Wednesday, August 26, 2015

முயற்சிகள் தவறலாம். முயற்சிக்கத் தவறாதீர்கள்

18 ஆண்டுகள் நெறிதவறாமல் மனம் ஒருமித்துத் தவம் செய்தால் இறைவனை அடையலாம்' என்று ஒரு முனிவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்ட ஒருவனுக்கு இறைவனைப் பார்க்க ஆசை வந்துவிட்டது. அவன் தனியாள். குடும்பம் ஏதுமில்லை. எனவே, மறுநாளே தவம் செய்யப் புறப்பட்டு விட்டான். 17 ஆண்டுகள் ஆறுமாதங்கள் ஓடிவிட்டது. இன்னும் ஆறே மாதங்கள்தான்... தவம் முடிந்துவிடும். இந்த நிலையில், அவன் கண் முன்னே அழகான மான் ஒன்று ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு ஒரு அழகான பெண் ஓடினாள். அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து போனான் தபசி. 
அவளைத் தொடர்ந்து காட்டு வழியே சென்று கொண்டிருந்த போது ஒரு நாகப்பாம்பு அவனைத் தீண்டியது. விஷம் தலைக்கேறி உயிரை விட்டான்.
இறந்தவனின் ஆன்மாவிற்கு அப்போதுதான் தன் உண்மை நிலை விளங்கியது.. "இன்னும் ஆறே மாதங்கள் மூச்சைப் பிடித்துத் தவத்தை முடித்திருந்தால் இறைநிலை எய்தியிருக்கலாம்... கடைசி நேரத்தில் மானையும், மானைப் போன்ற பெண்ணையும் பார்த்ததால் வந்த வினை தவப்பயனைத் தொலைத்துவிட்டேனே... இனி அழுது என்ன பயன்! சே... எல்லாம் வீணாய்ப் போயிற்றே' என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அசரீரியாக வந்த இறைவன் பேசினார்.
""மானிடனே! உன் தவ முயற்சியால் மகிழ்ந்தோம். மீண்டும் ஒருமுறை நீ மனிதனாகப் பிறந்து மீண்டும் தவமியற்று. இந்த முறை வெற்றி நிச்சயம்.''
அந்த ஆன்மா அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
""இந்த முறை நிச்சயமாக 18 ஆண்டுகள் உங்களைக் குறித்துத் தவம் செய்து இறைநிலை பெறுவேன். இது சத்தியம்.''
""தேவையில்லையப்பா! நீ ஏற்கனவே பதினேழரை ஆண்டுகள் தவம் செய்துவிட்டாய். அடுத்த பிறவியில் ஆறே ஆறு மாதங்கள் 
தவமியற்றினால் போதும் என்னை வந்து அடைந்துவிடுவாய்.''
""சரி ஐயனே! ஒருவேளை எனக்குத் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராமல் இருந்துவிட்டால்... என்ன இருந்தாலும், நான் ஆசாபாசமுள்ள சாதாரண மனிதப் பிறவியாகத்தானே பிறக்கப் போகிறேன்?''
""கவலைப்படாதே. நீ ஏற்கனவே செய்த தவத்தின் பயனாகத் தவத்தின் மேல் இயல்பாகவே ஒரு ருசி பிறக்கும். உனக்கு 12 வயதாவதற்கு முன்பே தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். ஆறே மாதங்கள். மனதை ஒரு நிலைப்படுத்தி தவம் செய்தால் போதும்... உனக்கு மோட்சம் கிடைக்கும்.''
""மீண்டும் ஒருமுறை நெறி தவறினால்.. ''
""மீண்டும் ஒரு வாய்ப்புத் தருவேன்.''
இதுதான் இறைவனின் நியதி. இது நம்முடைய உலகியல் வாழ்க்கைக்கும் பொருந்தும். நல்லதை நினைத்து நன்மை செய்தால் அது ஒரு நாளும் வீண் போகாது. இதை நான் சொல்லவில்லை. கண்ணன் கீதையில் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறான். 
""நம்பிக்கை உடையோன் எனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்று மனம் வழுவியவன் யோகத்தில் தோற்றுப்போய் அப்பால் என்ன கதியடைகிறான் கண்ணா?'' என்று அர்ஜுனன் கேட்க, ""பார்த்தா! அவனுக்கு இவ்வுலகிலும் மேலுலகத்திலும் அழிவில்லை. மகனே! நன்மை செய்வோன் எவனும் கெடமாட்டான்.'' என்று கண்ணன் உறுதிபடச் சொல்கிறான். (பகவத் கீதை 6-37 மற்றும் 6-40 - பாரதியாரின் தமிழாக்கம்) பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு மென்பொருளை விற்பதில் முனைப்பாக இருந்தேன். சென்னையில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அந்த மென்பொருளைப் பற்றி விளக்கிச் சொல்லும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத்தின் பற்று வரவு பல ஆயிரம் கோடிகளுக்கு மேல்... அவர்களுக்கு எங்கள் மென்பொருள் பிடித்துப்போய்விட்டால், ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆர்டர் எங்களுக்குக் கிடைக்கும்.
