Sunday, April 26, 2015

உன்னை நீ ஆளக் கற்றுக்கொள்

உன்னை நீ ஆளக் கற்றுக்கொள்
பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி
ஒருவன் பெரிய தொழிற்சாலைகளையோ, தொழிற் சங்கங்களையோ நிர்வகிப்பவனாக இல்லாதிருக்கலாம். ஆனால், அவன் தன் குழந்தைகளை, உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களைச் சமாளிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறான். மனைவி கணவனையும், கணவன் மனைவியையும், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் சில தேவைகளுக்காகப் பெற்றோரையும் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒருவன் வேலை காரணமாக நிர்வாகப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் எல்லாருடைய வாழ்விலும் நிர்வாகம் (சமாளிப்பு) என்பது பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்த ஒன்றாக இருக்கிறதென்பது உண்மை. இப்படிப் பார்க்குங்கால், நாம் ஒவ்வொருவரும் நிர்வாகியே.
சிரேஷ்டன் (சிறந்தவன், தலைவன், மூத்த தன்மையோன்)
மேலாளர் என்பவர் வழிகாட்டியாகவும் இருப்பதால் அவர், மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரி மனிதராக இருந்தாக வேண்டும்.
தலைவன் (சிரேஷ்டன்) எதைச் செய்கிறானோ, அவனைப் பின்பற்றுவோர் அதையே செய்கிறார்கள். தலைவன் ஆணையை அவனைத் தலைவனாகக் கொண்ட சாமானியர்கள் நிறைவேற்றுகின்றனர்.
எவன் ஒருவனை மற்ற மனிதர்கள் தன் வழிகாட்டியாக ஏற்கிறார்களோ அவன்தான் தலைவன் எனக் கொள்ளப்படுகிறது. அந்தத் தலைவன் என்பவன் (ஆணாயினும் பெண்ணாயினும்) அவர் எல்லாம் அறிந்தவர் ஆகவும் மற்றவர்களை நடத்திச் செல்லக்கூடிய சக்தி பெற்றவராகவும் கருதப்படுகிறார். ஒரு குடும்பத்தில் மூத்தபிள்ளை ஆணோ, பெண்ணோ அவர் தன் மூத்த தன்மையால் சிரேஷ்டராகிறார். அவரை மற்றவர்கள் சிரேஷ்டராக மதிக்கிறார்கள். தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிலையங்கள் போன்ற எல்லா அமைப்புகளிலும் ஆணோ, பெண்ணோ யாரோ ஒருவர் மேலாளர், செயலர், தலைவர், ஆணையர் என்ற பெயரால் உச்ச நிலையிலிருப்பார். அவருடைய பதவியின் தகுதி சிரேஷ்டர் என்ற நிலையை அவருக்கு அளிக்கிறது.
பெரும் தொழிற்சாலைகளிலும், மற்ற பெரும் அமைப்புகளிலும், சிரேஷ்டர்களின் வரிசையை நாம் காணலாம். ஒரு பெரும் ஸ்தாபனத்தின் உயரதிகாரியாக (சிரேஷ்டராக) இருக்கும் ஒருவரிடம் அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்த பல முக்கிய பொறுப்புகளிலுள்ள பல பேர் அந்த ஸ்தாபனத்தைப் பற்றிய தங்களுடைய அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி ஓர் உயரதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பலருமே சிரேஷ்டர்கள்தான். ஏனென்றால் இப்படி அறிக்கை சமர்ப்பிப்போரின் அதிகாரத்தின் கீழ் மற்றும் அநேகம் பேர் வேலை செய்கிறார்கள். இப்படி நோக்குங்கால் ஒவ்வொரு தொழிலாளியும் தன் கீழ் வேலை செய்யும் சில மனிதர்களுக்காகவாவது சிரேஷ்டராகிறார் என்பது தெளிவு. ஆகையால் எந்த ஒருவரும் சிலருக்கேனும் சிரேஷ்டரே. ஒருவன் ஒரு பொருளாகக் கூட எண்ணக்கூடாத வேலையற்றவனாக இருப்பினும் அவன் குடும்பத்தில் சிலருக்கேனும் அவன் சிரேஷ்டனே. ஏனென்றால் அவனுடைய குடும்பத்திலுள்ள சிலராவது அவனைத் தங்கள் காரியங்களுக்கு எதிர்பார்த்திருக்கிறார்கள். சிரேஷ்டராகிய தலைவரின் செயல்களையும், வாழ்க்கை முறையையும் அவரைச் சார்ந்த அனைவரும் பின்பற்றுகின்றனர்.
பாராட்டுதலையும், கைதட்டலையும் எதிர்பாராமல் ஒவ்வொரு நாளும் பதினெட்டு மணிநேரம் வேலை செய்யும் தலைவரின் கீழ் பணியாற்றுபவர்கள் நிச்சயமாக சோம்பேறிகளாக இருக்கமாட்டார்கள். நாம் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய செயல்களைச் சீராகச் செய்து முடிக்கும் சிரேஷ்டராக இருந்தால் நம்மைச் சார்ந்தவர்களும் அவரவர் பணிகளை அவர்களாகவே செய்து முடித்து விடுவதை நாம் பார்க்கலாம்.
சிரேஷ்ட புருஷன் எதைப் பிரமாணமாக ஏற்றுக் கொள்கிறானோ, எதை அவன் உயர்ந்ததாக மதிக்கிறானோ, அவற்றை அவனைச் சார்ந்தவர்களும் ஏற்பார்கள்; மதிப்பார்கள்.
நீ இந்தப் போர்க்களத்தைவிட்டு ஓடினால், உன்னைச் சார்ந்தவர்களும் அதனையே செய்வார்கள். நீ செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டால், மற்றவர்களும் அப்படித்தான் செய்வார்கள். ஏனென்றால் நீ விரும்புகிறாயோ, இல்லையோ நீ இந்தப் பணியில் ஒரு சிரேஷ்ட புருஷன்.
நீ ஒரு நிர்வாக வேலையிலிருந்தால், மனக் கிளர்ச்சி காரணமாக மனத் தைரியத்தை இழப்பவனாகவோ, உன் தகுதியைத் தாழ்த்திக் கொள்பவனாகவோ இருக்கக்கூடாது. ஏனெனில் மற்றவர்களும் உன்னையே பின்பற்றுவர். ஓர் அமைப்பில் உயர்ந்த நிலையில் உள்ளவன் ஒரு காரியத்தை முடித்துத் தரக் கைக்கூலியாக ஒரு லட்சம் ரூபாய் வாங்குபவனாக இருந்தால் அந்த அலுவலகக் கடைநிலை ஊழியர் ஒரு கோப்பை ஒரு மேஜையிலிருந்து அடுத்த மேஜைக்கு நகர்த்த ஐந்து ரூபாயாவது பெறுபவனாகத்தானே இருப்பான்?
செய்யும் தொழிலை விருப்பத்துடன் செய்
செய்யும் தொழில் எதுவாயினும் நீ அதை விரும்பு. இல்லையெனில் உனக்கு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுத்துக்கொள். அல்லது தற்போது செய்யும் தொழிலை நேசிக்க நீ கற்றுக்கொள். அடிக்கடி மக்கள் என்னிடம் “சுவாமிஜி! என் வேலை எனக்குப் பிடிக்கவில்லை” என்பர். நான் அவரிடம் “விருப்பமில்லா இத்தொழிலை விட்டுவிட்டு வேறொரு தொழிலை நீங்கள் ஏன் செய்யக் கூடாது?” எனக் கேட்பேன். அதற்கு அவர்கள் நான் “பணத்தைச் சம்பாதிக்க விரும்புகிறேன். அது இப்பணியால் கிடைக்கிறது. நான் திருப்தியடைவது அந்தப் பணத்தால்தான். இந்தப் பணியால் அன்று” என்பர். செய்யும் தொழிலை நீ விரும்பிச் செய்யவில்லையெனில் அத்தொழில் உனக்கு எப்படி மனநிறைவு தரும்?
