Monday, April 27, 2015

பெரும் பதவியை அருளிய பரமன்


பெரும் பதவியை அருளிய பரமன்ஆர். புஷ்கலா
“மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதையை மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச் சண்டிப் பெருமானுக் கடியேன்.”
சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் உள்ளது சேய்ஞ்ஞலூர் திருத்தலம். அந்தணர்கள் வாழும் அழகிய ஊர் அது. அந்த அந்தணர்கள் திருநீறு அணியும் கொள்கையை உடையவர்கள்; ஐம்பொறிகளை அடக்கியவர். அந்தத் தலத்தின் பெருமையையும், அங்கு வாழ்ந்தோர் சிறப்பும் கூறுவதற்கு அரிது!
அத்தகைய தலத்தில் எச்சதத்தன் என்னும் அந்தணன் வாழ்ந்தான். காசிப கோத்திரத்தில் பிறந்தவன். அவன் மணியையும், நஞ்சையும் கொண்ட பாம்பைப் போல் நல்வினை, தீவினை இரண்டும் சேர்ந்த வடிவை உடையவனாய் இருந்தான்.
அவனுடைய மனைவி பவித்திரை, சுற்றத்தாரைப் பேணும் பண்புடையவள்; அவருடைய திருவயிற்றில் விசாரசருமர் என்ற சைவம் விளக்க வந்த மைந்தர் அவதரித்தார்.
விசாரசருமர் ஐந்து வயது நிரம்பப் பெற்றார். முன்வினைப் பயனால் மலரில் மணம் போல் அவரிடம் வேதம் ஓதும் அறிவு மணம் வீசியது.
ஏழாண்டுகள் நிரம்பப் பெற்ற விசாரசருமருக்கு அவர் தம் குல வழக்கப்படி பூணூல் அணிவிக்கப்பட்டது; அவரை வேதம் முதலியனவற்றை ஓதச் செய்தனர்.
ஆசிரியர்கள், விசாரசருமரின் அறிவின் ஆற்றலைக் கண்டனர்; வியப்பு அடைந்தனர்.
விசாரசருமர், அளவில்லாக் கலைகளுக்கு எல்லாம் எல்லை சிவபெருமான் திருவடிகளே ஆகும் என்பதைத் தம் உள்ளத்தால் அறிந்து கொண்டார்.
பெருமான் திருவடிகளை எண்ணும் மனத்தில் விளைந்த அன்பின் வழியே தம்முடைய கடமையைச் செய்து வந்தார் விசாரசருமர்.
ஒரு நாள் விசாரசருமர் வேதம் ஓதும் மாணவர் கூட்டத்துடன் வெளியில் சென்றார். அவ்வூரில் உள்ளவர்களின் பசுக்கூட்டங்களும் அவ்வழியே சென்று கொண்டிருந்தன.
அப்போது, கன்றினை ஈன்ற இளமையான பசு ஒன்று தன்னை மேய்ப்பவனை முட்டியது. உடனே அதனை மாடு மேய்ப்பவன் அடித்தான். அப்போது அவ்விடையன் மீது இரக்கம் கொண்டு, பசுக்களின் பெருமையை அவனுக்கு விசாரசருமர் எடுத்துச் சொல்லத் தொடங்கினார்.
“பசு எல்லா உயிர்களையும் விட மேலானது; தூய்மையான தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்டது; பசுக்களின் ஒவ்வோர் உறுப்புகளிலும் தேவர்களும், முனிவர்களும் இருக்கின்றனர். சிவபெருமான் ஆடியருளுதற்கு ஏற்ற தூய திருமஞ்சனமான பால், தயிர், நெய், சாணம், நீர் ஆகிய பஞ்சகவ்வியத்தைக் கொடுப்பன பசுக்கள்.”
“அவையே திருநீற்றிற்குரிய சாணத்தைத் தருவன; பசுக்கள் இல்லையேல் மனித உயிர்கள் இல்லை என்றே கூறலாம். பெருமானும், உமையம்மையும் எழுந்தருளும் விடையும் இந்தப் பசுக்குலமாகும். கன்றுகளோடு, பசுக்களைக் காப்பதை விட வேறு பேறு இல்லை என்றே சொல்லலாம்.”
