Monday, August 24, 2015

திபெத் நாட்டின் மலை உச்சியில் இருந்த, அந்தச் சிறிய கிராமத்தில் வசித்த விவசாயிக்கு நான்கு பெண்கள். அவர்கள் வழக்கப்படி, பெண்ணைத் திருமணம் செய்து கொள்பவர் தான் வரதட்சணை கொடுக்க வேண்டும். 
அந்தக் காலத்தில் விவசாயத்தையே நம்பியிருந்ததால் வரதட்சணையை பசுக்களாகத் தான் கொடுக்க வேண்டும் என்ற ஒரு மரபு இருந்தது. 
ஒரு பெண்ணின் அழகிற்குத் தகுந்தாற்போல் அவளது தந்தைக்கு வரதட்சணை கிடைக்கும். 
சராசரி பெண்களுக்கு ஒரு பசு மட்டுமே கிடைக்கும். சுமாராக இருந்தால் இரண்டு. 
பேரழகியாக இருந்தால் மூன்று அல்லது நான்கு. ஒரு பெண் நான்கு பசுக்களை வரதட்சணையாக வாங்கி விட்டால், பல வருடங்களுக்கு அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். 
விவசாயியின் முதல் மூன்று பெண்கள் மிகவும் அழகானவர்கள். கடைசிப்பெண் சுமார். முதல் மூன்று பெண்களையும் கட்டிக்கொள்ள மணமகன்கள் வரிசை கட்டிக் காத்திருந்தார்கள். ஒவ்வொருத்திக்கும் மூன்று பசுக்கள் கிடைத்தன. பெண்கள் திருமணமாகிச் சென்றவுடன் அந்த மாடுகளுடன் வசதியாக வாழ்ந்தான் விவசாயி.
இப்போது அவனது கவலையெல்லாம் நான்காவது பெண் பற்றி தான். அவளைப் பெண் கேட்டு யாருமே வரவில்லை. யாராவது ஒரே ஒரு கன்றுக்குட்டியைக் கொடுத்தால் கூடப் போதும்! அவளுக்கு என் செலவிலேயே மணமுடித்து வைக்கிறேன் என்று சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்து விட்டான். யாரும் முன்வரவில்லை.
அவளும் தன் விதியை நொந்து கொண்டு தந்தையின் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
ஒரு நாள் ஒரு பணக்காரரின் மகன், அந்தப் பெண்ணை ஏரிக்கரையில் பார்த்தான். அவன் கண்களுக்கு அவள் அழகியாகத் தோன்றினாள்.
அடுத்த நாளே அவளைப் பெண் கேட்க வந்துவிட்டான்.
அவன் பார்க்க கம்பீரமாக இருந்தான். இவன் ஏன் என் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்று விவசாயிக்குப் 
புரியவில்லை. என்றாலும், கெத்தை விட்டுக்கொடுக்காமல் தெனாவட்டாகப் பேசினான். 
""என் மகளைத் திருமணம் செய்து கொள்ள எத்தனை பசுமாடுகள் தரப்போகிறாய்?''
""ஏழு''
இதைக் கேட்டதும் அந்தப் பெண் வீறிட்டாள். விவசாயி மயங்கி விழாத குறைதான்.
""மீண்டும் ஒரு முறை சொல்.''
""ஏழு பசுக்கள் ஐயா! இவள் மதிப்பு ஏழு பசுக்கள் என்று நான் சொல்ல வரவில்லை. இவளுக்கு ஏழாயிரம் பசுக்கள் கொடுத்தாலும் தகும். ஆனால், இப்போது என்னிடம் இருப்பது ஏழு பசுக்கள்தான். அதைத் தருகிறேன். எனக்கு உங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுப்பீர்களா?''
அப்புறம் என்ன! ஊரே மெச்சும் வகையில் திருமணம் நடந்தது. அந்தக் கிராமத்தின் வரலாற்றிலேயே, ஏழு பசுக்களைப் பெற்றவள் என்ற சிறப்பை அவள் பெற்றாள்.
அவர்கள் அந்த ஊரிலேயே புதிதாக ஒரு பண்ணை துவங்கி வளமாக வாழ்ந்தார்கள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. செல்வ வளத்தில் இப்போது அவள் உண்மையிலேயே அழகியாகி விட்டாள். ஊர் மக்கள் அவளை மரியாதையுடன் பார்த்தார்கள். "" எங்கள் ஊர் அழகியாக்கும்'' என்று அவள் காதுபடவே கர்வப்பட்டார்கள்.
பல வருடங்கள் கழித்து, அந்தப் பெண் தன் கணவனிடம் சொன்னாள் ""சாதாரணப் பெண்ணாக இருந்த என்னை, அழகியாக்கியதே நீங்கள் கொடுத்த ஏழு பசுக்கள் தான்.''
""செல்லமே! நீ பிறவியிலேயே பேரழகி. நான் கொடுத்த பரிசு, உனக்குள் இருந்த அழகை வெளியே கொண்டு வந்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவ்வளவுதான்! இப்போது இருக்கும் வசதி அப்போது இருந்திருந்தால் இன்னும் அதிகமான பசுக்களை உனக்காகக் கொடுத்திருப்பேன்,'' என்றான் அந்த அன்புக் கணவன்.
