Wednesday, August 26, 2015

ஜேஷ்டாதேவி

மிழகத்திலுள்ள சில கோயில்களில் ஜேஷ்டாதேவி வழிபாடு இருக்கிறது. இவளை மகாலட்சுமியின் அக்கா என்பர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இவளுக்கு சன்னிதி உண்டு. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் திருக்கரையீஸ்வரர் கோவிலில், ஜேஷ்டாதேவி சிலை, புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இவள் இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருப்பாள். கையில் காகக் கொடியும், காலுக்கு கீழே கழுதை வாகனமும் இருக்கும். உடன் இரண்டு பிள்ளைகள் இருப்பர்.
இவளைப் பற்றிய கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு.
குப்பன் ஒரு சோம்பேறி. அவனது அம்மா வயலில் வேலை பார்த்து குப்பனுக்கு கஞ்சி ஊற்றுவாள். கல்யாணம் செய்து வைத்தால், உழைக்க ஆரம்பித்து விடுவான் என அம்மா எண்ணினாள். 
திருமணமும் முடிந்தது.
புதுமனைவியிடம், ஒரு பெரிய தூக்குச்சட்டி நிறைய சோறு வாங்கிக் கொண்டு வயல் வேலைக்குப் போவதாக சொல்லிவிட்டுப் போவான். ஆனால், ஊரை விட்டுத் தள்ளியுள்ள ஒரு ஆலமரத்தடியில் படுத்து உறங்குவான். 
மாலையில் வீடு திரும்பும் போது, களைப்பாக இருப்பது போல் நடிப்பான். 
மனைவியும், ஐயோ பாவமென அவன் கை, கால்களை பிடித்து விடுவாள்.
அறுவடை நாள் வந்தது. கணவன் நிறைய கூலி பெற்று வருவான் என மனைவி காத்திருந்தாள். அவன் வெறும் கையுடன் வந்து நின்றான். அப்போது தான், வேலைக்குப் போகவில்லை என்ற குட்டு வெளிப்பட்டது.
"ஏ சோம்பேறி மூதேவியே! உனக்குப் போய் என் அப்பா என்னைக் கட்டி வைத்தாரே,'' என அவள் அழுதாள்.
அவளது குரல் அவ்வூர் கோயிலில் இருந்த ஜேஷ்டாதேவியின் (மூத்ததேவி என்னும் மூதேவி) காதில் விழுந்தது. இவளது உடன்
பிறந்தவள் தான் சீதேவியாகிய லட்சுமி. அவள் அக்கோவிலில் இருந்த தங்கை லட்சுமியிடம் சென்று, ""சகோதரி! பார்த்தாயா, என் நிலையை! சோம்பேறிகளுக்கு என்னைத் தான் ஒப்பிடுகிறார்கள். நான் அந்த விவசாயிக்கு நிறைய பொருள் கொடுக்கப் போகிறேன்,'' என்றாள்.
லட்சுமியும் தலையசைத்தாள்.
மாறுவேடத்தில் கிளம்பிய அவள், குப்பனிடம் தங்கக்காசுகள் கொண்ட பானையைக் கொடுத்தாள். அதை அவன் மனைவியிடம் 
ஒப்படைத்தான். குப்பனின் மனைவி கணவனைப் பலவாறாகப் பாராட்டினாள். ஆனால், அன்றிரவே அது திருட்டுப் போய் விட்டது.
இதையடுத்து ஜேஷ்டாதேவி அவனுக்கு மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். அதையும் அவன் ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் தவற விட்டு விட்டான். 
விவசாயி மட்டுமல்ல... ஜேஷ்டாதேவியும் வருத்தப்பட்டாள்.
தன் சகோதரியிடம் மீண்டும் சென்று, "அவனுக்கு நிலைக்கும் வகையில், ஏதாவது ஒரு பொருள் கொடேன்,'' என்றாள்.
அதற்கு திருமகள், ""சகோதரி! உழைப்பில்லாமல் கிடைக்கும் பொருள் நிலைக்காது. அவன் உழைக்க வேண்டும், அதில் கிடைக்கும் பொருளே நிலைக்கும் என அவனிடம் சொல்,'' என்றாள்.
ஜேஷ்டாதேவியும் உழைப்பின் பெருமையை அவனிடம் சொல்ல, அன்று முதல் அவன் ஒழுங்காக வேலை செய்து சம்பாதித்தான். 
அவன் மனைவியும், தாயும் மகிழ்ந்தனர். 
அக்காலத்தில், மன்னர்கள் போருக்கு கிளம்பும் போது, ஜேஷ்டாதேவி சன்னிதிக்கு சென்று, எதிரி நாட்டு மன்னனுக்கு சோம்பலைக் கொடு என வேண்டுவர். சுறுசுறுப்பைக் கொடு என நாமும் இவளிடம் வேண்டுவோமே!

No comments:

Post a Comment