Monday, April 27, 2015

இராமர் காட்டும் நிர்வாக அறிவுரைகள்


இராமர் காட்டும் நிர்வாக அறிவுரைகள்
சோ
அரச தர்மம், அரசனின் வார்த்தை, ஆட்சி முறைமை, போன்றவற்றில் எல்லாம் இராமருக்கு முழுமையான ஈடுபாடு இருந்தது என்பதை, வால்மீகி இராமாயணத்தில், பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.
இதற்கு சரியான எடுத்துக்காட்டு, பரதனிடம் இராமர் கேட்ட கேள்விகள். இராமர், பட்டத்தைத் துறந்து, காட்டுக்குப் போன செய்தி கேட்டுத் துடித்துப் போன பரதன், அவரைச் சந்தித்து மீண்டும் நகருக்கு அழைத்து வந்து, அவரே அரச பதவியை ஏற்குமாறு செய்கிற எண்ணத்துடன் காட்டிற்குச் சென்றான். பரிவாரங்கள் புடைசூழ வந்த பரதனை வரவேற்ற இராமர், தன் குடும்பத்தினர் நலன்களைப்பற்றி விசாத்தார் - அது ஒரு சம்பிரதாய அளவில், சில வார்த்தைகளிலேயே முடிந்து விட்டது. ஆனால், அதற்குப் பின்னால் ஆட்சி எவ்வாறு நடக்கிறது என்ற ராமரின் விசாரணை நீண்டதாக அமைந்தது. ‘இது நடக்கிறதா; இது நடக்காமல் இருக்கிறதா?’ என்று ஒரு நீண்ட கேள்விப் பட்டியலையே பரதன் முன் வைத்தார் இராமர்.
அந்தப் பட்டியலை முழுமையாகப் பார்த்தால், ஆட்சி எப்படி நடக்க வேண்டும், எதை எதைச் செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் - என்பது பற்றியெல்லாம் இராமருக்கு இருந்த தீர்மானமான கருத்துகள் நமக்குத் தெளிவாகும். ஆக, ஸீதை விஷயத்தில் மட்டுமல்ல - எப்போதுமே எதிலுமே, இராஜதர்மத்தை இராமர் பெரிதும் மதித்து நடந்து கொண்டார். பரதனிடம் கேட்ட கேள்விகள் மூலமாக, இராஜ தர்மத்தைப் பற்றி ஒரு பாடமே நடத்தி விட்ட இராமர் கூறியவற்றில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
‘அடுத்த தினம் செய்யப்பட வேண்டுய காரியங்கள் குறித்து அதற்கு முன்னிரவில் ஆழ்ந்து யோசனை செய்கிறாயா?' என்று பரதனைப் பார்த்துக் கேட்டார் இராமர். அதாவது சிம்மாசனத்தில் அமர்ந்து, உத்தரவைப் பிறப்பிக்கும் போது மட்டுமல்ல; இரவிலும் கூட ஒரு மன்னன் இராஜ காரியங்களைப்பற்றி தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும்.
‘நீ மட்டுமே யோசித்து, முடிவுகளை எடுத்துவிடாமல் இருக்கிறாயா?' என்பது அடுத்த கேள்வி. ஓர் அரசன், எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும், அவன் மட்டுமே சிந்தித்து முடிவெடுத்தால், அந்த முடிவு, பல விவரங்களைப் புரிந்து கொள்ளாமலே எடுக்கப்பட்ட முடிவாக அமைந்து விடுகிற வாய்ப்பு உண்டு. பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் எடுக்கப்படுகிற முடிவாகவும் அது இருந்து விடக்கூடும். இது தவிர்க்கப்படுகிறதா என்பது இராமரின் கேள்வி.