இவ்வாறு பசுவின் மகிமையை எடுத்துக் கூறிய விசாரசருமர், “அன்பனே! இனி நீ பசுக்களை மேய்க்க வேண்டாம். இனி இந்தப் பசுக்கூட்டத்தை நானே மேய்ப்பேன்! நடராசப் பெருமானின் திருவடிகளைப் போற்றும் வழியும் இதுவே ஆகும்.” என்று ஆயனிடம் கூறினார்.
ஆயன் மேய்த்தலை விட்டு விட்டு நீங்கினான். அவ்வூர் அந்தணர்களிடம் சென்று விசாரசருமர் பசுக்களை மேய்த்தலைத் தானே செய்வதாக வேண்டிக் கொண்டார்.
அதற்கு அந்தணர்கள் ஒப்புக் கொண்டனர். கையில் கோலும், கயிறும், குடுமியும், அரையில் கோவணமுமாக விசாரசருமர் மாடு மேய்த்தார். அதிகம் புல் உள்ள இடங்களில் பசுக்களை மேய்த்தார். தம் கைகளாலும் புல்லைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டினார். நீர்த் துறையில் நீரை உண்ணச் செய்தார். கன்றுகளையும், பசுக்களையும் நிழலில் இளைப்பாறச் செய்தார். பசுக்கள் பால் தரும் நேரமறிந்து, கறந்து உரியவரிடம் கொடுத்தார்.
இவர் மாடுகளை மேய்க்கத் தொடங்கியதிலிருந்து அவை மிகுதியான புல்லும், தண்ணீரும் பெற்றன; அதனால் கொழுத்து, அழகுடன் காட்சியளித்தன; முன்பு கறந்ததை விட மிகுதியாகப் பாலைக் கறந்தன. விசாரசருமரை அவ்வூர் அந்தணர்கள் பலவாறு புகழ்ந்தனர். வீட்டிலுள்ள தம் கன்றைப் பிரிந்த பசுக்கள் கூட விசாரசருமர் அருகில் வந்தால், கறக்காமலேயே பாலைப் பொழிந்தன.
தாம் அருகில் சென்றாலே பசுக்கள் பால் பொழிவதைக் கண்ட விசாரசருமர், அந்தப் பால் வீணாவதை எண்ணி வருந்தினார்; உடனே அவ்வாறு வீணாகும் பாலும் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு ஆகுமே என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்தது.
சிவபெருமானுக்குப் பூசை செய்ய வேண்டுமென்ற அன்பு விசாரசருமருக்கு மேலிட்டது. மண்ணியாற்றின் மணல் மேட்டில் ஆத்தி மரத்தின் கீழ்ச் சிவலிங்கம் ஒன்றை மணலால் அமைத்தார். அதைச் சுற்றிச் சுற்றாலயமும், மணலாலேயே சிவலிங்கத்திற்குக் கோவிலும் அமைத்தார்; பக்கத்திலுள்ள காட்டிலிருந்து ஆத்தி மலர், செழுந்தளிர் ஆகியவற்றைச் சிவனுக்கு மாலையாக்க, மணம் போகாதவாறு பூக்கூடைகளில் கொண்டு வந்தார்.
ஒவ்வொரு பசுவின் மடியிலும் உள்ள ஒரு காம்பை மட்டும் விசாரசருமர் தீண்டினார். பசுக்கள் அவர் தீண்டியவுடன் பாலை அளவில்லாமல் பொழிந்தன. அவற்றைக் குடங்களில் ஏற்றுக் கொண்டார். பூக்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்தார். பாலால் திருமஞ்சனமாட்டினார். சிவலிங்கத்தில் எழுந்தருளிய பெருமான் அன்பின் மிகுதியால் விசாரசருமர் செய்த திருமஞ்சனத்தை ஏற்றுக் கொண்டார். விசாரசருமரின் பூசைக்கு அன்பினால் பசுக்கள் தாமே அவரிடம் வந்து, பாலைப் பொழிந்தன. இருந்தாலும் பசுக்கள் வீட்டிலும் குறையாமல் பாலைச் சுரந்தன.
விளையாட்டாகத் தொடங்கிய பூசை மெய் வழிபாடானது.
