Monday, August 24, 2015

நேர்மை என்ற வாடாத மலர் உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் இறைவனின் செல்லப் பிள்ளை

சீனநாட்டில் இளவரசன், மன்னனாக மகுடம் சூட்டிக் கொள்வதற்கு முன்னால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மரபு இருந்தது. அழகும் அறிவும் நிறைந்த இளவரசனுக்குப் பெண் கொடுக்க பல நாட்டு மன்னர்களும் போட்டி போட்டார்கள். "சீனப் பெண்ணைத்தான் மணப்பேன்' என்றும், "அவளையும் நானே தேர்ந்தெடுப்பேன்' என்றும் அவன் சொல்லிவிட்டான்.குறிப்பிட்ட நாளில் பல பெண்கள் ஒரு பெரிய அரங்கில் திரண்டார்கள். அவர்கள் பேரழகிகள், செல்வச் சீமான்களின் புத்திரிகள், இசை நாட்டியத்தில் வல்லவர்கள். அரண்மனை வேலைக்காரியின் மகளும் வந்திருந்தாள். இளவரசனை மணக்கும் பேறு அவளுக்குக் கிடைக்கும் என்று அவளுக்கு நம்பிக்கையில்லை. என்றாலும் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு இளவரசனைப் பக்கத்தில் பார்க்கலாமே என்று வந்திருந்தாள். அரண்மனையிலேயே வேலை பார்த்ததால் அவள் இளவரசனை நன்கு அறிவாள். அவனுடைய மென்மையான நடைமுறையால் கவரப்பட்டு, அவன் மேல் ஒருதலையாகக் காதல் கொண்டிருந்தாள்.அவர்களை தனித்தனியாக அழைத்துப் பார்த்தான் இளவரசன். ஒருத்திக்கு ஒருத்தி அழகிலோ அறிவிலோ எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை. இளவரசனுக்குக் குழப்பமாகி விட்டது. ராஜகுருவிடம் ஆலோசனை கேட்டான்."பெண்ணின் எந்தத் தன்மை நீ முக்கியம் என்று நினைக்கிறாயோ, அதை வைத்து முடிவு செய் இளவரசே! உதாரணமாக, அழகுதான் முக்கியம் என்றால் இருப்பதிலேயே பேரழகியைத் தேர்ந்தெடுப்பது எளிது. அறிவு முக்கியம் என்றால் அறிவுப் போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெறும் பெண்ணை அரசியாக்கிவிடலாம்.''இளவரசன் தனியாக அமர்ந்து யோசித்தான். பின் அந்தப் பெண்களிடம் பேசினான்.""என்னை மணக்க நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன். சீனநாடு விவசாய நாடு. உழவனின் மனைவியாக இருந்தாலும், மன்னனின் மனைவியாக இருந்தாலும் தோட்டக் கலையில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆகையால், உங்கள் அனைவருக்கும் ஒரு அழகான மலர்ச்செடியின் விதைகளைத் தரப் போகிறேன். இது அபூர்வ வகையைச் சேர்ந்த மலர். இதை நன்றாகப் பராமரித்து, யார் கொண்டு வரும் மலர் அழகாக இருக்கிறதோ அவளே என் மனைவியாகத் தகுதி படைத்தவள். உங்களுக்கு ஆறுமாதம் அவகாசம் தருகிறேன்.''இளவரசனிடம் விதைகளைப் பெற்றுக் கொண்ட பெண்கள் வீடுகளுக்கு சென்றார்கள்.வேலைக்காரியின் மகளும் விதையை நம்பிக்கையோடு நட்டாள். தினமும் தண்ணீர் ஊற்றினாள். ஒரு வாரம், பத்து நாள் ஆகியும் செடி முளைக்கவில்லை. பின் தனக்குத் தெரிந்த தோட்டக்கலை விற்பன்னர்களிடம் ஆலோசனை கேட்டாள். அவர்கள் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினாள். எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.தன் தாயின் மடியில் படுத்துக்கொண்டு அழுதாள். தாயார் சமாதானப்படுத்தினாள்.""மகளே! இதில் உன் தவறு எதுவும் இல்லை. நம் ராஜகுருவிற்கு மந்திர வித்தை எல்லாம் தெரியும். வேலைக்காரியின் மகள் விதைத்தால் முளைக்கக்கூடாது என்று அவர் மந்திரம் போட்டிருப்பார்.''ஆறு மாதங்கள் ஓடி மறைந்தன.குறிப்பிட்ட நாளில் பெண்கள் எல்லாம் மீண்டும் அரங்கில் கூடினார்கள். வேலைக்காரியின் மகளும் புறப்பட்டாள்.""உனக்கு அங்கே என்ன வேலை?''""நான் காதலித்தவரைக் கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு என் தோல்வியை ஒத்துக்கொண்டு திரும்பி விடுவேன் அம்மா!''