சரி, அதற்காக தான் எடுக்க இருக்கிற முடிவுகளை, அரசன் பறைசாற்றிக்கொண்டிருப்பதா - என்ற சந்தேகம் எழலாம். இராமரின் அடுத்த கேள்வி, நமக்கு எழக்கூடிய இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறது. ‘பலரோடு கலந்து ஆலோசனை நடத்தாமல், குறிப்பிட்ட சிலருடன் மட்டும் ஆலோசனை நடத்துகிறாயா?’ என்று கேட்டார் ராமர். அது மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து ‘சிலருடன் மட்டும் கலந்து ஆலோசித்து, நீ எடுக்கிற முடிவு, அந்தக் காரியம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே வெளியே பரவி விடாமல் இருக்கிறதா?’ என்றும் கேட்டார். அதாவது ‘அஃபிஷியல் ஸீக்ரட்ஸ்’ பாதுகாக்கப்பட வேண்டும். அதைப் பாதுகாக்கிற நபர்களுக்கே, அது முன் கூட்டித் தெரிவிக்கப்படலாம். இதை இராமர் விளக்குகிறார். ‘நீ எடுக்கிற முடிவு, அது நிறைவேற்றப்பட்ட பிறகுதான் - அல்லது உடனே நிறைவேற்றப்படப் போகிறது என்ற நிலையில்தான் - மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறே நடக்கிறதா?’ என்றும் கேட்டார் இராமர். அரசு நிர்வாகத்தின் ஆரம்பப்பாடங்கள் மாதிரி அமைந்தன இந்தக் கேள்விகள்.
‘பெண்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா? அவர்களுக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா?’ என்றும் இராமர் கேட்டார். மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பெண் விடுதலை - என்ற பேச்செல்லாம் இல்லாத காலம். அந்தக் காலத்தில், ஒரு ராஜ்ஜியத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுவது எவ்வளவு அவசியமாகக் கருதப்பட்டது என்பதை இராமரின் கேள்வி சுட்டிக்காட்டுகிறது.
அதே சமயத்தில் இன்றைய பெண் உரிமையாளர்கள் ஏற்க முடியாத ஒரு விஷயமும், இராமரால் குறிப்பிடப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசிவிட்டு, ‘அவர்களை முற்றிலும் நம்பி விடாமல் இருக்கிறாயா? அவர்களுக்கு ரகசியங்கள் தெரிவிக்கப்படாமல் இருக்கின்றன அல்லவா?’ என்றும் கேட்டார் இராமர். இது பெண்களின் இயற்கையான சுபாவத்தை ஒட்டிய கேள்வி. இதில் அடங்கியிருப்பது, அலங்கார கோஷம் அல்ல; அனுபவ உண்மை.
‘வர்த்தகர்கள், பயிர்த்தொழில் செய்பவர்கள் ஆகியோர், தங்கள் தொழில்களில் எந்த இடையூறுகளையும் சந்திக்காமல் இருக்கிறார்களா?’ விவசாயம் அவசியம்; ஆனால் அது மட்டுமே போதாது. ஆகையால் வர்த்தகத்தின் நன்மையையும் ஓர் அரசு பேண வேண்டும் என்பதைக் காட்டுகிற கேள்வி அது. தொழிற்சாலைகளும், பொருளாதாரமும் பெருகி, உலகமய வர்த்தகம் தோன்றி விடாத காலத்திலேயே, அயல்நாட்டிற்கு ஏவல் பணி செய்யாமலேயே, முதலாளிகளுக்கு விலை போய்விடாமலேயே கூட, ‘விவசாயம் மட்டும் போதாது; வர்த்தகமும் தேவை’ என்ற நிலை இருந்ததை நமக்குப் புரிய வைக்கிற கேள்வி இது.
இப்போது ‘அக்ஸெஸிபிலிடி’ பற்றி நிறையப் பேசுகிறோம். ஆட்சி புரிகிறவர்கள், யாராலும் சந்திக்க முடியாதவர்களாக இருந்தால், அது பற்றி விமர்சனம் எழுகிறது. இந்த விஷயம் கூட, அப்போதே இராமரால் பேசப்பட்டிருக்கிறது. பரதனைப் பார்த்து இராமர் கேட்ட கேள்விகளில் ஒன்று:
‘பணியாட்கள், அரசனை எப்போது வேண்டுமானாலும், தங்கள் இஷ்டப்படி சந்திக்கலாம் என்கிற நிலையும் தவறானது. அவர்கள் அரசனை சந்திப்பது என்பது மிகவும் கடினம் என்ற நிலையும் தவறு; இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுத்தரமான நிலைதான் சரியானது. அதுதான் ஆட்சிக்கு நன்மை தரும். நீ அவ்வாறு நடந்து கொள்கிறாயா?’ இப்படி, இன்றைய ஆட்சியாளர்களுக்கும், பொருந்தக்கூடிய அறிவுரை அன்றே வழங்கப்பட்டிருக்கிறது.