விசாரசருமரின் இப்பூசை வழிபாட்டைப் பார்த்து உண்மையை அறியாத ஒருவன், அவ்வூர் அந்தணர் சபைக்குப் போனான். அச்சபையில், “ஆயன் மாடு மேய்க்கத் தெரியாதவன். நானே அவற்றை மேய்க்கின்றேன். என்று கூறிய விசாரசருமன் என்ன செய்தான் தெரியுமா? நம் ஊர்ப் பசுக்களின் பாலைக் கறந்து, மணல் மேட்டின் மேல் ஊற்றுகிறான்.” என்று குற்றம் சொல்லி நின்றான்.
விசாரசருமரின் தந்தை எச்சதத்தன், ஊர் அவையோருக்கு முன்பு அழைத்து வரப்பெற்றான்.
அவையோர் எச்சதத்தனைப் பார்த்து, “ஊரார் பசுக்களை மேய்ப்பதாகக் கூறி உன் மகன் செய்யும் கள்ளத்தைக் கேள்! விசாரசருமர் மேய்க்கும் பசுக்கள், அந்தணர்கள் வேள்விக்காகப் பால் கறப்பவை. அவற்றை எல்லாம் உன் மகன் மேய்ப்பதாகச் சொல்லி மண்ணியாற்றில் உள்ள மண் திடலில் அவற்றின் பாலை எல்லாம் கறந்து ஊற்றி வீணாக்குகிறான்.” என்று விசாரசருமர் மீது குற்றம் சாட்டினர்.
அதனைக் கேட்ட எச்சதத்தன் மிகவும் அஞ்சினான். “அவையோரே! அவன் சிறுவன் மாணவன். அவன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அவன் செய்யும் செயல் இது போன்றது என்று எனக்கு இதற்கு முன் சிறிதும் தெரியாது. இனிமேல் அச்செயல் நடக்குமானால் குற்றம் என்னுடையதேயாகும்.” என்று எச்சதத்தன் சபையோரிடம் கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு சென்றான்.
மாலையில் செய்ய வேண்டிய சந்திக்கால வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
இரவு முழுவதும் தன் மகன் மீது அவையோர் கூறிய குற்றச்சாட்டினையே எண்ணிக் கொண்டிருந்தான். ‘அவையோர் கூறியது உண்மையா? பொய்யா? என்பதை நானே நாளை சென்று பார்த்து அறிவேன்.’ என்று நினைத்து இரவைக் கழித்தான்.
இரவு கழிந்தது; பொழுது புலர்ந்தது; விசாரசருமர் மாடு கன்றுகளை ஓட்டிக்கொண்டு வழக்கம் போல் மேய்ச்சல் நிலம் நோக்கிப் புறப்பட்டார்.
விசாரசருமர் அறியாமல், எச்சதத்தன் அவரது செயலின் உண்மையை அறிய அவரைப் பின் தொடர்ந்து சென்றான். விசாரசருமரும், பசு, கன்றுகளும் மண்ணியாற்றை அடைந்தன. எச்சதத்தன் தன் மகனின் செயலைக்காண குராமரம் ஒன்றின் மீது ஏறி ஒளிந்து கொண்டான்.
முன்நாள்களில் செய்தது போல் விசாரசருமர் நீரில் மூழ்கி எழுந்தார்; மண்ணியாற்றின் திடலில் மணலால் சிவலிங்கம் அமைத்தார்; புதிதாகப் பூத்த மலர்களைத் தேர்ந்தெடுத்துப் பறித்தார்; ஒவ்வொரு பசுவினுடைய மடியின் ஒவ்வொரு காம்பிலிருந்தும் பாலைக் கறந்தார்; தான் அமைத்த மணலால் ஆகிய சிவலிங்கத்தின் மீது மலர்களை அணிவித்தார்; கறந்த பாலை அபிஷேகம் செய்யத் தொடங்கினார். எச்சதத்தன் கோபம் பொங்க அச்செயலைப் பார்த்தான்.
எச்சதத்தன் கோபத்துடன் மரத்திலிருந்து இறங்கினான்; தன் கையில் இருந்த தண்டினால் விசாரசருமர் முதுகில் ஓங்கி அடித்தான்; கொடுஞ் சொற்களால் திட்டினான்; அன்பு முதிர்ச்சியால் சிவனிடத்தில் சிந்தையைச் செலுத்தி விசாரசருமர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவருக்கு அடியும், வசையும் தெரியவில்லை.
