Thursday, April 16, 2015

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
ஆலயங்கள் அமைத்து, அங்கு தெய்வ திருவுருவச் சிலைகளை எழுந்தருளச் செய்து அவற்றை வழிபடுவதன் மூலம் ஆத்ம ஈடேற்றமும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யும் வழிமுறைகளை ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர்.
அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.
”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம்  தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை.
கதிர்வீச்சு பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எனது முன்னோர் அறிந்திருந்தார்கள் என்பது அவர்களால் எமக்கு அறிமுகம் செய்த ஆன்மீக தடயங்கள் எடுத்தியம்புகின்றன.
நாம் பல நல்ல, தீய கதிர் வீச்சுகள் நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மூலகங்களில் சக்திமாற்றம் ஏற்படும் போது கதிர்வீச்சு தோன்றுகின்றது. இதனை நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் அதன் தாக்கங்களை எம்மால் உணரமுடியும். நல்ல கதிர்வீச்சு சக்திகளை வெளிப்படுத்தும் வகையிலேயே ஆலயங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
ஆகம விதிப்படி கோயில் அமைக்கப்பெற்று, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது  (12 வருடங்களுக்கு ஒருமுறை) கும்பாபிஷேகம் செய்யப்பெற்று வழிபாடு நடந்து கொண்டிருக்கும் கோயில்களில் உள்ள கோபுரங்களின்  மேல் தங்கத்தாலும் அல்லது செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில்  உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவீசுகின்றன. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை,  ஆன்மீக  ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.
காலையில் கோபுர தரிசனம் - நோய் நீக்கும்
மதியம் கோபுரதரிசனம் - செல்வ வளம் பெருகும்
மாலையில் கோபுர தரிசனம் - பாவம் போக்கும்
இரவு கோபுர தரிசனம் - வீடு பேரு கிடைக்கும்
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.
கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இணையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது. சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை "ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்பர்.
கோயிலின் உள்ளே இருக்கக்கூடிய இறைவனின் பிரதிபிம்பம் தான் கோபுரங்கள், உதாரணமாக ஒரு கோயிலுக்குள் கணபதி. முருகன், பெருமாள். அம்மன். கிருஷ்ணர். இராமர் போன்ற தெய்வங்களின் விக்ரஹங்கள் உண்டு என்பது நாம் அறிந்த ஒன்றே! கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள். உடல் ஊனமுற்றோர் போன்றோர் கோபுரத்தைத் தரிசித்தாலே போதும், உள்ளேயிருக்கக்கூடிய எல்லாத் தெய்வங்களின் பிரதிபிம்பம் தான் கோபுரம்,
நாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது கோபுரங்களும். கோபுர கலசங்களும் தான் நம் கண்ணுக்குத் தெரியும், மேலும் கோபுரத்தின் உள்ளேயிருந்து வரக்கூடிய காற்று நம் உடலை அழகாக வருடியும். மருத்துவ குணம் மிக்கதுமாக இருப்பது சிறப்பு, ஆகவே கோபுரத்தைத் தரிசித்து கோடி புண்ணியம் பெறுவோம்!
ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் இடப்பெற்றுள்ள தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கலசங்களினுள் வைத்துள்ளார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக வைத்தார்கள். காரணம் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
ஒரு இடத்தில் எது மிக உயரமாக உள்ளதோ அதுவே அந்த இடத்தின் இடி தாங்கி. அது தான் முதலில் மின்னலின் தாக்கத்தை "எர்த்" ஆக்கும். எனவே ஊரின் உயர்ந்த கட்டிடமாக திகழும் இக் கோபுரம் மின்னல் தாக்கத்தில் இருந்தும் ஊரை பாதுகாத்துக் கொள்கின்றது.
கர்ப்பக்கிரக  கோபுரத்தின் (ஸ்தூபி) மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.
அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகின்றது. அங்கு இறைவனை வணங்கி நிற்கும் நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போதும், மந்திரங்கள் செபிக்கப்பெறும்போதும் அந்த சக்தி மேலும் தூண்டப்பெறுகின்றது. கைகளை இணைத்து, மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.
இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள், உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி  ஆனந்தத்தை கொடுக்கிறது.
கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு கோமுகியுடன் கூடிய ஓர் துவாரம்  அமைக்கப்பட்டுள்ளது.  இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. நாம் உள்ளத்தூய்மை, உடல் தூய்மை அடைகின்றோம். கோபுர தரிசனம் செய்து கோடி புண்ணியம் பெறுவோம்.

No comments:

Post a Comment