Monday, October 20, 2014

விஜயதசமி நன்னாளில் கல்வியை தொடங்குவது ஏன்?

விஜயதசமி நன்னாளில் பெரும்பாலான குழந்தைகளைப்படிக்கவைக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? ஆதிசங்கரர், தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது `மண்டனமிஸ்ரர்' என்னும் வேறு சமயத்தைப் பின்பற்றும் ஞானியுடன் விவாதம் செய்ய நேர்ந்தது.

போட்டியில் ஆதிசங்கரர் வெற்றிபெறவே, மண்டனமிஸ்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார். அப்போது மண்டனமிஸ்ரரின் மனைவியான சரசவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறுகிறாள்.

ஆனால் ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று கூற, சரசவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.

அப்படியில்லாமல் அவர்கள் திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை என்றும் கூறவே, அதன்படியே பயணம் தொடருகிறது. சிருங்கேரி (சிருங்க கிரி) மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் மேலும் பயணத்தைத் தொடரும் முன்னால் அங்கே ஒரு கர்ப்பிணியான தவளை பிரசவித்துக் கொண்டிருக்க, அந்தத் தவளைக்கு வெயில் தாக்காதபடி ஒரு பாம்பு படம் உயர்த்தி குடை பிடிக்கும் அற்புதத்தைப் பார்க்கிறார்.

அந்தப் புனிதமான இடம் மகான் ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் எனப் புரிந்து கொண்ட ஆதிசங்கரர் இந்த இடமே தானும் தன் சிஷ்யர்களும் தங்கியிருக்கத் தகுந்த இடம் எனத்தீர்மானத்து திரும்பிப் பார்க்கவே, சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவாகி நின்று விடுகிறாள்.

அத்துடன் அவள் ஆதிசங்கரரிடம் அசரீரியாக, `சாரதை'யாக தான் இங்கேயே இருப்பதாகவும், இந்தத் தலத்தில் தன்னைப் பூஜித்து வருபவர்களுக்கு, தன்னுடைய அருள் பரிபூரணமாகக்கிட்டும் எனவும் கூறிகிறாள்.

அப்படி சிருங்கேரியில் `சாரதை' குடிகொண்டநாள் `விஜயதசமி' எனவும், அன்று அவளைப் பூஜித்து குழந்தைகளைப் படிக்கவைக்க ஆரம்பித்தாலோ, கல்வி கற்கும் மாணவர்கள் அன்றைய தினத்தில் கொஞ்சமாவது படித்தாலோ சாரதையின் அருள் பரிபூரணமாகக்கிட்டும் என்பது ஐதீகம் ஆகியது

No comments:

Post a Comment