Monday, October 20, 2014

மகிஷம் என்றால் எருமை நவராத்திரி பிறந்த கதை

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.

மகிஷம் என்றால் எருமை. இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம். ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள். இரவெல்லாம் விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர்.

இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு:- சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர்.

எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர்.காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மயூர வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற

இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.

இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர்.

இந்த வைபவம் நவராத்திரிஎனப்படுகிறது.  படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே.

முத்தொழில் புரியும் மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.

அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கவேண்டும்.

வணங்குவதால் எதையும் பெறலாம். கல்வி, இசை, புகழ், செல்வம் தானியம்,வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள். ஆதிபராசக்தியை துர்க் கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித் தால் செல்வம் பெருகும்.

சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

இதற்கு காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.*

No comments:

Post a Comment