Wednesday, August 26, 2015

நல்லவனாக வேஷம் போடுவதைவிட நல்லவனாக வாழ்வதே உத்தமம்.

ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது. 
இந்தச் சமயத்திலாவது சீதையை எப்படியாவது இணங்க வைத்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறான் ராவணன். ஒரு மாயாவி அரக்கனின் துணையால் மற்றொரு அரக்கனை சீதையின் தந்தை ஜனகனைப் போல் மாற்றுகிறான். 
போலி ஜனகனைக் கைது செய்து தரதரவென்று இழுத்துச் சென்று சீதையின் முன் நிறுத்துகிறான். இணங்காவிட்டால், அவள் கண் முன்னாலேயே அவனைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறான்.
""ஐயோ அப்பா! என்னால் நீங்களும் இழிவு பட வேண்டியிருக்கிறதே'' என்று சீதை கதறுகிறாள். மாயா ஜனகனின் வேஷத்தில் முதலில் அன்னையும் மயங்கிவிட்டாள். பின் அந்தப் போலி ஜனகன் சீதையிடம் பேசுகிறான்.
"பேசாமல் இவன் ஆசைக்கு இணங்கி விடம்மா...! அது தப்பில்லை. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் எனக்கு உயிர்ப் பிச்சை 
கொடுப்பதற்காகவாவது இவன் சொல்படி கேளம்மா.'' என்று கெஞ்சுகிறான். 
அவன் முகத்தில் காறித் துப்புகிறாள் அன்னை ஜானகி. 
""உயிரை விடவும் ஒழுக்கமே முக்கியம். ஒரு பெண்ணின் கற்பைக் காக்க ஒரு நாட்டையே அழிக்கலாம்,'' என்று சொல்லிச் சொல்லி வளர்த்த என் தந்தையா இப்படிப் பேசுவது? சத்தியமாக நீ என் தந்தையாக இருக்க முடியாது..''
அந்தப் போலியின் வேடம் அவன் பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே கலைந்துவிடுகிறது.. 
இதேபோல் இன்று, உலக ஆசைகளைத் துறக்க முடியாதவர்கள் துறவிகள் போல் மிக வேஷம் போடுகிறார்கள். இந்த மாயா ஜனகர்களின் முகத்திரைகள் மிகவும் அசிங்கமாகக் கிழிக்கப்படுகின்றன. 
ராமாயணத்தில் இன்னும் ஒரு நிகழ்வு.
சீதையை ராமனும் லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ராமனைப் பார்க்கச் சகிக்கவில்லை. உடல் வாடியிருக்கிறது. கீழே புரண்டு புரண்டு அழுததால் உடலெல்லாம் அழுக்காக இருக்கிறது. அவனைப் பார்த்தால் யாரும் மன்னர் குலத்தைச் சேர்ந்தவன் என்று சொல்ல மாட்டார்கள். அப்போது ஆகாய மார்க்கமாக சிவனும் பார்வதியும் செல்கிறார்கள். ராமனைப் பார்த்து வணங்கிச் செல்கிறார் சிவன். பார்வதி ஆச்சரியப்படுகிறாள்.
""அழுது அரற்றிக் கொண்டிருக்கும் ஒரு அழுக்கு மானிடனை, ஈஸ்வரனான நீங்கள் வணங்குவதா?''
""பார்வதி... அது காக்கும் கடவுளான திருமால். ராமன் அவதாரம் எடுத்திருக்கிறார். நீ வேண்டுமானால் சோதித்துப் பாரேன்.''
பார்வதி, சீதை வேடம் தாங்கி ராமன் முன் வருகிறாள். தன்னைப் பார்த்ததும் தொலைந்த சீதை கிடைத்துவிட்டாள் என்று ராமன் 
மகிழ்வான் என்று கணக்குப் போடுகிறாள்.
""என்ன பார்வதி தேவி! ஏன் இந்த சீதை வேடம்?'' என்று முறுவலுடன் கேட்கிறான் ராமன். வேஷம் கலைகிறது.
யோகி ராம்சுரத்குமார் திருவண்ணாமலையில் ஒரு பிச்சைக்காரனைப் போல் வாழ்ந்தார். என்றாலும், அவரது மகிமையை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். அவரை மகானாகவே போற்றி வணங்கினார்கள். 
ஆரம்ப காலத்தில் அவருக்குப் பெரிய ஆசிரமம் இல்லை. ஆயிரக்கணக்கான சீடர்கள் இல்லை. பளபளக்கும் காவியாடைகள் இல்லை. கார் வசதியில்லை. என்றாலும், அவருடைய உண்மை நிலை வெகு விரைவில் வெளியே தெரிந்துவிட்டது.
இன்று எல்லாத் துறைகளிலும் வேஷங்கள் மலிந்துவிட்டன. கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். பல வருடங்கள் கல்வி கற்றபின் மாணவன் ஒழுங்காகக் கற்றிருக்கிறானா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் தேர்வுகளையே நடத்துகிறார்கள். 
