Thursday, April 2, 2015

தேரோட்டத்தின் தத்துவம் என்ன?

தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்ற அசுரர்கள் மூவரும் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகள் பெற்று, தேவர்கள், முனிவர்கள், மக்களுக்கு துன்பம் இழைத்தனர். தேவர்கள் சிவபிரானிடம் தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டனர். மனம் இரங்கிய முக்கண்ணர், அசுரர்களோடு தாம் போர் புரிய, தேர் ஒன்றைத் தயார் செய்யும்படி கட்டளையிட்டார். தேவர்களும், அவரது ஆணைக்கிணங்க, பூமியைத் தட்டாகவும், வானத்தை விதானமாகவும், சூரிய சந்திரர்களை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், நான்கு திசைகளைத் துாண்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் தேரை உருவாக்கினர். பிரம்மா சாரதி; மேருமலை வில்; வாசுகி பாம்பு நாண்; விஷ்ணு அம்பு; அம்பின் நுனி அக்னி; அம்பின் வால் வாயு; இப்படியாகத் தயார் செய்து இறைவனிடம் விண்ணப்பித்தனர்.

இறைவனும் தேரில் எழுந்தருளினார். மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வரும் நேரம். அந்த நேரத்தில் தேவர்களுக்கு, மனத்துக்குள் ஒரு சிந்தனை. நாம் இல்லாவிட்டால் சிவபிரான் அசுரர்களோடு எப்படி போர் செய்ய முடியும்? நாம் தான் அசுரர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கப் போகிறோம் என்று அகந்தை கொண்டனர். உடனே தேரை விட்டுக் கீழிறங்கினார். அந்த நேரம், மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அவற்றைப் பார்த்து இறைவன் புன்னகைத்தார். அவ்வளவுதான்... அவர் புன்னகையிலிருந்து புறப்பட்ட நெருப்பு, மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தது. இந்த வரலாறே சிவாலயங்களில் தேரோட்டத்திற்கு அடிப்படை.இதன் உண்மைப் பொருளை திருமூலர் தாமியற்றிய திருமந்திரத்தில்,அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்முப்புரம் எரித்தனன் என்பர்கள் மூடர்கள் முப்புரம் என்பது மும்மல காரியம்அப்புரம் எய்தமை யார் அறிவாரே என்று அருளிச் செய்கின்றார். சைவ சித்தாந்த தத்துவப்படி உயிர்கள் ஆணவம், கர்மம், மாயை எனும் மூன்று மலங்களிடம் சிக்கியுள்ளன. இவற்றிடமிருந்து உயிர்களை மீட்டு அழியாத முக்தி இன்பத்தை இறைவன் தருகிறார். அதை தான் முப்புரம் எரிசெய்த வரலாறு விளக்குகிறது என்கிறார், திருமூலர்.

No comments:

Post a Comment