Wednesday, August 26, 2015

பிரச்னைகளைச் சமாளிக்க கற்றுக்கொண்டால் நாமாகவே அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து விடுவோம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது... அன்று வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது.
நாளெல்லாம் வயலில் வேலை செய்யும் குடியானவன் அலுத்துக் கொண்டான். 
"கடவுளே என்ன கொடுமை! நாளெல்லாம் முதுகு ஒடிய வயலில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியே பாடுபட்டாலும் வெள்ளாமை நன்றாக இருக்குமா என்ற உறுதி இல்லை. போனவருடம் பட்ட பாடெல்லாம் வீணாய்ப் போய்விட்டது. இந்த வருடமாவது மகசூல் நன்றாக இருக்குமா? சே.. என்ன பிழைப்பு இது... இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம்.
அவனது மனைவிக்கும் வாழ்க்கை வெறுத்து விட்டது. உண்ண நல்ல உணவு இல்லை. உடுத்த உடையில்லை. குழந்தைகளே பாதிநாட்கள் பட்டினி கிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையே வேண்டாம்.
மிகப்பெரிய செல்வந்தனான ஒரு வணிகனுக்கும் வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. அவனிடம் பாளம் பாளமாகத் தங்கம் இருந்தது. வைரங்கள் வைடூரியங்கள் எல்லாம் இருந்தன. என்ன பயன்? திருமணமாகிப் பத்தாண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவன் மனைவிக்கும் அதே காரணத்தால் வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. 
இப்படியாக குயவர், கொல்லர், ஓவியர், ஏன் நாடாளும் மன்னன், மன்னனின் மனைவி, இளவரசன், இளவரசி என்று யாருக்குமே வாழப் பிடிக்கவில்லை. 
எல்லாரும் இறைவனை நாடினார்கள்.
"இந்தக் கேடுகெட்ட வாழ்க்கையே வேண்டாம்,'' என்று மன்றாடினார்கள்.
"அப்படியா? சரி நான் ஒரு வழி சொல்கிறேன். உங்கள் வாழ்க்கை, உங்கள் சுக துக்கங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் ஒரு 
மூடையாகக் கட்டி வைத்து விடுங்கள்.. அந்த மூடைகள் எல்லாம் ஒரு பெரிய மைதானத்தில் இருக்கும். சில நாட்கள் கழித்து நீங்கள் மீண்டும் அந்த இடத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு மூடையாக ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு எந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதோ அதையே வாழுங்கள். எப்படியும் ஒவ்வொருவரும் ஒரு மூடையை எடுத்துக்கொள்ள வேண்டும்.. இதற்கு உடன்படுகிறீர்களா?''
அனைவரும் சரி என்று தலையாட்டினார்கள் இறைவன் சொன்னபடியே அனைத்தையும் மூடை கட்டி வைத்தார்கள். 
மலையாக மூடைகள் குவிந்தன.
சில நாட்கள் கழித்து அந்த மூடை மலையில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தேடிப் புறப்பட்டார்கள். நிதானமாகத் தேடினார்கள். அவர்கள் தேடும் வரை காலத்தை நிறுத்தி வைத்திருந்தான் இறைவன். எல்லாரும் ஒவ்வொரு மூடையைக் கையில் வைத்திருந்தார்கள். 
தான் நிறுத்திவைத்த காலத்தை மறுபடியும் இயக்கும் முன், அவரவர் கையில் இருந்த மூடைகளைப் பார்த்தான் இறைவன். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
எல்லாருமே அவர்கள் அதுவரை வாழ்ந்த அதே வாழ்க்கையைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அவர்கள் குறை கூறிய சலித்துக்கொண்ட அதே வாழ்க்கையையே அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தார்கள்.
இது ஹசிதிக் மத நூல்களில் உள்ள கதை. இதில் மிக நுட்பமான ஒரு வாழ்க்கைத் தத்துவம் அடங்கியிருக்கிறது.
இன்று பலருக்கு அவர்கள் வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை தான்... அதற்காக குமாஸ்தாவாக இருக்கும் ஒருவனை பெரிய பதவியில் அமர்த்தினால் பத்தே நாட்களில் "குமாஸ்தாவாக இருந்த போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன்' என்று ஏங்கத் தொடங்கி விடுவான். 