அந்தத் தேர்வில் தில்லுமுல்லு செய்து அதிக மதிப்பெண் வாங்கித் தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்வதும் ஒரு வேஷம் தானே! உயர்கல்விக்குச் செல்லும்போது அந்த வேஷம் கலைந்து போகிறது. இன்னும் சிலர் படிக்காமலேயே போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து பதவிகளைப் பெறுகிறார்கள். உண்மை வெளியாகும் போது அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்து விடுகிறது.
இன்னும் ஒரு படி மேலே போய்ப் பார்ப்போம். ஆசிரியர் போதிக்கும் பாடங்களைச் சரியாக உள்வாங்கிக்கொள்ளாமல் மொட்டைக்கடம் போட்டு, அதை அப்படியே தேர்வுத்தாளில் கக்குவதும் மோசமான வேடம் தான்.. இந்த வேடம் மருத்துவம் போன்ற மேல்படிப்புக்குச் செல்லும் போது கொடுமையான முறையில் கலைந்துவிடும். மருத்துவருக்கு வேண்டுவது மனப்பாடம் செய்யும் திறமை இல்லை. தன் அறிவால் நோயைக் கண்டறிந்து அதைத் தீர்க்கும் திறமைதான். 
வேடங்களைப் பற்றி ஷேக்ஸ்பியர் மிக அழகாக ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். ""உன்னிடம் இருப்பதைவிடக் கொஞ்சம் குறைவாக இருப்பதாக காட்டிக்கொள்,'' என்றார்.
""நீ எவ்வளவு செல்வம் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறாயோ, அதைவிட அதிகமான செல்வம் உன்னிடம் இருக்கட்டும். உன்னிடம் எவ்வளவு அறிவு இருக்கிறதோ அதைவிடக் குறைவாகவே பேசு.''
பல வருடங்களுக்கு முன்னால் நடந்தது இது. நானும், ஒரு வங்கியின் உயரதிகாரியும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு மூதாட்டியிடம் இளநீர் வாங்கிச் சாப்பிட்டோம். நண்பர் வங்கி அதிகாரி என்பதால் அவரிடம் கத்தை கத்தையாகப் புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த நோட்டுக்கத்தையிலிருந்து இளநீர் விற்ற முதியவளிடம் சில 
நோட்டுகளைக் கொடுத்தார் அதிகாரி. முதியவள் நோட்டுகளைக் கவனமாக எண்ணி இடுப்பில் இருந்த சுருக்குப் பையில் வைத்துக் கொண்டாள்.
புதிய ஐந்து நோய் நோட்டுகளைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்.. அதைப் பற்றி அவள் ஒன்றும் சொல்லவில்லையே என்று அதிகாரிக்கு லேசான வருத்தம். 
""நோட்டப் பாத்தியாம்மா? எல்லாம் புத்தம் புதுசு. இதுக்கே நீ இளநீர் விலையில ஒரு ரூபாய் குறைச்சிக்கலாம்.''
அந்த மூதாட்டி அவரை ஏற இறங்கப் பார்த்தாள். 
""ஏன்யா... இந்தப் புது அஞ்சு ரூபாய் நோட்டக் கொடுத்தா யாராவது ஆறு ரூபா தருவாங்களா?''
சாட்டையடியாக வந்து விழுந்தன வார்த்தைகள்... ஐந்து ரூபாய் என்ன புது வேஷம் போட்டுக் கொண்டாலும், அதன் மதிப்பு ஐந்து தான். வேஷம் போடுவதால் நம் மதிப்பு இம்மியளவு கூட அதிகமாகாது என்பதை அந்த இளநீர்க்கார அம்மா அழகாகச் சொல்லி விட்டார். 
அதிகாரியின் முகத்தில் ஈயாடவில்லை. இந்த நிகழ்வுகள் மிக முக்கியமான ஒரு வாழ்வியல் பாடத்தைப் போதிக்கின்றன. எந்த நிலையிலும் வேடங்கள் கூடாது என்று அழுத்தமாகச் சொல்கின்றன. நம்மைச் செல்வந்தனாகக் காட்டுவதைவிட, உண்மையான செல்வந்தனாவதும், நம்மைப் படித்தவனாகக் காட்டுவதை விட உண்மையாக படித்து அறிவு பெறுவது சிறந்தது. நல்லவனாக வேஷம் போடுவதைவிட நல்லவனாக வாழ்வதே உத்தமம். இப்படி இருந்தால், யாருக்கும் அஞ்சாமல் நிலையான மகிழ்ச்சியுடன் ஆபத்தில்லாமல் வாழலாம்.

No comments:

Post a Comment