Friday, April 24, 2015

மூளைச் சலவை செய்வது ஒருவனை கொலை செய்வதினும் பாவமானது

கேள்வி கேள் என்று சொல்லக்கூடிய ஒரே சித்தாந்தம் நம் சனாதன தர்மம் தான். கேள்வி கேட்காதே நம்பு, இறைவனை இறைஞ்சு, உனக்கு மறுமையில் புரிய வைப்பான் என்கிற வாய் ஜாலங்கள் இங்கு இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை, இறைவனை நம்பாதவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு போவார்கள் என்ற அச்சுறுத்தல்கள் இங்கு இல்லை.

அசைக்க முடியாத நம்பிக்கை வை ஆண்டவன் உனை ஆசிர்வதிப்பார் என்கிற மூளைச் சலவை இங்கு இல்லை.

இறைவனை உன்னால் புரிந்துக் கொள்ள முடியாது ஆகவே நம்பிக்கை வை என்கிற பசப்பல் வார்த்தைகள் இங்கு இல்லை.

கேள் கேள் கேள் !! என்கிறது சனாதன தர்மம். உயர்ந்த உபநிடந்தங்களில் முனிவர்களும், மகரிஷிகளும், சித்தர்களும் பல ஆழமான தத்துவ கோட்பாடுகளை குறித்த‌ ஆக்கப்பூர்வமாக கேள்விகளை வரவேற்று, தெளிவிக்கிறார்கள்.அத்வைதமாகட்டும், த்வைதமாகட்டும், விஷிஷ்ட அத்வைதமாகட்டும், அறிஞர்களாலும், பண்டிதர்களினாலும் விவாதிக்கப்பட்டும், விளக்கப்பட்டுமே நிறுவப்படுகின்றன.

கீதையில் 18 அத்யாயங்களில் அர்ஜுனன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். கிட்டத்தட்ட 84 ஸ்லோகங்களில் அர்ஜுனன் கேள்வி எழுப்புகிறான், பகவானோ 575 ஸ்லோகங்களில் பதில் தருகிறார், அவனை தெளிவிக்கிறார்.

இறைவன் நினைத்தால் அர்ஜுனனுக்கு எதுவே சொல்லாமல் "நான் சொல்கிறேன் என்னை நம்பு" என்று நிர்பந்தித்து இருக்கலாம். இல்லை "உன் வழி செல்" என்று அவனை விட்டிருக்கலாம். ஆனால் மிகப்பெரும் போருக்கு நடுவே, சஞ்சலப்பட்ட மனதை தெளிவிக்கிறார். கீதையில் பல அத்யாயங்களில் ஆன்மீக தேடலையும் அதன் பொருட்டு கேட்பதையும் ஊக்குவிக்கிறார். உயர்ந்த நிலையை எட்ட நினைப்பவன் மனதில் மட்டுமே உயர்ந்த கேள்விகள் பிறக்கும் என்று அறுதியிட்டு சொல்கிறார்.

இத்தனையும் சொல்லிவிட்டு கடைசியில் அர்ஜுனன் தெளிவாகி விட்டானா என்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்கிறார்.

"பார்தா இந்த கீதா சாஸ்திரம் உன்னால் ஒன்றுபட்ட மனதோடு கேட்கப்பட்டதா ? அர்ஜுனா, அஞ்ஞானத்தினால் உண்டான உன் மோஹம் அழிந்துவிட்டதா ?" என்கிறார்.[18:72]

அதற்கு அர்ஜுனன், "அச்யுதா, உங்கள் அருளால் எனது மோகம் அழிந்தது. மேலும் என்னால் ஞான ஒளி பெறப்பட்டது. இப்பொழுது நான் சந்தேகமற்றவனாக உறுதியாக இருக்கிறேன். ஆகையால் உங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்" என்கிறான். [18:73]

நான் சொன்னால் செய்தாக வேண்டும் என்றோ, என்னையே கேள்வி கேட்கிறாயா என்றோ இறைவன் சொல்வ‌தில்லை.

மூளைச் சலவை என்பது ஹிந்து மதத்தில் மிகப் பெரும் பாவம். மூளைச் சலவை செய்வது ஒருவனை கொலை செய்வதினும் பாவமானது

No comments:

Post a Comment