Monday, April 6, 2015

சத்தியம் தவறாதவர்களின் சக்தியை விளக்கும் கதை இது.

சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அரிச்சந்திரன் பட்டபாடு நன்றாகவே தெரியும். ஆனால், ஐந்தறிவு படைத்த ஜீவன் ஒன்று பட்ட பாடு தெரியுமா!
மன்னன் பிரபஞ்சனன் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மான் தன் குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தது.
மானின் மீது அம்பைத் தொடுத்தான்.
மான் துடித்தபடி, ""மன்னா! குட்டிக்கு பால் தரும் வேளையில் அம்பெய்த, இரக்கமில்லாத நீ புலியாக மாறக்கடவது'' என சபித்தது.
""என்னை மன்னித்து விடு!'' என மன்னன் வேண்டினான்.
அதற்கு மான், ""நூறு ஆண்டு காலம் நீ புலியாக இருப்பாய். அதன் பிறகு நந்தா என்ற பசுவின் மூலம் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்'' என்று சொல்லி உயிர் விட்டது. புலியாக மாறிய மன்னன் பழைய வரலாறை மறந்து, புலியின் குணம் கொண்டான்.
ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள் அந்தி சாயும் நேரம்...... மழை பெய்யத் தொடங்கியது. காட்டில் மேய வந்த பசுக்கள் ஓடத் தொடங்கின. ஒரு பசு மட்டும், மரத்தடியில் ஒதுங்கி நின்றது. சற்று நேரத்தில் மழை நிற்க, மரத்தடியில் நின்ற பசு, புலியின் கண்ணில் தென்பட்டது. ""ஆ...! இன்று என் குட்டிகளுக்கு நல்ல இரை சிக்கி விட்டது'' என்று வழிமறித்தது. அந்தப் பசு தான்...... நந்தா.
புலியிடம் அந்த பசு,""என் கன்றுக்குட்டி பசியோடு காத்திருக்கும். நான் பால் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன். அதன் பிறகு என்னை உணவாக்கிக் கொள்'' என்று வேண்டியது.
புலி மறுத்தது. ஆனால், பசு அதனிடம், ""சொன்ன சொல்லைக் காப்பாற்றுவேன். வரத் தவறினால் வாக்கு தவறிய பாவம் என்னை வந்து சேரட்டும்,'' என்று சொல்லி பாவங்களைப் பட்டியலிட்டது.
அதன் பேச்சை நம்பிய புலி சம்மதித்தது. ""சரி! நீ போய் உடனே திரும்பி விடு. பொய் சொல்லி உயிர் தப்பலாம் என்று யாராவது சொல்லி, மனதை மாற்ற முயல்வார்கள். வாக்கு தவறாமல் வந்து விடு'' என்றது.
பசு வேகமாகப் போய் கன்றுக்குப் பாலூட்டியது. அதன் பின் கன்றை மற்ற பசுக்களிடம் ஒப்படைத்து விட்டு புலியிடம் திரும்பியது.
""என் கடமை முடிந்தது. என்னை நீ உணவாக்கிக் கொள்ளலாம்'' என்றது. அந்த நேரத்தில் கன்றும் வந்து, ""என் தாயுடன் என்னையும் சேர்த்து உண்,'' என்றது.
புலி அதிர்ந்து போய், ""நான் இறந்தால் என் குட்டிகள் எப்படி நிர்கதியாக துன்பப்படும்? அப்படித் தானே உனக்கும் இருக்கும்! இனிமேல் அடுத்தவரைக் கொன்று வாழ மாட்டேன். எனக்கு உபதேசம் செய்,'' என்று வேண்டியது.
பசுவும்,""எவன் ஒருவன் எல்லா உயிர்களுக்கும் அபயம் அளிக்கிறானோ அவன் தெய்வத்தை அடைகிறான்,'' என உபதேசித்தது. அப்போது தான் புலிக்கு பூர்வ ஞாபகம் வந்தது. அந்தப்பசு தான் நந்தா என்று புரிந்தது. அதே விநாடியில் சாபம் நீங்கி மன்னனாக மாறியது.
சத்தியமும், தர்மமும் சேர்ந்த வடிவில் நின்ற நந்தா பரம்பொருளுடன் கலந்தது. அன்று முதல் சரஸ்வதி நதிக்கு, "நந்தா சரஸ்வதி' என்ற சிறப்பு பெயர் உண்டானது. சத்தியம் தவறாதவர்களின் சக்தியை விளக்கும் கதை இது.

No comments:

Post a Comment