பட்ஜெட் பற்றியும், பற்றாக்குறை பட்ஜெட் பற்றியும் ஆண்டு தோறும் நாம் பேசுகிறோம். இது பற்றி இராமர் கருத்து - அதாவது அன்றைய இராஜதர்மம் - அவருடைய ஒரு கேள்வியில் இவ்வாறு இடம் பெற்றது:
‘உன்னுடைய செலவு, உன்னுடைய வரவை மிஞ்சி விடாமல் பார்த்துக் கொள்கிறாயா?’ இங்கே இராமர் ‘உன்னுடைய’ என்று சொல்வது - ‘ஆட்சியில்’ என்ற பொருள் உடையது. ஆட்சியின் பிரதிநிதியாகத்தான், அங்கே பரதனைக் காண்கிறார் இராமர். அதாவது, அன்றைய இராஜதர்மம் ஏற்கவில்லை. அதைச் சரியான பொருளாதார நிர்வாகமாக அன்றைய ஆட்சியாளர்கள் பார்க்கவில்லை.
நீதி நிர்வாகம் பற்றியும் இராமர் பேசியிருக்கிறார்: ‘நன்னடத்தை உடையவன், சரியான விசாரணையின்றி, தண்டனைக்குள்ளாகி விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதா? ஒருவனுடைய குற்றம் நிரூபிக்கபட்டு விட்ட நிலையில் - விசாரணையில் தொடர்புடையவர்களின் பொருளாசையால், அந்தக் குற்றவாளி விடுவிக்கப்படாத வண்ணம் நீதி நிலைநாட்டப்படுகிறதா? ஒரு பணக்காரனுக்கும், ஓர் ஏழைக்குமிடையே ஒரு விவகாரம் வருகிறபோது, உன் அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல், அவர்களுடைய வழக்கை விசாரிக்கிறார்களா?’
ஆக, ஒரு நீதி விசாரணையில் நிகழ்ந்து விடக் கூடிய தவறுகள் பற்றி சிந்தித்துப் பார்த்து, அந்தத் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது ஆட்சியாளனின் கடமை என்பதை அன்றைய இராஜதர்மம் வலியுறுத்தியிருக்கிறது. நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது; அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுவிடக் கூடாது; பணக்காரனையும், ஏழையையும் நீதிமன்றம் சரிசமமாக நடத்த வேண்டும் என்பதெல்லாம், ஏதோ மேலைநாடுகளிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்து விட்ட, ‘இம்போர்ட்டெட் தர்மங்கள்’ அல்ல. இந்த நாட்டிலேயே பல பற்பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இதில் எல்லாம் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் இராஜதர்மத்தின் ஒரு பகுதியாக நீதி நிர்வாகம் பல நூல்களிலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இராமரின் கேள்விகளும் இதையே சுட்டிக்காட்டுகின்றன.
நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று கூறும்போது இராமர் ஒரு நீதியைச் சொன்னார்: ‘பரதா! தவறாக தண்டிக்கப்பட்டு விட்டவன் சிந்துகிற கண்ணீர், மன்னனின் குலத்தையே அழிக்க வல்லது என்பதை உணர்ந்து, வழக்குகள் விசாரிக்கப்படுகின்றனவா?’ இன்று ‘நூறு குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது’ என்பது ஒரு தத்துவம்; அவ்வளவே. ஆனால் அன்றே, நிரபராதிக்கு அளிக்கப்படுகிற தண்டனை, அரசனின் குலத்தையே அழிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது தத்துவம் அல்ல - கடும் எச்சரிக்கை.
இவையெல்லாம், கேள்விகள் மூலமாக, இராமர் பரதனுக்கு எடுத்துரைத்த இராஜதர்மத்தின் ஒரு சிறு பகுதியே என்பதை வாசகர்கள் நினைவில கொள்ள வேண்டும். இராஜ தர்மத்திலும், அரசனின் கடமையிலும் இராமர் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை உணர்ந்தால், ஸீதையை அவர் நடத்திய விதம், ஓர் அரசன் என்கிற முறையில்தானே தவிர, ஒரு கணவன் என்கிற முறையில் அல்ல என்பது தெளிவாகும்.

No comments:

Post a Comment