச் சுவையான பகுதிகள் இருக்கின்றன.
ரிக் வேத காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படி வாழ்ந்தார்கள்? என்ன உணவு உண்டார்கள்? எந்தக் கடவுளை எப்படி வணங்கினார்கள்?
இவை பற்றி இங்கே சில காட்சிகளைத் தருகிறேன்.
ஒரு காதல் காட்சி
இது சற்று நீண்ட உரையாடல். ஆனால் சில பகுதிகளை இங்கே காண்போம்.
புரூரவா ஊர்வசி காதல்:
இது ‘ரிக் வேத’த்தின் பத்தாம் மண்டலத்தில் (அத்தியாயத்தில் 7.10.95) வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த சூக்தம் (தொகுப்பு) புரூரவா-ஊர்வசியின் உரையாடலாக ‘ரிசா’க்களாகக் (செய்யுட்களாக) கூறப்பட்டுள்ளன. இத்தொகுப்பு ‘ரிக் வேத’த்தின் இனிமையான தொகுப்புகளில் ஒன்றாகும். இங்கே சில செய்யுட்கள்:
புரூரவா: ஓ கல் மனம் கொண்டவளே! நீ உன் மனசை இங்கே ஈடுபடுத்தி நில். நாம் அளவளாவுவோம். நாம் இப்போது பேசிக்கொள்ளாவிட்டால், நம் எதிர்காலம் இன்பம் நிறைந்ததாக இருக்காது.
ஊர்வசி: நாம் பேசிக் கொள்வதால் ஆகப் போவது என்ன? முதல் காலைப்பொழுது போல் நான் உன்னருகே வந்தேன். ஓ புரூரவா! நீ உன் இல்லத்துக்குச் சென்றுவிடு. காற்றைப் போல் நான் உனக்குக் கிடைக்காதவள்.
புரூரவா: நீ இல்லாவிட்டால் என் அம்புப் பொதியிலிருந்து அம்பு எய்ய முடியாது. செல்வம் கிடைக்காது. நூற்றுக் கணக்கான பசுக்களை வெற்றி கொண்டு நான் கொண்டு வர இயலாது. வீரர்களில்லாமல் என் செயல்கள் சோபிக்காது. நீ இல்லாவிட்டால் என் வீரர்கள் வீர முழக்கமிடவும் தயங்குகிறார்கள்.
ஆரியரின் வர்ணம்:
மனிதன் தன் தேவனைக்கூட தன் சொந்த உருவத்திலேயே பார்க்கிறான். (“யதன்னம் புருஷோ ஹ்யத்தி, ததன்னம் தஸ்ய தேவதா!”) மனிதன் சாப்பிடும் உணவையே அவன் தேவனும் உண்கிறான்.
இது மட்டுமல்லாமல், “யத் ரூபஹ புருஷோ பவதி, தத்ரூபா தஸ்ய தேவதா” (மனிதன் எந்த உருவத்தில் இருப்பானோ, அவன் தேவனும் அதே உருவத்தில் இருப்பான்) என்றும் சொல்ல வேண்டும். இதேபோலவே தான் ‘ரிக் வேத’த்தில் அக்னி, இந்திரன் ஆகியோரின் உருவங்கள் வர்ணிக்கப்பட்டுள்ளன. பக்தகோடிகளின் உருவங்களும் இருந்தன.
ரிக் வேதகால ஆரியர்களுக்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த விரிவுரையாளர் பதஞ்சலியின் காலத்திலும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த பதஞ்சலியின் காலத்திலும் வர்ணம் பற்றிக் குறிப்பிடப்பட்ட விஷயங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன.
இவர்கள் “வெண்மை நிறம், புனித ஆசாரத்தைப் பின்பற்றுதல், தாமிர வண்ண, மஞ்சள் நிறக் கூந்தல் ஆகியவை அடையாளங்கள்” இதைப் பதஞ்சலி தன் மகா பாஷ்யத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கூந்தல் நிறம்:
‘இஷ்’ என்னும் ரிஷி ‘ரிக்வேத’த்தில் (5.7.7) அக்னிதேவனை வர்ணிக்கும் போது அவருடைய மீசை, தாடியை வர்ணிக்கிறார்.