"நான் அழகாக இல்லையே' என்று தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை இது.
ஊரே உங்களை அழகியில்லை என்று சொல்லலாம். ஆனால், யாரோ ஒருவர் கண்ணுக்கு நீங்கள் பேரழகியாகத் தோன்றுவீர்கள். அந்த 
ஒருவரின் அன்பால் நீங்கள் உண்மையிலேயே பேரழகியாக மாறுவீர்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும். அமிதாப் நடிக்க வந்த போது 
அவரைப் பார்த்த ஒரு இயக்குனர், ""இவன் குதிரை மாதிரி நெட்டைக் கொக்காக இருக்கிறானே! இவன் எல்லாம் எங்கே முன்னுக்கு வரப் 
போகிறான்?'' என்றாராம். இன்று அவர் இந்த நாட்டையே கலக்கவில்லையா? 
ஹாலிவுட் பேரழகி மர்லின் மன்றோவை முதலில் சோதித்த ஒரு இயக்குனர் ""எங்காவது ஆபீசில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தால் சேர்ந்துவிடு. சினிமாப் பக்கம் தலைகாட்டாதே'' என்றார். 
பாரதியாரின் கவிதை மூன்றாம் பரிசுக்குத்தான் தகுதி உடையது என்று அந்தக் காலத்தில் சில அதிமேதாவிகள் வழங்கிய தீர்ப்பு காற்றோடு காற்றாகப் போய்விட்டது. அவர்கள் அப்படித் தீர்ப்பு வழங்கிய பாரதியாரின் ""செந்தமிழ் நாடெனும் போதினிலே'' என்ற கவிதை, நமது மரபணுக்களோடு இரண்டறக் கலந்து சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இதில் இன்னொரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. அந்தப் பெண் பதட்டப்பட்டு ஒரு பசு, அரைப்பசு தருபவர்களிடம் கழுத்தை 
நீட்டவில்லை. தன் காலத்திற்காகக் காத்திருந்தாள். அதே போல்தான் சிலருக்குத் தொழிலும் அமையும். 
ஒருவர் ஓவியராக வேண்டும் என்று விரும்பினார். அது சரியாக வரவில்லை. பின் நாடக நடிகரானார். அங்கேயும் அப்படி ஒன்றும் 
பேர் வாங்கவில்லை. 
சரி.. ஒரு தணிக்கையாளராகி விடலாம் என்று நினைத்தார். அதுவும் கைகூடவில்லை. பின் மருத்துவப் படிப்பில் சேர்த்து, மருத்துவராகி விட்ட நேரத்தில் அந்தத் துறையும் தனக்கு உகந்ததில்லை என்று தோன்றியது.
கடைசியில் ஒரு எழுத்தாளரானார். அதில் உலகப் புகழ் பெற்றார். முதலில் செய்த தொழில்களில் எல்லாம் அவர் ஒரு பசு, அரைப்பசு என்ற அளவில் தான் வெற்றி பெற்றார். எழுத்து என்ற மணமகன் தான், அவருக்கு ஏழு பசுக்களை வரதட்சணையாகக் கொடுத்தது. அவர் பெயர் சாமர்செட் மாம்.
ஒருமுறை, என் வாடிக்கையாளரிடம் வேலை செய்து கொண்டிருந்த இளம் வயதுக் கணக்குப் பிள்ளையை, நான் வேலை நீக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டியிருந்தது. அவனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. ""என்னைத் தெருவில் நிற்க வைத்து விடாதீர்கள்'' என்று கெஞ்சினான். நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். காரணம் - அவனுக்குக் கணக்கு எழுதுவதில் சுத்தமாக லயிப்பு இல்லை. 
ஆனால், பத்து வருடங்கள் கழித்து அவனைச் சென்னையில் சந்தித்தபோது, ஒரு மருத்துவமனையில் மேலாளராக இருந்தான். கார், வீடு என்று கொழித்துக் கொண்டிருந்தான். 
""நல்ல வேளை கணக்குப்பிள்ளை வேலையிலிருந்து தூக்கினீங்க சார்! இல்லேன்னா அப்படியே வாழ்ந்து ஒண்ணும் இல்லாமப் 
போயிருப்பேன்,'' என்று அவன் சொன்ன போது எனக்கு இந்த ஏழு பசுக்களின் கதைதான் நினைவிற்கு வந்தது.
எல்லாருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. காலம் வரும் போது அவர்களுக்கு அது மகிழ்ச்சியை வழங்கும்.

No comments:

Post a Comment