Saturday, August 22, 2015

பிறந்தநாள் கொண்டாடுவது எப்படி ?

பிறந்தநாள் கொண்டாடுவது எப்படி ?

 முறைப்படியான நாட்காட்டியில் லீப் இயர் வருவதில்லை. இது போன்ற சரிகட்டும் நாளும் தேவையில்லை. துல்லியமாக கணக்கிடப்பட்டது. வானத்தில் கண்கூடாக தெரியும் கோள்களையும், நட்சத்திரங்களையும், சந்திரனும் மற்ற கிரகங்களும் நம் பூமி மீது செலுத்தும் விசைகளையும் பல தலைமுறைகளாக ஆராய்ந்து அறிந்து உருவாக்கப்பட்டது தான் நம் நாட்காட்டி. நாம் பிறக்கும் போது ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரம் நம் வாழ்வை நிர்ணயிப்பதுடன் நம் வாழ்வோடு இயைந்து வருவது. ஆகவே, நாம் நம் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமாயின், நம் நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடுவது தான் அர்த்தமுள்ளதாகிறது.

எந்த பின்புலமும் இல்லாமல், பேக்கரி கடையில் பெரிய கேக்கை வாங்கி வந்து, அதில் மெழுகுவர்த்தி கொளுத்தி, அந்த விளக்கை அணைத்து கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது ? குறுகிய காலம் உள்ள நம் வாழ்வில், நாம் பிறந்தநாள் கொண்டாட வேண்டுமாயின், நம்மால் முடிந்த தொண்டை பிறருக்கு செய்து நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம். வீட்டில் கேசரி, பஜ்ஜி போன்ற பலகாரங்கள் செய்து பூசையறையில் இறைவனை பூசித்து கொண்டாடலாம். தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளலாம். கோவிலுக்கு சென்று பூசித்து நமக்கு பிறவி கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி வழிபடலாம். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கும் அன்னதானமிட்டு நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம்.  வரும் காலங்களில் மழையை வருவிக்கவும், இந்த பூமி உய்யவும், பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரலாம். வசதியுள்ளவர்கள், பிறந்தநாள் மலர் என்று சிறிய புத்தக வடிவில், வழிபாட்டு பாடல்கள் தொகுப்பையும், திருமுறை பாடல்கள் தொகுப்பையும் வெளியிடலாம். நம் பிறந்தநாள் கொண்டாடுவதை கூட, பிறருக்கு மகிழ்ச்சி தருவதாக கொண்டாடினால், அதைவிட இன்பம் வேறு இருக்க முடியுமா என்ன ?

குறிப்பாக, Happy birthday to you என்று பாடாமல், திருஞானசம்பந்தரின் இந்த பதிக பாடலை பாடி வாழ்த்துங்கள்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.


திருச்சிற்றம்பலம்.

வெல்க தமிழ். வளர்க சைவம். சிவசிவ.

No comments:

Post a Comment