சிலர் எங்கிருந்தாலும், எவ்வாறிருந்தாலும் ஏதேனும் குறைபட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனக்குறைக்கும் அதிருப்திக்கும் ஏதேனும் காரணத்தைக் கண்டுபிடித்த வண்ணமாய் இருப்பர். ஆனால் அவர்களின் பிரச்னை ஆழமானது. இது அவர்களின் கடந்தகால வாழ்க்கையைச் சார்ந்தது.
சமையல், கழிவறைச் சுத்தம் அல்லது எந்தத் தொழிலைச் செய்தாலும் நீ அதில் திருப்தி காணமுடியும்.
டெல்லியில் ராஜ்பவனுக்கு முன்பு ஒரு போலீஸ்காரர் சாலையில் வரும் வண்டிகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சைகை காட்டி நிற்பார். ஒரு நாள் அவர் வாகனங்களைச் செல்லச் சொல்லிக் கைகாட்டியும் அனைவரும் வாகனங்களை அப்படி அப்படியே நிறுத்தி அவர் கையசைவையே ரசித்துக் கொண்டிருந்தனர். ஏன்? அவர் தன்பணியை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் ஓர் அற்பதக் கலையாகவே நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஒரு வழிகாட்டிப் போலீஸ்காரரின் செயல் ஓர் இயந்திர கதியில் இயங்குவது. கைகளை சில விதிமுறைப்படி அங்குமிங்குமாக அசைத்தலின்றி வேறென்ன இருக்கிறது? நான் கூட அவர்கள் தங்கள் கைகளை மேலும், கீழும், பக்கவாட்டிலும் அசைக்கும் செயல்களை நாள் முழுவதும் செய்வது கண்டு அனுதாபப்படுவதுண்டு. இப்படிப்பட்ட இயந்திர கதி செயல்கூட அச்செயலில் அவர் கொண்ட அந்தரங்க அன்போடு கூடிய ஈடுபாட்டால் அற்புதக் கலையாகிவிட்டது. ஆகையால் நாம் செய்யும் தொழிலை நாம் ரசித்தால், நேசித்தால், பிறரும் ரசிப்பர், நேசிப்பர்.
நம் மீதே நமக்கு அதிருப்தி ஏற்பட்டால் நாம் எதையும் நிர்வகிக்க இயலாது. நான் உங்களிடம் பேசுகையில், என் பேச்சில் என்னையே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் என் பேச்சைக் கேட்பதை விட்டுவிட்டு, வேறெதிலோ தான் சிந்தனையைச் செலுத்திக் கொண்டிருப்பீர்கள்.
நம் சுயமதிப்பை நாமே எடை போட நாம் அறிந்து கொள்ளவேண்டும்
ஒருவரின் அதிருப்திக்குக் காரணம் தன் சுய அதிருப்தியே தவிர, ஒருவன் ஏற்றுக்கொண்ட தொழில் அன்று. அதிருப்தி நிலையில் நாம் எதைச் செய்யினும், அதிருப்தியையே அடைவோம். எந்தத் தொழிலும் நமக்கு திருப்தியை ஏற்படுத்தாது.
உதாரணமாக, நடைமுறையில் ஒருவர் ஒரு பொறியாளர் என வைத்துக் கொள்வோம். ஆனால் அப்பொறியாளர் தொழில் அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை எனவும், உண்மையாக அவர் ஒரு நல்ல பாடகராகவும் இருக்கிறார் எனவும் கொள்வோம். அப்படிப்பட்ட பொறியாளர் பாடுவதையே தொழிலாக எடுத்துக் கொண்டிருந்தால் அதன் பின்னர் மூன்றே நாளில் அத்தொழிலிலும் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும். இப்போது பொறியாளர் பாடுவதை நாமும் ரசிக்கலாம். அவர் நண்பர்களும் ரசிப்பார்கள். ஆனால் பொறியாளர் தன் பொறியாளர் வேலையை விட்டு அவர் பாடுவதைத் தொழிலெனக் கொண்டபின் நிலைமையே மாறிவிடும். பாட்டுத் தொழிலிலும் பெரும் போட்டி ஏற்படும். அவர் பாடலைக் கேட்டு ஆரவாரிக்கும் ரசிகர்களை சில சமயங்களில் காண இயலாது. அப்பொழுது பழைய பிரச்னைகளே மீண்டும் உருவாகும். மன அதிருப்தி உண்டாகிவிடும். எனவே நமக்கு திருப்தியின்மை ஏற்படக் காரணங்கள் எவை என்பதை நாம் சிந்தித்துக் கண்டுபிடிக்க வேண்டும்.
நம் அதிருப்திக்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாம் நம்மைப் பற்றி உயர்வாகவோ, தாழ்வாகவோ ஏதோ ஒரு கருத்தை வைத்திருப்போம். சில மனிதர்கள், சந்தர்ப்பம் பாராமல் எப்பொழுதும் தங்களைப் பற்றித் தாங்களாகவே குறைபட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களை சுயபுராணம் பாடுபவர்கள் எனக் கூறவேண்டும். இப்படிப்பட்ட மக்களை இந்தியாவில் எங்கும் காணலாம். இவர்கள் மற்றவர் செய்யும் காரியத்திற்குத் தானே பொறுப்பு என்று எண்ணுபவர்கள். நாம் பொதுவாக மற்றவர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே நம் மதிப்பை உணர்கிறோம். உதாரணமாக நாம் எவரேனும் ஒருவரிடம் “நீ ஒரு தொழிலும் செய்யாதிருந்தும், ஏன் திருமணம் செய்து கொண்டாய்?” எனக் கேட்டால், “நான் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்பது தான் அவரின் பதிலாக இருக்கும். வரதட்சணை பற்றிக் கேட்டால், “எனக்கு விருப்பமில்லை என்றாலும், நான் வரதட்சணை வாங்காவிட்டால் என்னைப் பற்றி என் பெற்றோர் என்ன நினைக்கமாட்டார்கள்?” என்று மகனும், “எங்களுக்கு வரதட்சணை வாங்க விருப்பமில்லை என்றாலும், மற்றவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கமாட்டார்கள்?” எனப் பெற்றோரும் கூறுவர்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையே நாம் காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி எப்படி எண்ணினும், நாம் நம்மைப் பற்றி நாமாகவே எடுக்கவேண்டிய முடிவுகளைக் கூட மற்றவர்களின் கருத்தின் அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்குள் இருக்கும் ஒரு பெரும் பலவீனம் ஆகும். மற்றவர்கள் நம்மைப் பற்றி, மிக அதிசயமானவர் எனப் புகழ்ந்தாலும் கூட நாம் உபயோகமற்றவர், தகுதியற்றவர் என நம்மைப் பற்றி எண்ணும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாக இருக்கிறோம். எல்லாரும் ஒருவரை அதிசயமானவர் எனப் புகழ்ந்தாலும், இவர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியாது. நன்கு தெரிந்து கொண்டால், இப்படிச் சொல்லமாட்டார்கள் என தனக்குத்தானே எண்ணிக் கொள்வான்.