கனத்த இதயத்துடன் விடை கொடுத்தாள் தாய்.அரங்கத்திற்கு வந்த ஒவ்வொரு பெண்ணின் கையிலும் பெரிய வண்ண மலர் இருந்தது. எத்தனை மலர்கள்! எத்தனை வண்ணங்கள்! வேலைக்காரியின் மகளுக்கு அவமானமாக இருந்தது. வெறும் கையுடன் வந்தவளை மற்றவர்கள் இளக்காரமாகப் பார்த்தார்கள்.இளவரசன் ஒவ்வொரு மலராகப் பார்த்துக்கொண்டே வந்தான். கூடவே ராஜகுருவும் இருந்தார். இரண்டு மணி நேரம் தேர்வு நடந்தது.இளவரசனின் முடிவுக்காக அரங்கமே காத்திருந்தது. ""இந்தப் போட்டியில் பங்கு பெற்றதற்கு நன்றி. நான் என் வருங்கால மனைவியைத் தேர்ந்தெடுத்து விட்டேன்.''அனைவரின் இதயங்களும் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தின.""சீன நாட்டு அரசி - என் மனைவி - இதோ இந்த வேலைக்காரியின் மகள்தான்.''மற்ற பெண்கள் எல்லாரும் கூச்சல் போட்டார்கள். ""எவ்வளவு அழகான பெரிய வண்ண மலர்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். எங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒரு மலரையும் கொண்டு வராத அழகில்லாத அதிர்ஷ்டக் கட்டையான இவளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?''""அவள் உங்கள் அளவிற்கு அழகானவள் இல்லைதான். அவள் உங்களைப் போல் அழகான மலரைக்கொண்டும் வரவில்லைதான். என்றாலும் அவளிடம் உன்னதமான அழகுடைய என்றும் வாடாத மலர் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் நேர்மை. அந்த மலரை அவள் தன் இதயத்தில் சூடிக் கொண்டு இருக்கிறாள். அதனால் என் கண்களுக்கு அவள் உலக அழகியாகத் தெரிகிறாள்.''""என்ன சொல்கிறீர்கள் இளவரசே? ஒன்றும் புரியவில்லை''""நான் உங்களுக்குக் கொடுத்தவை அனைத்தும் வேகவைத்த விதைகள். அவற்றிலிருந்து சத்தியமாக எந்தச் செடியும் முளைக்காது. இந்த மலர்கள் அனைத்தும் உங்களுடைய அழகான பொய்கள். இவளிடம் மட்டுமே நேர்மை என்னும் வாடாத மலர் இருப்பதால் இவள் இந்த நாட்டுக்கு அரசியாகிறாள். என் மனைவியாகிறாள்.''பெண்கள் தலைகுனிந்தார்கள்.நம் தலைமுறைக்கு தேவையான வாழ்வியல் பாடம் இந்தக் கதையில் இருக்கிறது.இன்று நல்லவர்களாக இருப்பதைவிட நல்லவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில்தான் போட்டி அதிகமாக இருக்கிறது. படித்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதைவிட, காப்பியடித்து வாங்குவதில்தான் போட்டி இருக்கிறது.இன்னும் சிலர் அடுத்தவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து நாமும் அதைப் போல் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக நேர்மையைத் துறந்து குறுக்கு வழிகளில் பணம் ஈட்டப் பாடுபடுகிறார்கள். விரைவில் வாடிவிடும் செல்வம் என்னும் மலரைப் பெறுவதற்காக, வாடாத மலரான நேர்மையைத் துறக்கத் துணிகிறார்கள். நேர்மையைத் துறந்து நாம் பெறும் செல்வம் ஒரு செயற்கைப் பூ.. அதனால் தாற்காலிக இன்பத்தைத்தான் தரமுடியும். உங்கள் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகின்றனவா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? நல்ல வேலை கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள். எந்தச் சமயத்திலும் உங்கள் நேர்மையைக் கைவிடாதீர்கள்.யார் கண்டது? ராஜகுமாரன் வைத்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கலாம். விரைவிலேயே நாட்டின் அரியணையில் அமரலாம். அப்படி ஒரு வெற்றி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நேர்மை என்ற வாடாத மலர் உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகளாக இந்த உலகில் மகிழ்ச்சியுடன் வாழலாம். -

No comments:

Post a Comment