அந்த மென்பொருள் நிறுவனத்தின் அதிபரும், நானும் அந்த நிறுவனத்திற்குச் செல்வதாக இருந்தது. இரண்டு வாரங்கள் இரவு பகலாக உழைத்து எங்களைத் தயார் செய்து கொண்டோம். அவர்கள் பெரிய நிறுவனம் என்பதால் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்று ஊகித்து, சுமார் நூறு விதமான கேள்விகளுக்குப் பதில் தயார் செய்து கொண்டோம். 
ஒரு நல்ல நாளில் நிறுவனத்தின் தலைவர், உயர் அதிகாரிகள் பலர் இருந்த உயர்மட்டக் கூட்டத்தில் நானும் அதிபரும் சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் என்று சொன்னோம். எனக்கோ உள்ளூர பயம். ஏடாகூடமாகக் கேள்வி கேட்டுமாட்டி விடுவார்களோ...! 
முதல் கேள்வியிலேயே நாங்கள் நிலைகுலைந்து போனோம். 
""இந்த மென்பொருள் என்னவெல்லாம் செய்யும்?''
ஒரு மண்டலம் ராமாயணம் உபன்யாசம் கேட்டுவிட்டு, ராமன் யார் என்று கேட்டால்...! 
அடுத்த கேள்வி அதைவிடக் கேவலமாக இருந்தது.
""நீங்கள் போட்டிருக்கும் சட்டை நன்றாக இருக்கிறது. எங்கே வாங்கினீர்கள்.?''
மென்பொருளை வடிவமைத்த என் நண்பரிடம் புலம்பினேன். ""இந்த முட்டாள்களுக்கு விளக்கவா அவ்வளவு கஷ்டப்பட்டோம். இரண்டு வார உழைப்பு வீணாகிவிட்டதே!''
நண்பர் என்னை அணைத்தபடி சொன்னார். ""உண்மையான உழைப்பு என்றுமே வீணாவதில்லை.''
""அது சரி... தெய்வம் நம்பக்கம் இல்லை போலிருக்கிறது'' என்று விரக்தியாகச் சொன்னேன். 
""வள்ளுவர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். தெய்வம் நம் பக்கம் இல்லாவிட்டாலும் நம் முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.''
""அது எப்படி?''
""தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் (திருக்குறள் 619) அதாவது விதி நமக்கு உதவமுடியாது 
போனாலும், முயற்சி நம் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்துவிடும்.
எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வாரம் கழித்து மற்றொரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. 
""விளக்கக் கூட்டமெல்லாம் வேண்டாம். நேரே வந்து எங்கள் ஆர்டரை எடுத்துக் கொள்ளுங்கள்.''
நேரில் சந்தித்தபோது அந்த நிறுவனத் தலைவர் சொன்னார். ""அன்று அந்தக் கார்ப்பரேட் நிறுவனத்தில் நீங்கள் நிகழ்த்திய விளக்கக்
கூட்டத்தின் வீடியோவைப் பார்த்தேன். உங்கள் மென்பொருள் அற்புதமானது. அது போன்ற ஒன்றைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.''
நண்பர் காதில் கிசுகிசுத்தார். ""வள்ளுவர் சொன்னது உண்மையாகிவிட்டது பார்த்தாயா?''
நாம் செய்யும் எந்த நல்ல செயலும் வீணாகாது. நாம் எடுக்கும் எந்த முயற்சியும் பலன் கொடுக்காமல் போகாது. தவம் செய்த அந்த மனிதனைப் போல் கடைசி நேரத்தில் தவறினாலும் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினாலே போதும். நமக்கு மகிழ்ச்சி தான்.
இரண்டு நண்பர்கள் எப்படியாவது ஐ.ஏ.எஸ் ஆகிவிடவேண்டும் என்று விழுந்து விழுந்து படித்தார்கள். பல முறை தேர்வு எழுதினார்கள். வெற்றி பெறவில்லை. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும், நேர்காணலில் தோற்று விடுவார்கள். இப்படியே சில ஆண்டுகள் ஓடிவிட்டன. 
"இது வேலைக்கு ஆகாது' என்று இருவரில் ஒருவர் கழன்று கொண்டார். திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். அடுத்தவர் விடவில்லை... பயிற்சி மையத்தை மாற்றி, இன்னும் கடுமையாகப் படித்து அடுத்த ஆண்டே வெற்றி பெற்றார். இன்று மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். கைவிட்டவரோ, தனியார் நிறுவனத்தில் ஊழியராகக் காலம் தள்ளுகிறார்.
முயற்சிகள் தவறலாம். முயற்சிக்கத் தவறாதீர்கள். பரந்தாமன் நமக்குச் செய்து கொடுத்த சத்தியம் இது:
அவனுக்கு (முயற்சிப்பவனுக்கு) இவ்வுலகிலும் மேலுலகத்திலும் அழிவில்லை. மகனே நன்மை செய்வோன் எவனும் கெடமாட்டான். (பகவத் கீதை 6- 40)

No comments:

Post a Comment