எவ்வளவு தகுதியுள்ளவன் என ஒருவன் தன்னைப் பற்றிக் கணித்திருக்கின்றானோ, அவ்வளவு மதிப்பு அவனுக்கு நிச்சயம் உண்டு. ஒருவரைப் பற்றிய மற்றவர்களின் எண்ணத்திற்கும், அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒருவருடைய உண்மையான மதிப்பை அளக்க தம்மைப் பற்றி அவருடைய சொந்தக் கணிப்புத்தான் அளவுகோல். சுய கௌரவத்திற்கேற்ற மதிப்பும் சுயநிலைமைக்கேற்ற தகுதியும் உள்ளவர்களில் தானும் ஒருவன் என ஒருவர் தன்னைப் பற்றி முடிவு செய்தால் அவனால் தான் செய்ய எண்ணுவதைச் செய்ய இயலும். தகுதியற்றவன் என நம்மைப் பற்றி நாம் எண்ணினால், நாம் துரதிருஷ்டசாலிகளே! அன்று இந்த வேலையில் நம்மை அமர்த்திய உயர் அதிகாரிகள் தவறு செய்துவிட்டார்கள் என்றுதான் முடிவெடுக்க வேண்டியிருக்கும். தன் கௌரவத்தையே காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒருவனால் ஏவலர்களாகிய வேலைக்காரர்களை எவ்வாறு சமாளிக்க முடியும்? ஜனங்களை நிர்வகிப்பதில் ஒருவன் தன்னை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக் கொண்டால், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவருடைய மதிப்பு ஏவலர்களிடம் தானே உயரும். அல்லாது கௌரவத்தை மக்களிடம் கேட்டுப் பெற முடியாது. இதுதான் ஜனங்களை நிர்வகிப்பதில் உள்ள தந்திரம். ஏனெனில் ஒருவருடைய வேலைத்திறமையை அவருடைய அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்கள் அறிந்து கொள்கிறார்கள். ஒரு நிர்வாகப் பதவியிலிருக்கும் ஒருவருடைய செயல்படும் முறை அவரால் எடுக்கப்படும் தீர்மானம் முதலியவற்றில் அவருடைய அறிவுத்திறன், கௌரவம், மதிப்பு முதலியவற்றில்அவருடைய சுயமதிப்பும், சுய தகுதியும் தெளிவாகின்றன. எனவே முதலில் நிர்வாகப் பொறுப்பிலுள்ள ஒவ்வொருவரும் தன் சுயமதிப்பையும் சுய தகுதியையும் தெரிந்து கொள்ளவேண்டும். மற்றவர்களுடைய மரியாதையைப் பெற ஒருவன் தன்னைத்தானே அந்த மரியாதைக்கு அருகதை உடையவனாகத் தன்செயல்களால் தன்னை ஆக்கிக் கொள்ளல் வேண்டும். இதைத் தவிர மற்றவர்களின் மரியாதையைப் பெறுவதற்கு வேறு வழியே இல்லை.
ஜனங்களை நிர்வகிப்பதில் உள்ள முறை என்ன வென்றால் நிர்வகிப்பவன் ஜனங்களிடத்தில் தனக்குள்ள மரியாதையைத் தன் அதிகாரத்தின் மூலம்பெற முயற்சிசெய்யாமல் அந்த மரியாதைக்குத் தாமே பாத்திரமாக இருக்கும்படி நாம் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். (செப்டம்பர் 2009)
ஜனங்களின் நலம் பேணல்
நாம் எந்தப் பணியாளர்களை நிர்வகிக்கின்றோமோ அப்பணியாளர்கள் மீது அக்கறை காட்டுதல் மிக முக்கியம். நாம் உபயோகிக்கும் கார் போன்றவை வெறும் இயந்திரங்கள். ஆனால் அவற்றின் மீது கூட நாம் அக்கறை காட்டினால்தான் அவை நம்மை நடுவழியில் நிறுத்தாமல் போகவேண்டிய இடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும். பணியாளர்கள் இயந்திரங்களைவிட எவ்வளவோ மேலானவர்கள். அவர்கள் பணியாற்றுவது ஒருவர் மீது கொண்ட ஆசையால் அன்று. அவர்கள் ஒருவரிடம் வேலை பார்ப்பது அவர்களுக்கு வேறு ஏதேனும் நல்ல வேலை கிடைக்காத வரைதான். மேலை நாடான அமெரிக்காவில் வேலை வாய்ப்பும் அங்கு போவதற்கு விசாவும் கிடைத்து விட்டால் ஒருவருடைய அலுவலக மேலாளர்களும் கூட வேலையை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார் என்றால் மற்ற சாதாரண வேலை செய்பவர்களும் பிரிந்து சென்று விடுவர் என்று சொல்லவா வேண்டும்? எனவே, அவர்கள் எல்லாரையும் ஒருவர்பால் ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருவருடைய அதிகாரத்தால் மாத்திரம் அவர்களிடம் தங்கள் மதிப்பை ஒருவர் பெற்றிட இயலாது. ஒவ்வொரு மனிதரையும் நம்முடைய தன்மையால்தான் நம் வசமாக்க முடியும்.
ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளம், மற்றும் சலுகைகள் போன்றவை ஓரளவிற்குத்தான் பயன்தரும். அப்படியானால் அவன் தேவைதான் என்ன? அன்புடனும் சேவை மனப்பான்மையுடனும், உன்னிடம் பணிசெய்ய ஒருவனைத் தூண்டுவது எது? அவன் நலனில் நீ கொள்ளும் அக்கறைதான் அது.
நிர்வாகப் பொறுப்புடைய ஒருவரின் அதிகாரத்திற்குட்பட்டு நிர்வாகியின் மனத்திற்கு உகந்தபடி நல்லமுறையில் திருப்திகரமாக வேலை செய்தால் அந்தத் திருப்திகரமான நல்ல முறையில் வேலை செய்பவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்தி என்ன? நல்ல முறையில் நிர்வாகியால் கொடுக்கப்படும் சம்பளமா? அல்லது சம்பளத்துடன் கூடிய மற்ற சலுகைகளா? அல்லது இவ்விரண்டினும் மேலான வேறு ஏதாவது ஒன்றா? அது என்ன? என்று விசாரித்தால் அதுதான் அந்த நிர்வாகி தன்னிடம் வேலை செய்பவர்களிடம் எடுத்துக்கொள்ளும் அக்கறை எனத் தெளிவாகும்.
நிர்வாகப் பொறுப்பிலுள்ளோர் தங்களிடம் வேலை செய்பவர்களிடம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றி இப்போதுதான் புதிதாக அதிகமாகப் பேசப்படுகிறது. நிர்வாகிகள் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு அக்கறையின் அறிகுறியாக சுற்றுலாச் செலவும், அதற்கு வேண்டிய ஓய்வு நாள்களும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சலுகை அவர்களிடம் காட்ட வேண்டிய அக்கறைக்குச் சமமாகுமா? என்றால் ஆகாது. இது மாதிரியான சௌகரியங்கள் முதலில் அக்கறையாக மதிக்கப்படும். பிறகு சில நாள்களில் இதே சலுகைகளை தங்களுடைய உரிமையாகவே அவர்கள் கருதுவார்கள். எடுத்துக்காட்டாக ஒன்று கூறுகிறேன். போனஸ், (விருப்பூதியம்) ஒரு காலத்தில் கருணைக் கொடையாகவே கருதப்பட்டது. தற்போது சம்பளத்தின் ஒரு பகுதியாகவே (போனஸ்) பணியாளர்களால் கருதப்படுகிறது. முதலாளி லாபமடைந்தானா? நஷ்டப்பட்டானா? என்றெல்லாம் எள்ளளவும் எண்ணிப் பாராமல், விருப்பூதியம் (போனஸ்) வியாபாரத்தில் தனக்குரிய பங்காகவே ஊழியர்களால் கருதப்படுகிறது. ஆக, அக்கறை செலுத்துவது என்பது பொருளாதார நிலையால் மட்டும் பூப்பதன்று. அது ஒவ்வொரு தனி மனிதனிடமும் தானே உருவாகும் ஒரு மனோபாவம்.