அவர் மஞ்சள் நிறத் தாடியுடனும், வெண்ணிறப் பற்களுடனும் ஈடிணையற்ற மாபெரும் பலசாலியுமாக இருப்பார். அங்கீரஸ கோத்திரத்தைச் சேர்ந்த ‘வரு’என்பவர், மஞ்சள் நிற மீசை தாடியும், கூந்தலும் கொண்டு பாறையைப் போல் திடமானவர். (10.16.8)
விசுவாமித்திரர் (3.2.13) அக்னியைப் பற்றி வர்ணிக்கும் போது அது மஞ்சள் நிறமென்றார்.
“நாங்கள் அந்த அற்புதவேகங் கொண்ட பச்சை, மஞ்சள் கேசமுடைய ஒளிமயமான அக்னியை புதிய செல்வம் வேண்டித் தொழுகிறோம்.” என்று மேலும் சொல்கிறார்.
பொன்னிறக் கூந்தலுடையவர். மேகங்களைச் சிதறடிக்கும் புயலைப் போன்ற வேகமுடையவர், களங்கமற்ற ஒளிபடைத்தவர் என்றெல்லாம் கூட வர்ணிக்கிறார்கள்.
வாழ்க்கை:
“நாங்களும், மற்றவர்களும் செய்யும் வேலைகள் பல உள்ளன. தச்சு வேலை செய்பவன் தன் வேலையை விரும்புகிறான். மருத்துவன் நோய்க்கு மருத்துவம் செய்கிறான். பிராமணன் சோமபானத்தைத் தயார் செய்யும் கிருகஸ்தனை வரும்புகிறான். இந்திரனுக்காக சோமபானம் தயாராகட்டும்!”
“நான் கவிஞன். என் மகன் மருத்துவன். என் மகள் மாவரைக்கும் கருவியைச் செலுத்துபவள். பணத்தை விரும்பி பலவிதமான வேலைகள் செய்யக்கூடிய நாங்கள் பசுக்களைப்போல் ஒரே கொட்டிலில் வசிக்கிறோம்.
“சுமையை இழுத்துச்செல்லும் எங்கள் குதிரைகள். அவை நல்ல ரதத்தையே விரும்புகின்றன.
நான்கு வர்ணங்களும் எப்படி வாழ வேண்டும்?
ரிக்வேதத்தின் ஸூக்தத்தில் (செய்யுட் தொகுப்பில் 10.191) ரிஷி ஒருவர் இது விஷயத்தில் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
“நீங்கள் அனைவரும் ஒன்றாகச் செல்லுங்கள். ஒன்றாகப் பேசுங்கள். உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகவே சிந்திக்கட்டும். பழங்காலத்து தேவர்கள் ஒரே மனத்துடன் உபாசித்தது போலவே நீங்களும் ஒரே மனத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் இன்ப-துன்பங்களை ஒன்றாக அனுபவித்ததைப் போலவே நீங்களும் ஒருமனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
“இந்த ஆரிய மக்களின் மந்திரம் ஒன்றாக இருக்கட்டும். இவர்களின் அமைப்பு ஒன்றாக இருக்கட்டும். நினைப்புடன் மனமும் ஒன்றேயாக இருக்கட்டும். நினைப்புடன் மனமும் ஒன்றேயாக இருக்கட்டும். உங்களுக்காக நான் ஒரே விதமான மந்திரத்தை வரவழைக்கிறேன். ஒரே மாதிரியான பொருளை ஹோம குண்டத்தில் போட்டு ஹோமம் வளர்க்கிறேன்.”
“உங்கள் பணி சமமாக இருக்கட்டும். உங்கள் இதயங்கள் ஒரே போல் இருக்கட்டும். உங்கள் மனங்கள் அழகாக ஒன்றிணையும்படி ஒரே நிலையில் இருக்கட்டும்.”
