Thursday, October 16, 2014

கோவிலில் பயன்படுத்துவதற்கென்றே சில சொற்கள்

கோவிலில் பயன்படுத்துவதற்கென்றே சில சொற்கள்
அவற்றைத்தான் கோவிலில் பயன்படுத்தவேண்டும். சாதம் கோவிலில் பிரசாதமாகிவிடும். சுவாமி திருவீதியுலா வருவதை எழுந்தருளல் என்று சொல்வார்கள்.
சிலர், "சாமியைத் தூக்கியாச்சா' என்று கேட்பார்கள். கடைசிப் பயணம் போகிறவர்களைத்தான், "தூக்கியாச்சா' என்று கேட்பது வழக்கம். வார்த்தைகள் மாறும்போது அர்த்தம் அனர்த்தமாகிவிடும். அதுபோல "கோவிலைப் பெருக்கியாச்சா' என்றும் கேட்கக்கூடாது. அதற்கெனவே ஒரு வார்த்தையிருக்கிறது. "திருஅலகு பரிமாறுதல்' என்பதே அது.
அறிந்த சிறிய கதை!!
திருவானைக்காவல் ஆலய மடைப்பள்ளியில் ஒரு சமையல்காரன். அவனுக்கு பிரசாதம் செய்துவைப்பது தவிர நன்குதெரிந்த விஷயங்கள் இரண்டு. ஒன்று நன்றாகத் தூங்குவது; அடுத்தது வாய்சிவக்க தாம்பூலம் போடுவது.
ஒருநாள் அவன் பிரசாதம் தயாரித்து வைத்துவிட்டு தாம்பூலம்போட விரும்பினான். கையில் வெற்றிலைப் பாக்கு எதுவுமில்லை. கடையில் போய் வாங்கிவந்து போடுமளவுக்கு அவனுக்குப் பொறுமையில்லை. தூக்கம் ஆளை அசத்துகிறது. தூண்மேல் சாய்ந்து உட்கார்ந்தவன், அடுத்த நிமிடம் அயர்ந்து தூங்கிவிட்டான். இரவானது. மடைப்பள்ளி சமையல்காரன் கோவிலுக்குள்ளேயே தூங்கிக்கொண்டிருப்பது தெரியாமல், கோவிலை சாற்றிவிட்டுப் போய்விட்டனர்.
கோவிலில் ஒரு ஐதீகமுண்டு. மனிதர்களாகிய நாம் பூஜைகளையெல்லாம் முடித்து நடைசாற்றிய பிறகு, தேவர்கள்வந்து தெய்வங்களுக்குப் பூஜை செய்வார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் இன்றைக்கும் இரவில் பூஜை முடித்து வைத்துவிட்டுப்போன பொருட்கள் காலையில் வந்து பார்க்கும்போது இடம் மாறியிருக்குமாம்.
அப்படி இரவில் தேவர்கள் செய்யும் பூஜையை ஏற்றுக்கொண்டபின் தெய்வங்கள் ஆலயப் பிராகாரத்தை வலம்வருவார்கள். கிராமப்பகுதிகளில் விளக்கு வைத்தபிறகு, ஊரெல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களின் கோவிலருகே நடமாடக்கூடாதென சொல்வார்கள். அதற்கொரு காரணமிருக்கிறது. நகரைக் காவல் காப்பதற்காக அந்த தெய்வங்கள் ஏதோவொரு ரூபத்தில் வலம்வரும். அவர்களைப் பார்க்கும் ஆற்றல் மனிதனுக்குக் கிடையாதென்பதால் தான் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கின்றன.
மேற்சொன்னதுபோல தேவர்களின் பூஜையை அம்பிகை அகிலாண்டேஸ்வரி ஏற்றுக்கொண்டபின் ஆலயத்தை வலம்வரக் கிளம்புகிறாள்.
அப்படி வரும்போது மடைப்பள்ளி சமையல்காரன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். சமையல்காரனின் பூர்வ புண்ணியம் அது! அம்மா பார்த்துவிட்டு சும்மா போவாளா? தட்டியெழுப்புகிறாள்.
நாம் சில நேரம் வீட்டிலேயே பார்க்கலாம். குழந்தைகள் வெளியே போய் ஓடியாடி விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும். வந்ததும் வராததுமாக உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்துவிடுவான். ""டேய் தூங்கிடாதடா, முடிச்சதும் தோசை சுட்டுத்தர்றேன்'' என்று சொல்லிவிட்டு தாயார் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிடுவாள். நேரம் போவது தெரியுமா? பையன் வீட்டுப்பாடம் எழுதிவிட்டு அப்படியே படுத்துத் தூங்கியிருப்பான். இடையில் வீட்டுக்காரர் வந்து அவர் இன்னொரு பக்கம் படுத்துத் தூங்கியிருப்பார்.