மேற்பார்வையிடுவது, நிர்வகிப்பது என்பது பலவிதமான அடிப்படைகளில் அமைவது. அவற்றுள் முக்கியமானது நிர்வாகி, அவருக்காக உழைப்பவர்கள், அவருடன் உழைப்பவர்கள் ஆகியோரின் நலனில் இரக்க சிந்தையுடன் கூடிய அக்கறை செலுத்துவதே. இந்த அக்கறை செலுத்தும் தன்மையும், மற்றவரின் நலனில் இரக்கமுள்ள சிந்தனையும் கடமை என்றால் என்ன என்று புரிந்து கொண்ட நல்லறிவினாலும், தொழில் அல்லது வேலைகளின் புனிதத் தன்மையை உணர்ந்ததினாலும் ஒரு நிர்வாகிக்கு ஏற்படுகிறது.
கடமையும் உரிமையும்
கடமை உணர்வு நம் சமுதாயத்திலும், நம் பண்பாட்டிலும் தொன்றுதொட்டுக் கலந்தே இருக்கிறது. நாம் நம் பண்பாட்டால் நம் கடமைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு முக்கியத்துவம் நம் நாட்டுப் பண்பாட்டைத் தவிர வேறு எந்த நாட்டின் பண்பாட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. உண்மையில் நமக்கு எந்தவித உரிமைகளும் இல்லை. கடமை நம் சமுதாய தர்மமாக உள்ளது. நம் சமுதாயம் தர்மத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அதிகாரத்தையோ, உரிமையையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. மேலை நாடுகளில் உரிமைக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உண்மையில் உரிமை என்பது கடமையிலிருந்து தான் ஏற்படுகிறது. சம்பாதிப்பது உரிமை என்றால் வரிகட்டுவது கடமையாகிறது அல்லவா? சாலையில் வாகனத்தை ஓட்டுவது உரிமை என்றால் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கும் கடமையும் உண்டன்றோ? உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்திற்கு கடமையைச் செய்யும் கட்டாயமும் உண்டு. நம்முடைய நாட்டின் சமுதாயப் பண்பாட்டில் ஒவ்வொருவரும் முதலில் தன் கடமையைச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வற்புறுத்தலாகக் கொண்டது. ஒவ்வொருவருடைய உரிமையும் கடமையினால்தான் ஏற்படுகிறது எனச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் அரசாங்கத்தில் ஒரு பிரஜை நாட்டிற்கு (அரசாங்கத்திற்கு) உரிமையாகிறது. அதேபோல் ஒரு நிர்வாகத்தை நடத்தும் நிர்வாகி செய்யும் கடமை அந்நிர்வாகத்தை நடத்த உதவி செய்யும் தொழிலாளிகளுக்கும் உரிமையாக அமைகிறது. தனி மனித வாழ்க்கையிலும் கூட கணவனின் கடமை மனைவியின் உரிமையாகி விடுகிறது. மனைவியின் கடமை கணவனின் உரிமையாகிவிடுகிறது. பெற்றோரின் கடமை பிள்ளைகளின் உரிமையாகவும், பிள்ளைகளின் கடமை பெற்றோரின் உரிமையாகவும் ஆகிவிடுகிறது. நம் சமுதாயம் இப்படித்தான் இருந்தது. இன்றும் நம்மிடையே நம் நாட்டிலே இத்தத்துவங்கள் இருக்கின்றன. நம் நாடு எந்தத் தாக்குதலுக்கும் ஆளாகாது இருப்பது நம்மிடமுள்ள இத்தத்துவங்களால்தான். இரண்டாம் உலகப் போருக்குப்பின் அநேக நாடுகள் சுதந்திரம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் ஆட்சிமுறையில் பலவிதக் கிளர்ச்சியினாலும் ரத்தக் கிளர்ச்சியினாலும் பல திடீர் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. நம் நாடு மிகப் பெரியதாகவும், மிக மகிழ்ச்சியற்றதாகவும், பல பிரச்னைகள் உள்ளதாகவும் இருப்பதால், மாற்றம் தேவைப்படும் நிலையில் இருக்கிறது. இப்படி இருந்தும் நம் நாட்டில் ஒருவித மாற்றமும், கிளர்ச்சியும் ஏற்படவில்லை. இதற்கு என்ன காரணம்? மக்கள் பல காரணங்களைச் சொல்லலாம் என்றாலும், கடமையுணர்வு நம் ரத்தத்தோடு கலந்திருப்பதுதான் உண்மையான காரணம் என்பது என் கருத்து. நாம் இதை உணர்ந்து கொள்ளவில்லை என்றாலும், கடமையுணர்வு நம்முடன் இருக்கத்தான் செய்கிறது.
தொழிலின் தூய்மை
கடமையைச் செய்வதில் உயர்வு தாழ்வு என்பது கடுகளவும் கிடையாது. ஓர் இயந்திரத்திலுள்ள பலவிதமான பாகங்களும் அவற்றின் பணிகளை எப்படி ஏற்றத்தாழ்வற்ற உணர்ச்சியின்றிச் செய்கின்றனவோ, அவற்றைப் போலவே சமுதாய உறுப்பினர்களும் உயர்வு தாழ்வென்ற உணர்வின்றி அவரவர் செயல்களை அழகாகச் செய்கின்றனர். ஒவ்வொரு வேலையும், மற்ற எந்த ஒரு வேலையையும் போன்று புனிதமானதே. இந்தியாவில் எந்தத் தொழிலும் ஓர் உன்னதமான தொழில் முறையாகத்தான் இருந்தது. ஒரு தொழிலின் சிறப்பு அத்தொழிலை எப்படி சிறந்த முறையில் செய்கிறோம் என்பதைப் பொறுத்து ஏற்பட்டதல்ல. ஆனால் தொழிலைச் செய்பவர் எந்த மனோபாவத்துடன் தொழிலை மேற்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே ஏற்பட்டது. இதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சிலரை நிர்வகிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒவ்வொருவரும் இந்த உண்மையையும் அதன் தனித் தன்மையையும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். எந்தத் தொழிலை நான் நிர்வகிக்கினும், அந்தத் தொழிலின் தூய்மையை நான் கண்டாக வேண்டும். அக்காலத்தில் ஆள்வது தங்கள் கடமை எனவும், நாட்டை ஆளும் கருவிகள்தான் தங்கள் கடமை எனவும் அரசர்கள் கருதினர். அந்த ஆட்சி உரிமை (அதாவது ஆளுனர் என்னும் கருவியாக இருக்கும்) நாட்டு மக்களால் அவர்களுக்கு முறைப்படி கொடுக்கப்பட்டதாகவும் அரசர்கள் எண்ணினர். ஆகையால் ஆளுனராக இருந்த அரசர்கள் தாங்கள் ஆளுதல் என்னும் கடமையை நிறைவேற்றுவதாக எண்ணினார்கள். அதேபோல் கடமை உணர்ச்சியுடன் அரசர்களால் ஆளப்பட்ட ஜனங்களும் தங்களுக்கு அரசினால் இடப்பட்ட கட்டளைகளை தங்களுடைய கடமையாகக் கருதி மனநிறைவுடன் செயல்பட்டனர். இதனால் ஆளும் கடமை உணர்ச்சியுடன் உள்ள அரசனும் மனநிறைவுடன் செயல்பட்டான். ஜனங்களும் தாங்கள் கடமை உணர்ச்சி உள்ள அரசனால் ஆளப்படுகிறோம் என்ற மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர். ஆதலால் ஒவ்வொரு தொழிலிலும் உள்ள மதிப்பையும், அதிலுள்ள சிறப்புத் தன்மையையும் ஒருவர் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் மேற்பார்வையில் பணியாற்றும் தொழிலாளிகள் தாங்கள் செய்யும் தொழிலில் உள்ள பெருமையையும், தங்களுடைய முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்களாகச் செய்ய வேண்டும். என்னிடம் வேலை செய்யும் ஒவ்வொருவரும் ஆணையிடப்பட்டால் அந்த வேலையைச் செய்ய ஆவலுடன் எப்போதும் சந்தர்ப்பம் பெறுவதற்காக எதிர்நோக்கியுள்ளார்கள். ஆகையால் இத்தருணத்தில் நான் இதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்லத் தகுதியுள்ளவனாகிறேன் எனக் கருதி சில வார்த்தைகளை மேலும் சொல்லுகிறேன்.