பரத்வாஜர்:
பரத்வாஜர் என்பார் வயலையும், காட்டையும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். (61.14) அதிலிருந்து வயலும், காடும் பிரிக்கப்பட்டன என்பது தெளிவாகிறது. அவர்கள் வயலில் சவ்வரிசியையும், மற்ற தானியங்களையும் பயிரிட்டு சிறிதளவு விவசாயம் செய்து தினைமாவைத் தயாரித்து அதைத் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தார்கள். ஆயினும் அவர்களுடைய பிரதான உணவு பாலும், மாமிசமும்தான்!
அதற்காக ஒவ்வொரு குடும்பமும் ஆயிரக்கணக்கில் பசுமாடுகள் வைத்திருந்தன. இவ்விதம் வயல்களை விட, அவர்களுக்கு மேய்ச்சல் நிலங்களே முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
இச்சமயத்தில் குதிரைகள் போர்களுக்கும், சாதாரணச் சவாரிக்கும் உபயோகப்பட்டன.
வசிஷ்டர் அஸ்வமேதயாகத்தைச் செய்வித்தார் [ஐதரேய பிராமணம் 8.4.21) இதுவே அஸ்வமேதயாகம் பற்றிய மிகப்பழைய குறிப்பாகும்.
சாயமான் அப்யாவர்த்தி அரசன் இரண்டாயிரம் பசுக்களைத் தானமளித்தார். அக்காலத்தில் கோதானமும் அதிகமாகவே செய்யப்பட்டது. ஆரியர் உயர்ந்த பசுக்களையும், குதிரைகளையும் விரும்பினர்.
திவோதாஸ் என்ற அரசன் அளித்த சோமபான அரங்கங்களில், அவர் கலந்து கொண்டதாக பரத்வாஜர் குறிப்பிட்டுள்ளார். (6.16.5) அக்காலத்தில் சோமபானம் மிகவும் சாதாரணானதால், அதை ‘சோமயாகம்’ எனச் சொல்லி, அதற்கு தெய்விக உருவமளிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
விசுவாமித்திரர்: (இராமாயண விசுவாமித்திரர் அல்ல)
விசுவாமித்திரர் கூறுகிறார்: விபாஷ் நதியும், சதுத்ரி நதியும் நீர் நிறைந்து மலைகளின் அருகிலிருந்து கட்டறுத்துக் கொண்ட பெண் குதிரைகளைப் போல், அட்டகாசமாகத் தாவிக் குதித்து, தம் கன்றுகளை நக்கத் துடிக்கும் கோமாதாக்களைப் போல் கடலை நோக்கி பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன.
“ஓ இரண்டு நதிகளே! இந்திரனால் தூண்டப்பட்டு துதிப் பாடல்களைக் கேட்கும் நீங்கள் தேரோட்டிகளைப் போல் தூய்மையாகக் கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். அத்துடன் பாயும் அலைகளுடன் முன்னேறும் புனிதமானவர்களான நீங்களிருவரும் பக்கத்தில், பக்கத்தில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறீர்கள்.
என் நற்சொல்லைக் கேட்பதற்காக ஒரு விநாடி ஓடுவதை நிறுத்தி நில்லுங்கள். குஷிக் புத்திரனான நான் மனமகிழ்ச்சிக்காக பெரும் நதிகளை வரவேற்கிறேன்.
நதிகள் கூறுகின்றன: “வஜ்ராயுதம் தரித்த இந்திரன் மலையைக் கொன்று நதிகளுக்கு இடம் அமைத்தார். நற்கரங்கள் கொண்ட சவிதா தேவர் எங்களைக் கொண்டு செல்கிறார். நாங்கள் அவர் கட்டளைப்படி பரவிப் பாயந்து கொண்டிருக்கிறோம்.
விசுவாமித்திரர்: நில்லுங்கள் சகோதரிகளே! மிகத் தொலைவிலிருந்து எருது மேல் வந்துள்ள கவிஞனின் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் சற்று கீழிறங்கி சுலபமாகக் கடக்கக் கூடியவர்களாக மாறுங்கள். தேரின் அச்சாணிக்குக் கீழே இருக்கும் நீர் நிறைந்த நதிகளாக நீங்கள் ஆகுங்கள்.