அதற்காகக் கடைசிவரை ஒரு குமாஸ்தா குமாஸ்தாவாகவே இருக்க வேண்டும். முதலாளி, முதலாளியாகவே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. குமாஸ்தாவின் வாழ்க்கையில் பிரச்னைகள் இருந்தால், அதனை எதிர்கொண்டு தீர்த்த பிறகுதான் அடுத்த கட்ட உயர்வை அடைய முடியும்.
எனக்குத் தெரிந்த ஒருவர் திருச்சியில் ஒரு சிறிய லேத்துப்பட்டறை வைத்திருந்தார். தொழிலில் ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள். "பேசாமல் இந்த தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கடனை உடனை வாங்கி பெரிய அளவில் ஒரு தொழிற்சாலை தொடங்குங்கள்' என்று ஒரு ஆலோசகர் அறிவுரை வழங்கினார். அதை நம்பி, வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கி அதே தொழிலைப் பெரிய அளவில் தொடங்கினார். 
இன்னும் அதிகமான பிரச்னைகள்... கடன் தொல்லை... வீடு கடனில் மூழ்கும் அளவிற்கு நெருக்கடி முற்றியதும், தன் தொழிற்சாலையை வந்த விலைக்கு விற்றுவிட்டு மீண்டும் சிறிய லேத்துப்பட்டறையை ஆரம்பித்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.
நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் 9ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஐயோ.. அவன் வாழ்க்கையில் ஒரு வருடம் வீணாகிவிடப் போகிறதே என்ற ஆதங்கத்தில், அவனுடைய தந்தை அவனை வேறு ஒரு ஊருக்கு அழைத்துச் சென்று தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அங்குள்ள பள்ளியில் பத்தாவது வகுப்பில் சேர்த்துவிட்டார். 
அந்த மாணவன் இன்னும் குறைந்த மதிப்பெண் எடுத்து தோற்றான். 9ம் வகுப்பே தேறாதவன் பத்தாம் வகுப்பு எப்படித் தேற முடியும்? 
கூரையேறி கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டம் போக முடியுமா என்ன?
இன்னும் சிலர் மோசமான மேலதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இவர் வேண்டாம் என்று வேறு வேலைக்குப் போனால், அங்கே இவரைவிட மோசமாக இன்னொருவர் இருப்பார். மனித உறவுகளிலும் இப்படித்தான் நடக்கிறது. அமெரிக்காவில் கணவன் சரியில்லை என்று விவாகரத்து செய்த பெண்கள் மீண்டும் ஏறக்குறைய அதே குறையுள்ள கணவனைத்தான் தேர்ந்தெடுத்தார்கள் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை சொல்கிறது.
எந்த மனித உறவையும் உங்களால் உதறித் தள்ளிவிட முடியாது. நச்சரிக்கும் மனைவி வேண்டாம் என்று விலகி வாழ்பவர்கள் ஒரு 
நச்சரிக்கும் மேலதிகாரியிடம் மாட்டிக் கொள்வார்கள். உறவையும் பிரச்னையையும் விட்டு ஓடுவதற்குப் பதிலாக நம்மை நாமே 
வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
பிரச்னைகள் நிறைந்தது தான் வாழ்க்கை. நமது துன்பமும் மகிழ்ச்சியும் அந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதில் தான் 
இருக்கிறது..
ஒன்று மட்டும் நிச்சயம். நாம் வாழும் வாழ்க்கையும் அதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளும் நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். ஒருவேளை வெறுத்துப் போய் இதை மூடைகட்டித் தூக்கிப் போட்டாலும் மீண்டும் இதே வாழ்க்கையையும், இதே பிரச்னைகளையும்தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம். 
அவற்றில் வரும் பிரச்னைகளைச் சமாளிக்க கற்றுக்கொண்டால் நாமாகவே அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து விடுவோம். அந்த வாழ்வில் தான் மகிழ்ச்சி மலரும். 

No comments:

Post a Comment