நமக்குக் குற்றேவல் செய்பவர்கள் கூட நம்மைவிட தாழ்ந்தவர்கள் அல்லர் என்பதை நாம் உணரவேண்டும். அப்போது தானாகவே மனித அபிமானம் நம்மிடம் உண்டாகும். இந்த மனித அபிமானம் நம் மனத்தில் குடிகொண்டால்தான் நாம் நம்மிடம் பணியாற்றும் மனிதர்களாகிய பணியாட்களுடன் உண்மையான தொடர்பு கொள்ள முடியும். இதனை நாம் முக்கியமாகக் கருதுகிறோம்.
நான் பல நிறுவனங்களை நிர்வகித்திருக்கிறேன். இன்றும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன். இது மற்றவர்களை நான் நிர்வகிப்பதைக் குறிக்கிறது. நான் வெற்றிகரமாக நிர்வகிப்பவன் என என்னைப் பற்றி நினைக்கிறேன். என்னுடன் வேலை பார்ப்பவர்கள் என்னைப் பற்றிக் குறை கூறியதும் கிடையாது. அவர்கள் எனக்கு எதிராக எதனையும் செய்தலும் இல்லை. தாங்கள் செய்யும் வேலைக்கு எதிர்மாறாகவும் எதையும் செய்வது கிடையாது. அவர்கள் என்னால் கொடுக்கப்பட்ட எந்த வேலையையும் மகிழ்ச்சியாக ஏற்று மகிழ்ச்சியுடன் செய்து முடிக்கிறார்கள். தகுதியால் உயர்ந்தவர் என என்னைச் சிலர் எண்ணினும் எனக்கு உயர்வு மனப்பான்மை இல்லாததால் மற்றவர்களை நிர்வகிப்பது எனக்குச் சுலபமாகிறது. மேலும் அவர்களை நான் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளேன். நான் அவர்களைப் புரிந்து கொண்டேன் என்பதையும் அவர்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். அவர்கள் தங்களை என்னுள் ஒருவர் என உணர்வதால், உயர்வு தாழ்வு மனப்பான்மை இல்லை; குழப்பமும் இல்லை.
அவர்களை நீ புரிந்து கொண்டாய் என்பதை அவர்களுக்குப் புரியச் செய்ய வேண்டும்
உனக்காக உழைப்பவர்கள், உன்னுடன் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகாத முறையில் உன்னால் அவர்களிடம் நடந்து கொள்ள முடியுமா? அவர் உன் செயலர், அல்லது உன் உயரதிகாரி அல்லது பணிபுரியும் சாதாரணத் தொழிலாளி என எவராக இருப்பினும் அவர்களுக்கு உயர்வு தாழ்வு மனப்பான்மை உருவாகாவண்ணம் உன்னால் பழக முடியுமா? நான் என் தலைவனுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்னும் எண்ணம் அவர்களுக்கு உருவாகாது நீ நடந்து கொண்டால் நீ ஒப்பற்ற நிர்வாகி ஆகிவிடுவாய்.
ஏனென்றால் அவர்கள் உனக்காக எதனையும் செய்வார்கள். மனித இனம் ஒரு மானிட இனமே. பணத்தால் மனித இனத்தை விலைக்கு வாங்கிவிட முடியாது. ஒருவர் ஆணோ, பெண்ணோ உன்னைப் புரிந்து கொண்டால், அவர்களுக்கு மனநிறைவு உண்டாகிறது. அவர் தம் சுயநிலையையும், சுய மதிப்பையும் உணர்ந்து கொள்ளுகிறார். நீ மற்றவர்களைக் கண்ணியக் குறைவாக நடத்தாதிருந்தால், அவர்கள் உன் முன்னால் தாங்கள் உயர்த்தப்பட்டவர்களாகவே உணர்கின்றனர். நான் இதுவரையிலும் என் சொற்பொழிவுகளின் போது என் சொற்பொழிவுகளுக்கு வந்தவர்களுக்கு என் கருத்துகளைப் புரிய வைப்பதை மிகத் திறமையுடன் செய்து வருகிறேன். என் பேச்சைக் கேட்க வேண்டும் என்று தயார் நிலையில் வராதவர்களிடம் கூட என் கருத்துகளைக் கூறி அவர்களையும் புரிந்து கொள்ளும்படி செய்து வெற்றி கண்டிருக்கிறேன். இதன் காரணம் உங்களுக்குத் தெரிகிறதா? என் சொற்பொழிவுக்கு வந்த அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களை என்னிலும் தாழ்ந்தவர்களாக நான் ஒருபோதும் கருதுவது கிடையாது. என் மாணவர்களில் எவரையும் நான் தாழ்வாக மதிப்பிடுவதில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கும் திறமை உண்டு என நம்புகின்றனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு அத்திறமை இல்லாதிருப்பினும் நாளடைவில் அவர்கள் நல்ல திறமையாளர்களாகின்றனர். இதுதான் கருத்துகளைப் பரப்ப இணையற்ற வழி. நீ உன் பேச்சுகளைக் கேட்க வந்துள்ள கூட்டத்தினருக்கு மதிப்பளித்தால், அவர்கள் உன்னைப் புரிந்து கொள்ளத் தொடங்குவதையும், அது அவர்களை உன் பேச்சைக் கேட்கத் தூண்டுவதையும் நீ காணலாம். கருத்துகளைக் கேட்க வந்தவர்கள் உன்னால் புரிந்து கொள்ளப்பட்டவர்களாகவும், உன்னால் பேணப்படுபவர்களாகவும், (அக்கறை காட்டப்பட்டவர்களாகவும்) உணர்கின்றனர்.
பணியாளர்களின் மேல் அக்கறை கொள். அவர்களும் உன்னைப் புரிந்து கொள்ளும்படி பார்த்துக்கொள். அவர்கள் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் உன்னைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மையை உண்டாக்கக்கூடாது. நீ அவர்களின் கௌரவத்தையும், வேலையின் புனிதத் தன்மையையும் உணரவேண்டும். நீ தொடர்பு கொள்ளும் மனிதர் துப்புரவுத் தொழிலாளர், உன்னை வேலைவாங்கும் மூத்த அலுவலர் என்ற வகையில் எவராக இருப்பினும் உன் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் அவர்களுடன் பழகவேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மதிப்பு உண்டு. இப்படி நீ அவர்களிடம் பழகினால் நிர்வகிக்கும் தன்மை உனக்கு இயற்கையாகவே வந்து விடுவதைக் காண்பாய். ஏனென்றால் நீ ஒவ்வொருவரிடமும் பேசவேண்டிய நிலையில் இருக்கிறாய்.