நதிகள்: கவிஞனே! தூரத்திலிருந்து வரும் உன் சொல்லை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். குழந்தைக்குப் பால் கொடுக்கத் துடிக்கும் தாய், அல்லது ஆடவனுக்கு இளம் பெண்ணைப் போல, நாங்கள் உனக்காகக் கீழே இறங்கி வருகிறோம்.
விசுவாமித்திரர்: அன்பானவையே! போரிலே பசுக்களை விரும்புபவர்களும், இந்திரனால் தூண்டப்படுபவர்களுமான பரதர் உங்களைக் கடந்து சென்றால், அதற்காகத் தான் உங்களை வேள்விக்குரியவர்களாக மதித்துத் துதிப்பேன்.
பின்னர் “பசுக்களை விரும்பும் பரதர் நதிகளைத் தாண்டிச் சென்று விட்டார்கள். அதை அறிந்ததும் நதிகளை அழகாகத் துதித்தான்.”
வசிஷ்டர்:
ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தைச் சேர்ந்தவர் ரிஷி வசிஷ்டர்.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் பிரதான ரிஷிகள் இருக்கின்றனர். அவர்களுக்கும், வசிஷ்டருக்கும் ஒரு முக்கிய வேற்றுமை உள்ளது.
மற்ற மண்டலங்களை இயற்றியதிலே அந்தந்த ரிஷிகளின் புத்திரர்களும், பேரர்களும் கூட பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் ஏழாவது மண்டலத்தில் அனைத்து 104சூக்தங்களையும் படைத்தவர் வசிஷ்டர் ஒருவரே!
வசிஷ்டரின் செய்யுட்களால் அக்காலத்திய வரலாறும், நிலவியலும் தெளிவாவதைப் போல், மற்றெந்த ரிஷியின் செய்யுட்களாலும் அவ்வளவு தெளிவாவதில்லை. அதுவே வசிஷ்டரின் சிறப்பாகும்.
இவருக்கு விருப்பமான வாக்கியம் “நீ மங்கல ஆசியுடன் எப்போதும் எங்களைக் காப்பாற்று” இதை அவர் பன்னிரண்டு முறைக்கும் அதிகமாகவே தன் மந்திரங்களில் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
ஆரியர்களுக்கும் அவர்தம் ரிஷிகளுக்கும் போலவே வசிஷ்டரின் பூஜைக்குரிய தேவனும் இந்திரன் தான்.
அவனுக்குப் பின்னர், மித்திரன், சூரியன், அக்னி, விசுவதேவன், வருணன், அஸ்வித்வய, உஷா, சரஸ்வதி ஆகியோர் வருகிறார்கள். தற்போது சைவர்கள் இறந்த பின் சிவலோகமான கயிலாயத்துக்குப் போக விரும்புவதைப் போல், வைணவர்கள் வைகுந்தப் பதவி அடைய ஆசைப்படுவதைப்போல், அந்தக் காலத்தில் ஆரியர் இறந்த பிறகு ‘இந்திரலோக’த்திற்குச் செல்ல ஆசை கொண்டார்கள்.
ஆயுதங்கள்:
ரிக்வேத கால ஆரியர் தாமிரயுகத்தைச் சேர்ந்தவர்கள். சிந்து பள்ளத்தாக்கு மக்கள் அவர்களுக்கு முன்னால் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவே தாமிர யுகத்திலே வாழ்ந்து வந்தனர். இந்த செப்பு (தாமிர) உலோகத்திலிருந்தே அம்புகள், கதாயுதங்கள், கோடாலிகள் போன்ற போர்க்கருவிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆரியர்களின் அம்புப் பொதியும் நாணும் தோலாலானவை. அவர்களது கைக்கருவிகள் தாமிரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டன.
வில்; நாண்; கவசம்
பரத்வாஜரின் மகன் பாயு ஆயுதங்களை மிகவும் புகழ்ந்துரைக்கிறார். திவாதாஸ் அரசனின் புரோகிதர் (பிரதமர்) அல்லவா! தன் தந்தையைப் போலவே திவோதாஸின் போரிலே அவரும் மிகத் தீவிரமாகப் பங்கெடுக்க நேரிட்டிருக்கலாம். அவர் கவசம், வில், அம்புப்பொதி ஆகியவற்றைப் புகழ்ந்திருக்கிறார். அவர் வில்லின் நாண்பற்றிக் கூறுகிறார் (6-75-1-4).