கோபம் கொண்ட எச்சதத்தன் மேலும் விசாரசருமரைப் பல முறை அடித்தான்; சிவன் திருப்பணியில் ஈடுபட்ட விசாரசருமருக்கு அந்த அடிகள் தெரியவில்லை.
எச்சதத்தனுக்கு வந்த எல்லையில்லாக் கோபத்தால், விசாரசருமர் அங்கே திருமஞ்சனத்திற்காக வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்து உருட்டினான்.
அப்பொழுதுதான், விசாரசருமருக்கு உணர்வு வந்தது; திருமஞ்சனப் பாலை உருட்டிக் கவிழ்த்தவன் யார்? என்று பார்த்தார். தம்முடைய தந்தை தான் அச் செயலைச் செய்தான் என்பதை உணர்ந்தார்.
எச்சதத்தன், இறைவனுக்குரிய பாலைக் காலால் உதைத்துச் சிந்தியதால், அவனுடைய கால்களைத் தண்டிக்க நினைத்தார் விசாரசருமர்; பக்கத்தில் கிடந்த கோலை எடுத்தார்; அது சிவன் தாங்கிய மழு ஆயுதமாக மாறியது; அந்த மழுவினைக் கொண்டு தந்தையின் காலை வெட்டினார்; அதனால் எச்சதத்தன் கீழே விழுந்தான். சிவபூசைக்கு ஏற்பட்ட இடையூறு நீங்கியது என்ற உணர்வால் மீண்டும் பூசையில் விசாரசருமர் இறங்கினார்.
அப்போது, சிவபெருமான், உமையம்மையை இடப்பக்கம் கொண்டு, பூதகணங்கள் சூழ, முனிவர்களும் தேவர்களும் வேத மொழியால் துதிக்க, விசாரசருமருக்கு முன்பாக எழுந்தருளினார். விசாரசருமர், அவர் திருவடிகளை வணங்கினார்.
“விசாரசருமனே! என் பொருட்டு நீ உன் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி உனக்கு நாமே தந்தை” என்று பெருமான் சொல்லி, விசாரசருமரை அணைத்துக் கொண்டார். கருணையால் தடவிக் கொடுத்தார். உச்சி மோந்தார்.
சிவபெருமானால் தீண்டப் பெற்றதால் விசாரசருமர் மாய உடல் நீங்கினார். சிவ ஒளியில் கலந்து தோன்றினார்.
பெருமான், விசாரசருமரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவன் ஆக்கினார். “நாம் உண்ட பரிகலம், உடுக்கும் உடைகள், சூடும் மாலைகள், அணியும் அணிகலன் எல்லாம் உனக்கே உரிமையாகும். அவற்றையெல்லாம் ஏற்கும் உரிமையுடைய ‘சண்டீசன்’ ஆகும் பதவி தந்தோம்” என்றருளினார்.
சிவபெருமான் தம் முடியில் இருக்கும் கொன்றை மலர் மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார்.
‘சண்டீசர்’ பதவியில் விசாரசருமர் அமர்ந்தார். வேத மந்திரங்கள் ஒலித்தன. உலகில் ‘அர அர’ என்ற ஆரவாரம் எழுந்தது. சிவகணங்கள் பாடினர்; ஆடினர்; பலவகை வாத்தியங்கள் முழங்கின.
எச்சதத்தன் சிவபூசைக்கு இடையூறு விளைவித்தான்; இருப்பினும் சிவலோகம் அடைந்தான். விசாரசருமரின் திருக்கையில் இருந்து மழுவினால் அவன் தண்டிக்கப்பட்ட புண்ணியம் அவனைச் சிவலோகம் சேர்த்தது.
செந்தழற் கடவுள் சிவபெருமானுடைய மகனானார் சண்டேசுர நாயனார். “சிவபெருமானுக்குச் சிவனடியாரால் அன்புடன் செய்யப்படும் செயல் எதுவாக இருந்தாலும் அதுவே தவம் ஆகும்.”

No comments:

Post a Comment