மக்கள் இயந்திரங்கள் அல்லர். இயந்திரங்களுக்குக் கூட சில அன்றாட கவனிப்புகள் தேவைப்படுகின்றன. தாங்கள் மனிதர்கள் தான் என மற்றவர்களால் மதிக்கப்படுவதை மக்கள் எதிர்பார்க்கின்றனர். உண்மையில் அவர்கள் மானிடக் கூட்டமல்லர். ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட மனிதரே. மானிடக் கூட்டம் என அவர்களை நீ குறிப்பிட்டால் அவர்களை நீ ஆட்டுமந்தை என மதிப்பதாகவே கருதுவர். நீ அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட மனிதர் என உணர்ந்தால் அவர்களிடம் உறவு முறை மலரும்; வளரும். இதனால்தான் மற்றவர்களைச் செயல்படுத்தும் திறமைக்கு மக்களை நிர்வகிக்கும் திறமை எனக் குறிப்பிடப்படுகிறது. மக்களுடன் உறவுமுறை என்னும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நிர்வகிக்கும் தன்மை தானாகவே அமைந்து விடும்.
நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொருவரும் தங்களால் நிர்வகிக்கப்படுபவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைத் தான் புரிந்து கொண்டவன் என்னும் நிலையை அவர்கள் அனைவரும் உணரும்படி செய்யவேண்டும். மேலும் அப்பணியாளர்களுக்கு, அவர்களின் பணிகளையும், பொறுப்புகளையும் தெளிவாக நிர்வாகி சொல்லவேண்டும் என ஒரு நியதி உள்ளது. அது சரியே. ஆனால் அதற்கும் மேலாக அவர்கள் தன்னால் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை அவர்கள் உணரும்படி செய்யும் செயல் மிக முக்கியமானது. இதில் கவனம் செலுத்தினால் நிர்வாகம் செய்வதில் சிக்கல் இல்லை. இதை நிர்வகிப்பவர் அறியவில்லையென்றால் சிக்கல்தான். குடும்ப வாழ்க்கையிலும் கூட ஆணோ, பெண்ணோ மற்றவரால் அவர் புரிந்து கொள்ளப்பட்டார் என்னும் உணர்வை அவர்களுக்கு உணர்த்துவது மிக முக்கியம். உன் வாழ்க்கையில் ஒருவரை மட்டுமாவது நீ உணர்ந்தால் அது அவருக்கு நீ கொடுக்கும் மிகப்பெரும் பரிசாக அமையும்.
அவர்களின் பேச்சை நாம் கவனமாய்க் கேட்பதன் மூலம் அவரை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். இதனால் அவர் உங்களுக்குள் ஒருவராகி விடுவார். இதனால் இதய பூர்வமான பரஸ்பரத் தொடர்பு ஏற்படுகிறது. இதன்பின் அவருக்கு எந்தவிதப் பயமும் ஏற்படுவதில்லை. எனவே, அவனோ, அவளோ உனக்காக உழைப்பார். அந்த இன்னொருவர் உன் ஆணைகளையும், அறிவுரைகளையும் அவர்களுடையதாகவே எடுத்துக் கொள்வார். இதைச் சரியாகச் சொல்வதென்றால் அங்கே ஆணைகள் இல்லை. வேலைகளைச் செய்தாக வேண்டும் என்ற விருப்ப நிலைதான் இருக்கும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அமைப்புகளில் சில உங்களால் முடிவு செய்யப்பட வேண்டியவையாக இருக்கலாம். அல்லது அறிவுரை கொடுக்கப்பட வேண்டியவை என்னும் வேலைகளாக இருக்கலாம். மற்றவர்களைக் கொண்டு அவற்றைச் செய்து முடிக்கப்பட வேண்டியவையாகவும் இருக்கலாம். ஓர் அமைப்பில் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான பணிகளைச் செய்ய வேண்டியதிருக்கும். உனக்கொரு வேலை இருக்கும். மற்றவர்க்கு வேறொரு வேலை இருக்கும். இரண்டுமே வேலைகள்தான். ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளைச் செய்து முழுப் பணியையும் செய்து முடிக்க வேண்டும்
நாம் ஒருவரை நம்மவராக்குவதில் இந்த விதமாக இரண்டு பொறுப்புகள் இணைந்திருக்கின்றன.
1. ஒருவன் அல்லது ஒருத்தி உன்னால் மதிப்பீடு செய்யப்படுகிறார் என்ற நிலையில் அவர்களுக்கு ஓர் உயர்வு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் உறுதியாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
2. உன்னால் அவர் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார் என்று அவரை உணரச் செய்ய உனக்குத் தெரிந்தவற்றையே அவர் சொல்லப் போகிறார் என்று தெரிந்தாலும் கூட அவர் சொற்களைக் கருத்தாகக் கேட்பதன் மூலம் அவருக்கு உன்னைப் புரியம்படி செய்ய வேண்டும். (அக்டோபர் 2009)
தன்னைத்தானே ஆட்சி செய்தல்
பணியாளர்களை ஆளும் திறன் என்பது ஒருவனுக்கு தன்னைத் தானே ஆளும் திறத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆளும் திறனை வகிக்கும் ஒருவன் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை நெருக்கடிகளில் இருக்கும் போதே, அதிலிருந்து விலகியிருக்கும் திறமையையும் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் ஒருவர் திறமையற்றவராய்ப் போவதற்கு சூழ்நிலை ஒரு முக்கிய காரணம். ஒருவன் தன்னால் செய்யப்படும் செயல்களுக்கும், பிறரிடம் நடந்து கொள்ளும் விதத்திற்கும் தன்னுடைய உணர்வுகளுக்கும் தான்தானே பொறுப்பாளியாக உள்ளார்? ஆனால் மற்றவர்களுடைய செய்கைக்கும். உணர்வுகளுக்கும் அவர் பொறுப்பாளி அல்லர். ஒருவருடைய செயல் மற்றொருவருக்கும் சில பிரச்னைகளை உண்டு பண்ணினால் அப்போது அந்தச் செயலைச் செய்தவன் பொறுப்பாளியாகிறான். மற்றபடி ஒருவன் மற்றவருடைய செய்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் பொறுப்பாளி அல்லர். இந்த உண்மையை அதிகாரத்தை வகிக்கும் ஒவ்வொருவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையானால் தமக்கு சம்பந்தமில்லாத சூழ்நிலை நிகழ்ச்சிகளால் தாக்கப்பட்டு அந்த சூழ்நிலைக்குத் தானே பொறுப்பாளி என்ற உணர்வு ஏற்பட்டு ஏமாற்றமடைந்து சூழ்நிலைப் பிரச்னைகளை அது தீர்க்கவேண்டிய ஒரு பிரச்னை மட்டுமே எனபதே உணரமுடியாமல் போவார்கள். துக்கப்படுவோரின் தொடர்பால் நாமும் துக்கமுறுதல் என்பது நம் பழக்க வழக்கங்களில் ஒன்றி அமைந்ததாகும். இது நம் குழந்தைப் பருவத்திலிருந்து தொடர்ச்சியாக உண்டாகும் ஓர் அழுத்தமான பழைய பழக்கத்தினால் ஏற்படுகிறது. இதை உதாரணத்துடன் விளக்குகிறேன்.
