Wednesday, August 26, 2015

ராஜயோகம்!

மகாருத்ர வனத்தில் தேவகர்ப்ப மகரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்கிருந்த நந்தவனத்தில் நெல்லி, வில்வ மரங்கள் இருந்தன. வழிபாட்டுக்காக துளசி, பாரிஜாதம், மந்தாரை, பவழமல்லி ஆகியவற்றை வைத்திருந்தார். பாலுக்காக பசுக்களை பராமரித்தார். லட்சுமிக்குப் பிடித்தமான சூழல் அங்கு நிலவியது. திருமாலுக்குப் பசும்பாலை நைவேத்யமாகப் படைத்து அதையே உணவாக ஏற்பார். 
திருமாலின் துணைவியான லட்சுமி, மகரிஷியின் பக்தி கண்டு மகிழ்ந்தாள். 
அவரைக் காண ஆஸ்ரமத்திற்கே வந்து விட்டாள். 
"மகரிஷியே! உம் பக்தியை மெச்சி உம்மைக் காண வந்தேன். எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்று வளமுடன் வாழ்வீராக!'' என்று ஆசியளித்தாள்.
"தாயே! துறவிக்கு செல்வம் எதற்கு? பிறப்பற்ற முக்தி நிலையே வேண்டும்,'' என்று கேட்டார். 
"முற்பிறவியில் செய்த புண்ணியத்தால், நீர் செல்வத்தை அடைந்தாக வேண்டும். அதன் பின்னரே உமக்கு முக்தி உண்டாகும்,'' என்று சொல்லி மறைந்தாள்.
செய்வதறியாத மகரிஷி லட்சுமியின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என நினைத்தார். ஆஸ்ரமத்தை விட்டு கிளம்பி நீண்ட தூரம் நடந்தார்.
ஓரிடத்தில் பல்லக்கு, பரிவாரம், படை வீரர்கள் என பெருங்கூட்டம் இருந்தது. 
காட்டுக்கு வேட்டையாட வந்த அவ்வூர் மன்னர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அருகில் மன்னரின் ரத்ன கிரீடம் பட்டுத்துணியில் 
வைக்கப்பட்டிருந்தது. 
மகரிஷியின் மனதில் விபரீத எண்ணம் எழுந்தது. 
"கிரீடத்தை காலால் உதைத்தால், மன்னரின் கோபத்திற்கு ஆளாகலாம். அதற்கு தண்டனையாக சிரச்சேதம்(தலையை அறுத்தல்) செய்ய மன்னர் உத்தரவிடுவார். அதன் மூலம் லட்சுமியின் ஆசை நிறைவேறாமல் போய் விடும்,'' என நினைத்தார். 
இதை அறிந்த லட்சுமி, அஷ்ட நாகத்தில் ஒன்றான அனந்தனை அங்கு அனுப்பினாள்.
அனந்தன் ராஜ நாகமாக உருவெடுத்து, கிரீடத்திற்குள் ஒளிந்து கொண்டான்.
கூச்சலிட்டபடி மகரிஷி மன்னரை நெருங்கினார். யாரும் நெருங்கும் முன், கிரீடத்தைக் காலால் உதைத்தார். வீரர்கள் மகரிஷியைத் தாக்க ஓடி வந்தனர். ஆனால், கிரீடத்திற்குள் இருந்து ராஜ நாகம் வெளிப்பட்டு புதருக்குள் மறைந்தது. 
இதைப் பார்த்த வீரர்கள், ""ரிஷியே! எங்கள் மன்னர் உயிர் காக்க தாங்கள் செய்த அரும்செயலை தவறாக எண்ணி விட்டோம். எங்களை மன்னியுங்கள்,'' என்றனர்.
"உயிர் காத்த உத்தமரே' என்று மன்னரும் மகரிஷியின் திருவடிகளைப் பணிந்தார். 
துறவியை பல்லக்கில் ஏற்றி, அரண்மனைக்கு அழைத்துச் சென்ற மன்னர், மகரிஷியை ராஜ குருவாக ஏற்றார். மாடமாளிகையில் சகல 
வசதியுடன் வாழச் செய்தார். லட்சுமியின் பார்வை பட்டால் துறவிக்கு கூட ராஜயோகம் வந்து விடும்

No comments:

Post a Comment