Sunday, April 5, 2015

சேமங்கலம்

சேமங்கலம்

கஞ்சம் என்றால் வெண்கலம். தூய வெண்கல உலோகத்தால் ஆன இசைக்கருவி சேமங்கலம். இசைக்கருவிகளில் காற்றுக்கருவி தோல் கருவி நரம்புக் கருவி என வரிசைப்படுத்தப்படுபவற்றில் கஞ்சக் கருவிகள் வகையைச் சேர்ந்தது இந்த சேமங்கலம். தாளம் பாரிமணி போன்றவற்றையும் கஞ்சக்கருவிகள்தான்.
சேமங்கலத்தை திருச்சங்குடன் இணைத்தும் வாசிக்கும் வழக்கம் தற்போதும் இருந்து வருகிறது. சில சமூகத்தவர் இல்லங்களில் துக்க நிகழ்வுகளில் சங்கு ஊதி சேமங்கலம் இசைக்கப்படுவதை இப்போதும் பார்க்கலாம். அச்சடங்கின்போது இதனை இசைத்து நிகழ்த்த ஒற்றை ஆள் போதும். அந்த நபருக்கு தாசன் என்று பெயர். ஆனாலும் கோயில்களில் வாசிக்கப்படும் சேமங்கலத்துக்கும் இறப்பு வீடுகளில் வாசிக்கப்படும் சேமங்கலத்துக்கும் வித்தியாசம் உண்டு எனச் சொல்லப்படுகிறது.
ஆலயங்களில் இசைக்கப்படும் சேமங்கலம் தூய வெண்கலத்தால் ஆன சுமார் ஒரு அடி விட்டம் கொண்ட வட்ட வடிவமானது. ஓரளவு இலக்கண வரம்பறிந்து இதை இசைக்கவேண்டும் இல்லையேல் வெண்கலம் தெறித்து நாதம் பிசகிவிடும். வட வடிவ சேமங்கலத்தின் மீது கனத்த் தேக்குக் குச்சி கொண்டு அடிக்க வேண்டும். அப்போதுதான் நாதம் பரவும். வண்டு ரீங்கரிக்கும் ஒலி கேட்கும். ஆனால் இறப்பு வீடுகளில் வாசிக்கப்படும் சேமங்கலம் பித்தளையால் ஆனது இது வேறு விதமான ஒலியைத் தரவல்லது. இந்த இரண்டின் ஒலியை வைத்தே இது இறைவன் முன்பாக இசைப்படுகிறது இது இறந்தவன் முன்பாக வாசிக்கப்படுகிறது எனச் சொல்லி விடலாம்.
முன்னொரு காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டப்பகுதிகளில் மார்கழி நள்ளிரவு நேரங்களில் இதன் ஓசையினைக் கேட்கலாம். தொட்டியப்பட்டி நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று சேமங்கலத்தை இசைத்தபடி கிராமவலம் வந்திருக்கின்றனர்.
இவர்களின் பூர்வீகம் ஆந்திரா. இவர்களை தாதர்கள் என்றே அழைத்துள்ளனர். சேமங்கலம் நேரடியான இசைக்கருவி இதில் இருந்து பரவும் ஒலி மிகவும் இயற்கையானது. வடிவத்தில் தாளத்தைக் காட்டிலும் பல சுற்றுக்கள் பெரியது. சிவன் விஷ்ணு ஆலயங்களில் சுவாமி புறப்பாடுகளின்போது பரவலாகப் பல ஊர்களில் சேமங்கலம் இசைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதன் இயக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டுமே இது கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து இசைக்கப்பட்டு வருகிறது. நான்கு கால பூஜைகளிலும் கோயிலின் இதர இசைகருவிகளுடன் சேமங்கலமும் இசைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி வேடுபறி அன்றும் தை பங்குனி சித்திரை மாதங்களில் நடைபெறும் குதிரை வையாளியின் போதும் பக்தர்கள் சேமங்கல இசையினைக் கேட்கலாம்

No comments:

Post a Comment