தங்கள் குழந்தைகளின் முன் பெற்றோர் இடும் சண்டையால்,தாங்கள் ஆதரவற்றவர்களாக இருப்பதாகவும், அந்தச் சண்டைக்கும் தாங்கள் தான் காரணமென்ற குற்ற உணர்வாளர்களாகவும் அந்தக் குழந்தைகள் கருதுகின்றனர். இந்த உணர்வு அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பின்னும் அவர்களிடம் இருக்கிறது. ஏதேனும் ஒருவர் எதற்காவது வருத்தப்பட்டால், இவர்கள் அதற்குத் தாங்கள்தான் பொறுப்போ என எண்ணுகின்றனர். இந்த உள்ளுணர்வு உண்மையுமன்று. ஆதாரம் உள்ளதும் அன்று. அவனோ, அவளோ அவ்வுணர்வுகளில் பாதிக்கப்பட்டவர்களாக எப்பொழுதும் இருப்பதால், அவர்கள் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதில்லை. ஒருவர் தாம் சோர்வடைந்ததாக உணர்ந்தால் வருத்தமும், பிறகு வருத்தத்தினால் கோபமும் அடைவது இயற்கையே. ஏனென்றால் துன்பங்கள் எப்பொழுதும் கோபத்தில் தான் முடிகின்றன. மனவருத்தத்தின் துன்ப உணர்வே கோபமாக வெளிப்படுகிறது. ஆகையால் கோபம் என்பது மனத்தினுள் தேங்கியிருக்கும் வருத்தத்தின் வெளிப்படுத்தப்பட்ட ரூபமே. இவ்வாறு துக்கமே கோபத்திற்குக் காரணமாயிருப்பதால், கோபம் வெடித்து வெளியேறியபின் மீண்டும் வருத்தம் மனத்தில் வந்துவிடுகிறது. சிலர் வருத்தமாகவோ, கோபமாகவோ, இருப்பதற்குரிய காரணத்தை இப்போது நாம் உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா? வருந்திக் கொண்டிருக்கும் ஒருவரிடம் உங்கள் வருத்தத்திற்கு என்ன காரணம் என நாம் கேட்டால், அவர்கள் கோபம் அடைகிறார்கள். அந்தக் கோபம் தணிந்தவுடன் மறுபடியும் வருத்தநிலையை அடைகிறார்கள். விருப்பம் நிறைவேறா வெறுப்பு, ஒருவனுக்கு வருத்தத்தைத் தந்து ஏமாற்றத்திலும் கோபத்திலும் தள்ளும்.
சிலர் நிர்வாகம் செய்யக் கோபப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். இப்படி எண்ணமுள்ள நிர்வாகியின் கீழ் பணியாற்றுவோர் எப்போதும் பயந்த சுபாவம் கலந்த (வியாகூல) மனத்துடனேயே இருப்பர். ஏனென்றால் அவர்களின் நிர்வாகி எந்த நேரத்தில் கோபம் அடைவாரோ என்ற எண்ணம் அவர்களின் மனத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். இப்படியாக நிர்வாகம் செய்யக் கோபப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள அதிகாரிகளிடம் வேலை செய்பவர்கள் எப்போதும் கோபத்தினால் பீடிக்கப்பட்ட மனோநிலையுடன்தான் வேலை செய்வார்கள். அது தொழிலில் எந்த முன்னேற்றத்தையும் உண்டுபண்ணாது. அவர்கள் செய்வது வேலையாகவே இருக்காது. வேலை செய்பவர்கள் அதிகாரி எந்த நேரத்திலும் கோபத்தைக் காட்டுவார் என எண்ணுவதால், அவர்கள் அதிகாரியின் மனத்தை சந்தோஷ நிலையில் வைத்திருப்பதற்காகவே எப்போதும் ஏதாவது சமயத்துக்குத் தக்கபடி வேலை செய்து கொண்டே இருப்பார்களேயன்றி தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யமாட்டார்கள். அவர்கள் அவ்வப்போது சமயத்திற்குத் தகுந்தாற்போல் உயர் அதிகாரியின் கோபம் வெளிப்படாமல் இருக்கப் புதுப் புது வழிகளைக் கண்டுபிடித்து அந்த வழிகளை நிறைவேற்றச் செயல்படுவார்கள். ஆகையால் இவ்வாறாக அவர்கள் உயர் அதிகாரியிடம் மதிப்பு இல்லாமல் இருப்பதால் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை நேர்மையாகச் செய்யமாட்டார்கள். அது வேலையாகவே இருக்காது. நிர்வாகியாக இருக்கும் நீ நல்ல தகுதியுடையவனாக இருந்தும், நீ எப்பொழுதும் கோபத்துடன் உன் முகம் கடுகடுப்பாகக் காணப்படுவதால் அவர்கள், எது வந்தால் என்ன? எது போனால் என்ன? என அமைதியாக ஒதுங்கி இருக்கவே முயல்வார்கள். அத்துடன் உன்னை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும், உனக்கு கோபம் வராதிருக்ககவும் முயற்சி செய்வார். அவர்களுக்கு உன்னிடம் எந்த மதிப்பும் இல்லாமையால், உனக்காக அவர்கள் வேலை செய்யமாட்டார்கள்.
ஓர் அமைப்பின் ஓர் அதிகாரி சில குறிப்பிட்ட காரணங்களுக்குக் கோபப்படுவார். இதனைப் புதிதாக வந்த பணியாளரிடம் பழைய பணியாளர்கள் சொல்வது மட்டுமன்றி எது அந்த மேலாளருக்குச் சினத்தை உருவாக்கும் என்பதை விளக்கி புதுப்பணியாளர் அந்த அதிகாரியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தனர். இம்மாதிரியான அதிகாரியின் செய்கை அவரிடம் மற்றவர்களின் நெருங்கமுடியாத தன்மையை முன்கூட்டித் தெரிந்து கொள்ள முடிவதாகிறது. இவ்வாறாக அந்த அதிகாரியை மற்றவர்கள் சுலபமாக எடைபோடும் தகுதிக்குத் தன்னை ஆக்கிக் கொண்டார் எனலாம்.
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனுக்கு எப்பொழுது கோபம் வரும் என்பதைப் புரிந்திருப்பாள். ஒவ்வொரு குழந்தையும் எந்தச் சந்தர்ப்பத்தில் தன் தந்தைக்குக் கோபம் வரும் என்பதைப் புரிந்திருக்கும். தந்தை எந்த எந்த நேரங்களில் நெருங்க முடியாதவராய் இருப்பார் என்பதை, தம் பிள்ளைகளுக்குத் தாய் கற்றுக் கொடுப்பாள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நெருங்க முடியாதவாறு கோபம் கொள்பவராக மாறுவர். எவரேனும் ஒருவர், அந்த நிலையை அவருக்கு ஏற்படுத்தி விட்டால், அவர் உணர்ச்சிக் குமுறலாக மாறுவார். இந்தத் தன்மைதான் மற்றவர்கள் ஒருவரை சுலபமாக எடை போடும் தகுதியுள்ளவராகச் செய்துவிடுகிறது.
கோபப்படுவதால் காரியத்தைச் சாதிக்க முடியும் என எண்ணினால்,அது தவறு. இது நல்ல நிர்வாகியாக வருவதற்கான வாய்ப்பைக் கொடுக்காது. முரட்டுப் பிடிவாதமும், கோபக்காரத் தன்மையும் ஒருவரிடம் இருந்தால் அவர் நிர்வாக வேலைக்குப் பொருத்தமற்றவர். அப்படிப்பட்டவர் குடும்பப் பொறுப்புள்ள ஒரு நல்ல கணவனாகவும் இருக்க முடியாது. ஏனெனில் கோபத்தால் பயனில்லை என்பதை ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். உன் இதயத்தில் இருந்து கொண்டே, ஒருவருக்கு எதிரியாக இருப்பது கோபம் என, பகவத்கீதை கோபத்தைப் பற்றி விளக்குகிறது.
