Monday, October 20, 2014

நந்தனாருக்கு வழிவிட்டு நகர்ந்த நந்தி

சோழவள நாட்டைச் சேர்ந்த ஆதனூர் அருகில் விவசாய தொழிலைக் கொண்டவர்கள் வசித்து வந்தவர். அந்த குலத்தைச் சேர்ந்தவர் நந்தனார். மண்ணில் பிறந்த நாளில் இருந்து மகேஸ்வரனின் மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தார்.

இறை தொண்டும் ஆற்றி வந்தார். தம் குலத் தொழிலில் சிறந்து விளங்கிய நந்தனார், அதில் கிடைக்கும் வருமானத்தில், கோவில்களுக்கும் இறைவனுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கி வழங்கி வந்தார். இருப்பினும் அந்த காலத்தில் நந்தனாரின் குலத்தைச் சேர்ந்தவர்கள், ஆலயத்திற்குள் சென்று, இறைவனை வழிபட தகுதியற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர்.

இதனால் நந்தனார் ஆலயத்திற்குள் செல்லாமல் வெளியில் நின்றே இறைவனை தொழுவார், பாடுவார், ஆனந்தக் கூத்தாடுவார். ஒருமுறை திருப்புன்கூர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகநாதரைத் தரிசிக்க நந்தனார் எண்ணம் கொண்டார்.

கோவிலுக்கு தன்னால் இயன்ற திருப்பணியைச் செய்யவும் சித்தம் கொண்டார். அதன்படி திருக்கோவிலை சென்றடைந்தார். சிவலோக நாதரைக் கோவிலின் வெளியில் இருந்து தரிசிக்க முயன்ற நந்தனாருக்கு, இறைவன் எதிரில் இருந்த நந்தி தடையாக இருந்தது. அதனால் இறைவனை சரியாக நந்தனாரால் பார்க்க முடியவில்லை.

இறைவனை நினைத்து உருகினார், பக்தனின் பக்தியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் உத்தரவுப்படி, நந்தி சற்று நகர்ந்தது. இப்போது நந்தனாருக்கு இறைவனின் தரிசனம் கண்குளிரக் கிடைத்தது. சிவனின் மீது பற்று கொண்ட நந்தனாருக்கு தில்லை சென்று சிதம்பர தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

அது பல ஆண்டுகளாகியும் முடியாத நிலையில் இருந்தது. நாளைக்கு போவேன், நாளைக்கு போவேன் என்று அவர் தனக்குள்ளாகவே கூறியபடி தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே நந்தனாருக்கு திருநாளைப் போவார் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு முறை தில்லையம்பதியனை தரிசிக்கும் இறுதியான முடிவுடன் புறப்பட்டுச் சென்று, தில்லையின் எல்லையை அடைந்தார். அங்கே அந்தணர்கள் நடத்திய வேள்வியால் எழுந்த புகை மண்டபம் கோவிலை மூடியிருந்தது. அந்தக் காட்சி, கயிலாய மலையை நந்தனாருக்கு நினைவுபடுத்தியது.

ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தார். இருப்பினும், கோவிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலையை நினைத்து வருந்தினார். ஆலயத்தின் கதவுகள் பக்தர்களுக்காக இரவும் பகலும் திறந்திருந்தபோதிலும் சமூகத்தின் தீண்டாமை நோய் காரணமாக அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.

எனவே இறைவனை நினைத்து உள்ளம் உருக தன் வேதனையை கூறி மன்றாடினார். பல நாட்களாக அங்கேயே தங்கியிருந்து ஏதாவது ஒரு வாய்ப்பில் உள்ளே செல்ல முடியாதா என்று காத்திருந்தார் நந்தனார். அப்போது ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘நந்தா! வருந்தாதே! எமது தரிசனம் உனக்குக் கிட்ட வழி செய்கிறேன்.

இப்பிறவி நீங்கிட அனலிடை மூழ்கி, முப்புரி நூலுடன் என்முன் சேர்வாய்’ என்று கூறி மறைந்தார். பின்னர் கோவில் பணி செய்யும் அந்தணர்களின் கனவில் தோன்றிய இறைவன், ‘என்னை வழிபட்டு மகிழும் நந்தன் திருக்குலத்திலே தோன்றியவன்தான்.

திருமதில் புறத்தே அவன் படுத்திருக்கிறான். நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து, என் சன்னிதிக்கு அழைத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டார். மறுநாள் காலைப் பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ச்சியோடு எழுந்து பரமன் பணித்தபடி மதிலின் புறத்தே வந்தனர்.

எம்பெருமானை நினைத்து உருகும் நந்தனாரை அணுகி, ‘அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம். பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக’ என்று வேண்டிக் கொண்டனர்.

அவ்வாறே நெருப்பிடை மூழ்கி எழுந்த நந்தனார், பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், ருத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்கத் தூய முனிவரைப் போல் சடை முடியுடன் வெளியே வந்தார். நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ந்தனர். அவரை வாழ்த்தி வணங்கினர்.

சிவ கணங்கள் வேதம் முழங்கின. நான் மறைகள் ஒலித்தன. அந்தணர் வழிகாட்ட நந்தனார் முன் சென்றார். கரங் குவித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே ஆடுகின்ற கூத்தபிரானின் திருமுன் நின்றார். அவர் திரும்பவே இல்லை. இறைவனுடன் ஐக்கியமாகி விட்டார்.

No comments:

Post a Comment