Monday, October 20, 2014

அற்புதம் மிகுந்த அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று கோவில்களில் மூட்டைக் கணக்கில் அரிசியை வடித்து சுவாமிக்குச் சாத்தி (அன்னாபிஷேகம் செய்து), அந்த அன்னத்தை ஏழைகளுக்குக் கொடுப்பார்கள். இதே போல் வீடுகளிலும் கூட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது உண்டு.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக பலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது.

இதை அன்னத்வேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் என்பது நிச்சயமாக உண்மை. எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்கிறோம் அல்லவா?

அந்த முறைப்படி ஐப்பசியில் அறுவடையான புது நெல்லைக் கொண்டு சாதமாகச் செய்து, அதை முழுமையாக சுவாமிக்கு சாத்துவது, இந்த ஐதீகத்தின் முறை என்றும் காரண காரியம் கூறப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தில் உலகளாவிய தத்துவம் ஒன்றும் உள்ளடங்கிக் கிடக்கிறது.

அதாவது சிவலிங்கத்தைப் பற்றிய உண்மையான விளக்கம், ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட சமஸ்கிருத கந்த புராணத்திலும், தமிழில் 3 ஆயிரம் பாடல்களைக் கொண்ட திருமூலரின் திருமந்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா? சிவலிங்கம் என்பது ஆகாயம்.

ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.

அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான– தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்.

அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நித்திய அன்னாபிஷேகம் நடைபெறும்.

அதை செய்பவர்களும், தரிசிப்பவர்களும் அன்னத்துக்குக் கஷ்டப்படாமல் இருப்பது நிதர்சனமான உண்மை. அந்த ஊருக்கே ‘அன்னம்பாலிக்கும் ஊர்’ என்றே பெயர் வழங்கப்படுகிறது

No comments:

Post a Comment