பிறகு தாயானவள் அவசரமாக தோசை வார்த்து கணவனுக்குக் கொடுத்துவிட்டு, பையனை எழுப்புவாள். அவன் எழுந்துகொள்ளாவிட்டாலும் தூக்கி உட்காரவைத்து எப்படியாகிலும் ஒரு தோசையையேனும் ஊட்டிவிடுவாள்.
அப்போதுதான் அவளுக்கு நிம்மதி. தன் பிள்ளை பசியோடு தூங்கக்கூடாது என்பதுதான் அம்மாவுடைய கவலை.
ஒரு ஜென்மத்தில் தாயாக வருகிறவளுக்கே பிள்ளைமேல் இவ்வளவு அக்கறையிருக்கும்போது, நம்முடைய எத்தனையோ ஜென்மங்களில் தாயாக விளங்கிவரும் அந்த அம்பாளுக்கு பிள்ளைகள்மேல் எவ்வளவு கருணையிருக்கும்?
ஒருநாள் திடீரென்று கடவுள் வந்து "என்ன வேண்டும்' என்று கேட்கிறார். "கடவுளெங்கே நேரில் வரப்போறார்' என்று நாம் நினைக்க லாம். பரவாயில்லை; வருவதாக கற்பனை செய்துகொள்வோம். அப்படி கேட்கும்போது நாம் அவரிடம் என்னவெல்லாம் கேட்கலாம்?
கடவுளிடம் கேட்டால் எது வேண்டுமானாலும் கிடைக்கும். அதனால் பங்களா, கார்... இப்படி கேட்கலாம்.
சிலர் "இதையெல்லாம் நாமே உழைச்சு சம்பாதிச்சுக்கலாமே!' என்று நினைக்கலாம். எனவே ஒருவர் தன்னிடம் இல்லாதது எதுவோ அதைத்தான் இறைவனிடம் கேட்கவேண்டும். இல்லையா... அப்படியென்றால் சந்தோஷம் வேண்டுமென்று கேட்கலாமா? இந்த உலகம் இன்பமானதா- துன்பமானதா?
இந்த உலகின் இயற்கையே துன்பம்தான். துன்பத்தை இன்பமாக மாற்றத்தான் நாம் ஆயுள் முழுக்க சிரமப்படுகிறோம். அதனால்தான் ஞானிகள் "உலக வாழ்க்கை துன்பமயமானது' என்று சொன்னார்கள். அவர்கள் கடவுளிடம் "பிறவாப் பெருவரம்' கேட்டார்கள். ஒருவேளை நாம் செய்த வினைப்பயன் தீராமல் பிறக்க நேர்ந்துவிட்டால், "என்றுமுனை மறவா வரம்வேண்டும்' என்று இறைவனிடம் மன்றாடினார்கள்.
அவரவருக்குத் தகுந்தமாதிரி கேட்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
தூங்கிக்கொண்டிருக்கும் சமையல் காரனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று அன்னை விரும்பினாள்.
அவனைத் தட்டியெழுப்பி "என்ன வேண்டும்?' என்று கேட்டாள்.
அவனுக்கோ தூக்கக் கலக்கம். யாரோ "என்ன வேண்டும்?' என்று கேட்பது காதில் விழுகிறது.
திருவானைக்காவல் மடைப்பள்ளி சமையல்காரன் அகிலாண்டேஸ்வரியிடம் கேட்டுப் பெற்றது என்னவென நினைக்கிறீர்கள்? அவன் படுக்கும்போது வெற்றிலைப் பாக்கு போடவேண்டுமென்ற எண்ணத்தோடே படுத்தான். அதனால் தூக்கக் கலக்கத்திலேயே "வெத்திலை பாக்கு' என்று கேட்டான்.
கடவுள் வரமருள வந்து நிற்கையில் வெற்றிலைப் பாக்கு கேட்ட ஒரே ஆள் இவன் ஒருவனாகத்தான் இருக்கும்.
பெண்களுக்கு சில கடமைகள் உண்டு. உணவு விஷயத்தையே எடுத்துக்கொண்டால், உணவு தயாரானதும் வீட்டிலுள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு உணவு கொடுத்து, கணவனுக்குப் பரிமாறி, கடைசியாக மனைவி சாப்பிடவேண்டும். இதுதான் மரபு. அதேபோல இரவு உணவுக்குப்பின் கணவனுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்; பின் தானும் தரித்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு நியதியுண்டு.
ஆணுக்கும் சில நியதிகள் உண்டு. ஒரு ஆண் தன் மனைவியின் கையால் மட்டும்தான் தாம்பூலம் வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக வெற்றிலைப் பாக்கு கடையில்தானே வாங்குகிறோம். அவர் பிறரில்லையா என்று கேட்கக்கூடாது. வெற்றிலைப் பாக்கு வாங்குவது வேறு; மடித்துத் தருவது வேறு. மனைவியிடம் மட்டும்தான் கணவன் மடித்துத் தரும் வெற்றிலையை வாங்கிக்கொள்ளவேண்டும்.
தாம்பூலம் மகாலட்சுமிக்கு சமமானது.