இந்தக் கோபத்தை எப்படிச் சமாளிப்பது? முதலில் கோபத்தால் எப்பயனும் இல்லை என உணர வேண்டும். கோபமும் மதுபானப் பழக்கத்தைப் போன்றதுதான் என உணரவேண்டும். மது அருந்துவதால் நமக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதை முதல் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக மது அருந்துவதால் அருந்தியபிறகு அதிலிருந்து உண்டாகும் தீமையை (விபரீத விளைவுகளை) எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் மதுபானப் பழக்கத்தை நிறுத்த விரும்புபவர் அறிவாரேயானால் அவர் அப் பழக்கத்தை உடனே கைவிட முடியும். அதே மாதிரி, நாம் கோபமடைந்தபின் அந்தக் கோபத்தின் மேல் தாம் யாதொரு சக்தியும் இல்லாமலேயே போய்விடுகிறோம் என்றும் கோபம் நமக்கு உண்டாகும்போது அது நமக்கு முன் அறிவிப்பின்றி (நம்மைக் கலந்தாலோசிக்காமல்) நம்மை ஆட்கொண்டு நம்மை அதன் அடிமையாக்கிக் கொள்கிறது என்பதையும் ஒருவர் அறிந்து கொண்டால்தான் கோபத்தை ஒருவர் மாற்றிக் கொள்ளமுடியும். அல்லது கோபமடைவதை நிறுத்த முடியும். மதுபானம் நல்லதல்ல என்றும், அது எந்தச் சக்தியையும் தராது என்றும் நீ உணர்ந்து கொண்டால்,அதை விலக்கி விடுவது சுலபம். அதே போல கோபம் உன்னைக் கேட்டுக் கொண்டு உன்னிடம் வருவதில்லை. உன் அனுமதிக்காகக் காத்திருப்பதுமில்லை. தானாகவே உன்னைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவிக்கிறது என்பவற்றைப் புரிந்து கொள்வதுடன் கோபத்தால் எப்பயனும் இல்லை என்ற உண்மையையும்உணர்ந்து கொண்டால் நீ கோப உணர்வைத் தவிர்த்து விடமுடியும்.
கோபங்கொள்ளும் மனிதன் முதலிலேயே தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியை இழந்து நிற்பதால் மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாய் விடுகிறது. வார்த்தைகளைக் கூட அடக்கி ஆள முடியாது. அவன் தன் மகனைப் பார்த்தே “ஏய்! ஒரு முட்டாளின் மகனே” என அழைப்பான். கோபம் வந்துவிட்டால், அவரால் எதனையுமே சமாளிக்க முடியாது. அதனால் மற்றவர்கள் அதனைச் சமாளிப்பர். உண்மையைச் சொல்வதென்றால், மேலாளர்களின் கோபநேரத்தில் அவர்களின் உதவியாளர்களே அந்த மேலாளர்களை தங்கள் நோக்குக்குத் தக்கபடி சமாளிக்கின்றனர். மேலாளர்கள் உதவியாளர்களை சமாளிக்கின்றார்களா? உதவியாளர்களால் மேலாளர்கள் சமாளிக்கப்படுகிறார்களா என்ற உண்மையைக் காணல் கடினம். எந்தச் சூழ்நிலையில் மேலாளருக்கு கோபம் வரும் என்று நன்றாக அறிந்த உதவியாளர்கள் அவரைத் திருப்தி செய்வது போல் நடிப்பார்களே தவிர உண்மையான வேலையைச் செய்ய மாட்டார்கள். எப்படி முகஸ்துதி செய்ய வேண்டும் என்பதும், எந்த மாதிரி அவரைச் சமாளிக்க வேண்டும் என்பதும் உதவியாளர்களுக்குத் தெரியும்.
எவனொருவன் தன் சுய எண்ணங்களாலும் உணர்ச்சிகளாலும் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டு, தனித்து நின்று மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் சக்தி உடையவனாக இருக்கிறானோ அவனை முகஸ்துதியில் மயங்குபவனாகவோ, கோபக்காரனாகவோ மாற்ற முடியாது. எவன் கோபக்காரனோ, அவன் முகஸ்துதிக்கு மயங்குபவனாகவும் இருப்பான். ஒருவன் கோபமடையும் போது தன்னைப் பற்றிய கருத்துகள் இல்லாமல் போவதால் இலகுவாக முகஸ்துதிக்கு மயங்குபவனாகி விடுகிறான். ஆகையால் ஏனையோர் எப்பொழுதும் அவரை முகஸ்துதி செய்து தங்களுக்கு ஆக வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்வர். அது முழு அமைப்பையும் அழித்துவிடும்.
கோபக்காரர் தன் சுயநிலையை இழக்கும் நிலையை சுலபமாக அடைவதால், மற்றவர்க்கு அவருடைய நிலையை (மனப்போக்கை) நன்றாக அறிந்து கொண்டு அவரைத் தங்கள் முகஸ்துதியின் மூலமாக அவரைத் தன்வசப்படுத்தி விடுவார்கள். கோபத்தின் மேல் உனக்கு ஆதிக்கம் இல்லை என்று எப்பொழுது நீ உணர ஆரம்பிக்கின்றாயோ, அப்போது பிரார்த்தனைக்காக உன் இதய வாசல் திறக்கிறது. இறைவனைத் தவிர வேறு கதியில்லை என்று எப்பொழுது உணர்கின்றோமோ அப்பொழுது நம் பிரார்த்தனை ஓர் அன்றாடச் செயலாக மட்டுமே இருக்கிறது. கோபத்தின் மேல் உனக்கு ஆதிக்கம் என, எப்போது நீ உணரத் தொடங்குகின்றாயோ, அப்பொழுது உன் கோபம் வெளியேறி விட்டதை நீ உணரலாம். அப்போது இறைவா சூழ்நிலைகளால் என்மனம், எண்ணம் ஆகியவற்றைப் பாதிக்கப்படாத சமநிலைப்பட்ட மன அமைதியையும், சாந்தத்தையும் தா என பிரார்த்திக்கத் தொடங்கி விடுவாய்.
கோபத்தால் பயனில்லை என்பதும், அதன்மேல் நீ ஆதிக்கம் செலுத்த முடியாதென்பதும் உண்மையென்பதனால், கோபம் ஒரு கெட்ட நிர்வாகம் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் உன் இதயக் கதவு இறைவனுக்காகத் திறக்கப்படுகிறது. அதனால், கோபம் கட்டுப்படுத்த முடியாதது அல்ல என்பதை நீ உணர்வாய். தன்னை ஆள்வதற்கு, தன்னிடத்தில் கோபம் தோன்றாவண்ணம் காத்துக் கொள்வது முதற்படியாகும். உன்னை நீ ஆளக் கற்றுக்கொண்டால், நீ உன் பணியாளர்கள் அத்தனை பேரையும் உன்னால் ஆளமுடியும் என்பதை நீ கண்டுகொள்வாய்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், உன் சுய கண்ணியத்திலும் சுய மதிப்பிலும் நீ எப்படி இருக்கிறாய் என்பதைப் பொருத்தே, உன்னிடம் மற்றவர்களை ஆளுந்திறன் இருக்கும். நீ மற்றவர்களை நிர்வகிக்கையில் அவர்களுக்கு கவலை, பயம், உயர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்ச்சிகள் அணுகாவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். அவனோ, அவளோ உன்னால் மதிப்பிடப்படுகிறார்கள் என்ற உணர்வை அவர்களுக்குள் உண்டாக்கிவிடக் கூடாது. நீ அவர்களைப் புரிந்து கொண்டாய், என்பதை அவர்கள் உணரும் வண்ணம் உன் பேச்சு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உன் நடைமுறை, நீ எப்படிப்பட்டவன் என்பதை மற்றவர்கள் உணரும்படி இருப்பது மிகவும் முக்கியம். இறுதியாக உன் கோபம் மற்றவரைப் பாதிக்கும் தன்மை போன்றவற்றை வெளியாகாவண்ணம் உன்னை நீ ஆளக் கற்றுக்கொள். இப்பண்பாடுகளால், உன்னையே ஆளும் திறனும் மற்றவர்களை நல்ல முறையில் நிர்வகிக்கும் திறனும் உனக்கும் தன்னால் வந்துவிடும். இது உறுதி.

No comments:

Post a Comment