“இந்த நாண் யுத்தத்திலிருந்து மீட்டுச் செல்ல விரும்புகிறது. நாண் இழுக்கப்படும் போது அது இனிய வார்த்தைகள் பேசுவதற்காகவே வில்லேந்துபவனின் காதோரம் வருவதைப் போலிருக்கிறது. காதலி காதலனை அணைத்து மெல்லப் பேசுவதுபோல அது காதோரம் வருகிறது.”
“வில்லின் இரு முனைகளும் எதிரியின் மேல் படையெடுக்கும்போது மகனைத் தாயைப்போல் பாதுகாக்கட்டும். அடையாளமறிந்து (திவோதாஸன்) பகைர்களை அழிக்கட்டும்.
சுதாஸ் ரிக்வேதத்தில் மாபெரும் வெற்றிகளைக் குவித்தவன். அவன் ஆயுதங்களைப் புகழ்வதில் என்ன வியப்பு! “எதிரிகளின் நாண்கள் அறுந்து விழட்டும்.” என அவன் தன் செய்யுளில் கூறுகிறான்.
பரசு (கோடாலி):
சம்ஸ்கிருத மொழியில் ‘குலிஷ்’ என்பது ஒரு போர்க் கருவிதான். இதை பரசுராமர் பெயரிலும் காணலாம். விசுவாமித்திரர் கோடாலியைக் குறித்து, “ஓ இந்திரனே! கோடாலியைக் கண்டு மரம் வருத்தமடைவதைப் போல எங்கள் பகைவர்களும் வருந்தட்டும். பருத்திச் செடி சாய்ந்து விடுவதைப் போல, அடுப்பின் மேல் ஏற்றப்பட்ட பாத்திரம் நன்றாகச் சூடேறிப் பொங்கி வழிவதைப் போல எங்கள் பகைவர்களும் வீழ்ந்து மடியட்டும்.”
ராஜாபிஷேகம் (முடி சூட்டும் விழா):
அண்மைக் காலம் வரையிலும் மகுடாபிஷேகத்தின் போது படிக்கப்பட்ட மந்திரங்கள் (சுலோகங்கள்) அங்கிராவின் புத்திரர் துருவர் இயற்றியவையாகும் (10-173).
முடி சூட்டும் நன்னாளில் மக்கள் அனைவரும் உன்னை விரும்பட்டும். நீ ராஷ்டிரத்திலிருந்து (நாட்டிலிருந்து) விலகிப் போகாதே. உன் நாடும் உன்னை விலகாமலிருக்கட்டும். மலையைப் போல உறுதியாக முன்னேறு. விலகிப் போகாதே.
“இந்திரன்போல் இங்கே நிலையாக இருப்பாயாக. இந்த நாட்டை எப்போதும் பற்றி இருப்பாயாக.
“இந்த மன்னனை வேள்விப் பொருள்களால் இந்திரன் உறுதியாகப் பற்றி இருக்கிறான்.
“இவனை சோமனும், பிரகஸ்பதியும் ஆசீர்வதித்தனர்.
“இந்த உலகமெல்லாம், நிலையானது. இந்த மக்களின் மன்னன் நிலையானவன்.
“சொர்க்கலோகம், பூமி, இந்த மலைகள் நிலையானவை.
“உன்னுடைய நாட்டை பிரகஸ்பதி தேவனும், மன்னரான வருணனும், இந்திரனும், அக்னியும் பற்றி நிற்பார்களாக.
நிலையான கோரிக்கையுடன் நாம் நிலையான சோமபானத்தைக் (வெற்றியை) கலக்கிறோம்.
இந்திரனே! எதிரிகளைப் பலி கொண்டு வருபவர்களாக எங்களை ஆக்குங்கள்!”

No comments:

Post a Comment