கணவன்- மனைவி இருவர் மட்டுமே தாம்பூலம் பரிமாறிக்கொள்கிறவரை மகாலட்சுமி இல்லத்தில் நிரந்தரமாக இருப்பாள்.
அன்றைக்கும் அம்பாள் வழக்கப்படி தாம்பூலம் தரித்து ஆலயத்தை வலம் வந்தாள். சமையல்காரன் வெற்றிலைப் பாக்கு கேட்டதும், தன் வாயிலிருந்த தாம்பூலத்தையே அவன் வாயில் இட்டுச்சென்றாள்.
அம்பாளின் எச்சில் சாதாரண எச்சிலா! அது ஞானமேயாகிய எச்சில். அது பட்டதும் ஒன்றுமே தெரியாத சமையற்காரன்- முழு மூடன்- கவி காளமேகப் புலவனாக மாறினான்.
ஆயிரக்கணக்கான பாடல்களை அம்பாள் மேல் பாடினான். அத்தனையும் அம்பாள்கொடுத்த ஞானம்.
காளமேகப் புலவர் ஒருசமயம் கும்பகோணம் வழியே போய்க்கொண்டிருக்கிறார்.
நல்ல பசி. அந்தக் காலத்தில் உணவக மெல்லாம் கிடையாது. உணவை விலைக்கு விற்பதைப் பாவமென கருதிய காலம் அது. வழிப்போக்கர்களுக்கென்று அன்னச் சத்திரம் இருக்கும்.
ஒரு அன்னச்சத்திரத்தில் போய் பிற வழிப்போக்கர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார் காளமேகம். அவருக்கு நேரெதிரே சாப்பிடுகிறவர் முன்குடுமி வைத்த சோழியர். அவருக்கு சாப்பாட்டுமேல் வெகுபிரியம்.
அள்ளி அள்ளிச் சாப்பிடுகிறார். அந்தசமயம் பார்த்துதானா அவரது கட்டுக்குடுமி அவிழவேண்டும். அவிழ்ந்த குடுமி அவரது உணவில் படுகிறது. நிதானமாக அதனை ஒதுக்கிவிடக்கூட பொறுமையில்லாமல், அவசரமாக அவிழ்ந்த குடுமியைத் தூக்கி பின்னால்விட்டபடி தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
அவர் அப்படி குடுமியை தூக்கிவிடுகையில், எச்சில் சாப்பாடு காளமேகம் இலையில் போய் விழுந்தது. அவருக்கு சும்மாவே கோபம்வரும். எச்சில் சோறு விழுந்தால் கோபத்துக்கு கேட்கவா வேண்டும். ஆத்திரம் ஒரு கவிதையாய்க் கொட்டிவிட்டது.
"சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா
சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா
திருக்குடந்தை கோட்டானே நாயே குரங்கே
உனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.'
-இதிலென்ன பெரிய வசையிருக்கிறது என்கிறீர்களா?
தமிழ் இலக்கணம் நிறைந்த அற்புதமான மொழி. பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தையைப் பயன்படுத்தாவிடில் பொருளே மாறிவிடும்.
மாடு கன்று ஈன்றது என்று சொல்ல வேண்டும்.
நாய் குட்டி போட்டது என்பதே சரி.
யானை கன்று ஈன்றதென்றும்; பன்றி குட்டி போட்டதென்றும் சொல்லவேண்டும்.
ஏன் ஒன்றை மட்டும் ஈன்றது என்றும்; மற்றதைப் போட்டதென்றும் சொல்கிறோம்.
மாடு எப்போதுமே ஒரெயொரு கன்றைத்தான் ஈனும். நாய் ஒரேமுறையில் நாலைந்து குட்டிகளைப் பிரசவிக்கும். எனவேதான் ஒரே குட்டியென்றால் ஈன்றதென்றும், நான்கைந்து குட்டியென்றால் போட்டதென்றும் சொல்கிறார்கள். அதேபோல மனிதக் குழந்தை பிறந்தால் பிறந்ததென்றும் மகான்களை திருஅவதாரம் செய்தாரென்றும் சொல்லவேண்டும்.
ஆக, காளமேகம் "உனையொருத்தி பெற்றாளே' என்று ஏன் பாடவில்லை? ஏன் ஒரு இலக்கண மீறலைச் செய்கிறார்.
முந்தைய வரியில் இருக்கிறது சூட்சுமம். ஆந்தையே, நாயே, குரங்கே என்று அடுக்கி, உனையொருத்தி போட்டாளே எனும்போது அந்த முன் குடுமிக்காரரை மனிதத் தரத்திலிருந்து இறக்கிவிடுகிறார் காளமேகம். தமிழின் இந்தச் சிறிய இலக்கண நுட்பம்கூட பொதிந்துவரும்படி கவிதை பாடும் திறன் அவருக்கு அம்பிகையின் அருளால்தான் வாய்த்தது!

No comments:

Post a Comment