Wednesday, August 26, 2015

உங்கள் வேலையை முழுமையான ஈடுபாட்டுடன் செய்தால், நீங்களும் தலைமைப் பதவியில் மகிழ்ச்சியுடன் அமரலாம்

அந்தப் மடாலயத்தில் 500 துறவிகள் இருந்தார்கள். நாள் முழுவதும் தியானத்திலும், தலைமைத் துறவியின் விளக்கங்களைக் கேட்பதிலும் பொழுதைக் கழிப்பார்கள். சமையல், மடத்தைச் சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்வார்கள்.
ஒரு சமயம், தூரத்து கிராமத்திலிருந்து ஒருவன் அந்த மடத்திற்கு வந்தான். அவன் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். கல்வியறிவே இல்லாதவன். தன்னைச் சீடனாக ஏற்கும்படி தலைமைத் துறவியிடம் வேண்டினான். 
""நாங்கள் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கக்கூடாது. ஞானம் பெற 
அவசரப்படக்கூடாது.'' என்ற நிபந்தனையுடன், அவனுக்கு ஏற்ற வேலையைத் தரும்படி தலைமைத் துறவி ஆணையிட்டார். அரிசியைச் சுத்தம் செய்யும் வேலை அவனுக்குத் தரப்பட்டது.
காலையில் ஆரம்பித்து இரவு வரை அதே வேலையைச் செய்து கொண்டிருந்தான் அந்த விவசாயி. நடுவே சாப்பிடவும், மற்ற 
தேவைகளுக்காகவும் குறைந்த நேரம் மட்டுமே இடைவேளை எடுத்துக் கொண்டான்.
அன்று இரவு நன்றாகத் தூங்கினான். மறுநாளும் அதே வேலை. சமையல் அரிசி அப்பழுக்கில்லாமல் மிகவும் சுத்தமாக இருக்கிறது என்று 
சமைக்கும் துறவிகள் சொன்னார்கள். ஆகவே விவசாயிக்கு அதே வேலை தொடர்ந்து கொடுக்கப்பட்டது.
இப்படியே இருபது வருடங்கள் ஆகிவிட்டன. அவன் இன்னும் அரிசி சுத்தம் செய்யும் வேலையைத்தான் செய்து கொண்டிருந்தான். மற்ற துறவிகளுடன் பேசுவதை அறவே நிறுத்தி விட்டான். ஒரு கட்டத்தில் அவனுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்டது. 
தலைமைத் துறவிக்கு வயதாகிவிட்டது. 
தனக்கு அடுத்து தலைமைப் பொறுப்பை ஏற்பவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான தகுதி எந்தச் 
சீடனுக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்வதற்காக எல்லாரையும் அழைத்தார்.
""இந்தத் துறவற வாழ்க்கையில், நீங்கள் உணர்ந்த பேருண்மையை இங்கே இருக்கும் பலகையில் எழுதுங்கள். ஒரே ஒரு நிபந்தனை... அந்தப் பேருண்மை உங்கள் உள்ளுணர்வால் உணர்ந்ததாக இருக்க வேண்டும். எங்கோ படித்ததை எழுதிவைத்தால் நான் 
கண்டுபிடித்துவிடுவேன்... புரிகிறதா?''
அந்த ஐநூறு துறவிகளில் மிகவும் அறிவாளியாகக் கருதப்பட்ட ஒரு துறவி, அந்தப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். 
ஒரு நாள் இரவு அனைவரும் உறங்கியபின் அந்தத் துறவி ஒரு பேருண்மையைப் பலகையில் எழுதிவைத்தார்.. ஆனால், தன் பெயரை 
எழுதவில்லை. துறவி அதனை ஏற்றுக்கொண்டால் பிறகு தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார். 
மறுநாள் காலை... அதைப் பார்த்த தலைமைத் துறவி, ""அற்புதமான வாக்கியம் இது. ஆனால், ஒன்று நிச்சயம். இதை எழுதியவர், தன் 
உள்ளுணர்வு தந்ததை எழுதவில்லை. எங்கோ படித்ததை, யாரோ சொல்லிக் கேட்டதை, அப்படியே இங்கே கக்கியிருக்கிறார். எனவே இதற்கு விளக்கம் சொல்லி, அந்தத் துறவி தலைமைப் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.
எழுதிய துறவிக்கு பயமாக இருந்தது.
அது அவர் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த வாக்கியம் தான். அதன் பொருள் அவருக்குத் தெரியும். அதற்கு விளக்கம் கொடுக்கவும் முடியும். ஆனால், அவருடைய பருப்பு தலைமைத் துறவியிடம் வேகாது என்பது அவருக்குத் தெரியும். அவர் துருவித் துருவிக் கேள்வி 
கேட்பார். முடிவில் உண்மையைக் கண்டுபிடித்துவிடுவார். அது பெரிய அவமானமாகி விடும். மற்றத் துறவிகளும் அவரை மதிக்க மாட்டார்கள். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு அவர் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டார்.
இதன்பின், மடத்தில் இருந்த துறவிகள் அனைவரும் முயன்று பார்த்து விட்டார்கள். யாருடைய பாச்சாவும் பலிக்கவில்லை.
ஒரு நாள் மாலை நேரம்... தலைமைத் துறவி தன் சீடர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்வையிட்டார். சிலர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்கள். சிலர் சிறு குழுக்களாக அமைத்துக் கொண்டு மத நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் விவாதித்துக் 
கொண்டிருந்தார்கள். சிலர் தோட்ட வேலை, சமையல் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். 
அனைவரும், தலைமைத் துறவியைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கிவிட்டுத் தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.
சமையலறையில் ஒரு மூலையில் அந்த விவசாயி அரிசியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். தலைமைத் துறவி வந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. வெளி உலகத்தைப் பற்றிக் கொஞ்சம் கூடச் சிந்தனையில்லாமல், தான் சுத்தம் செய்யும் அரிசி மட்டுமே தன் உலகம் என்ற நினைப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். தலைமைத் துறவி அவன் தோளைப் பிடித்து உலுக்கிய பிறகுதான் அவன் தன்னிலைக்கு வந்தான்.
""உன் பெயரென்னப்பா?''
பேந்தப் பேந்த விழித்தான் விவசாயி. இருபது வருடங்களில் வேறு சிந்தனையில்லாமல் வேலை பார்த்ததில் தன் பெயரைக் கூட மறந்து போயிருந்தான். அவன் செய்யும் வேலையைப் பற்றிக் கேட்டார். அவனது முழுமையான ஈடுபாட்டைக் கண்டு வியந்தார். இவனே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவன் என முடிவு செய்தார்.
தன் அலங்கார அங்கியையும், செங்கோல் போன்ற கம்பையும் அந்த விவசாயிக்குக் கொடுத்தார்.
""நான் இன்னும் சில தினங்களில் இறந்துவிடுவேன். நீ இந்த அங்கியையும் கோலையும் எடுத்துக்கொண்டு மலை உச்சிக்குச் சென்றுவிடு. இவர்களுக்குள் அடுத்த தலைமைத் துறவி யார் என்று சண்டை நடக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாதே. நீ ஒரு இடத்தில் அமர்ந்து கொள். மக்கள் உன்னைத் தேடி வருவார்கள். ஒரு நாள், நீ இந்த மடத்திற்குத் தலைமைத் துறவியாக வருவாய். இன்றிலிருந்து நீ "ஆனந்தா' என்ற பெயரால் அழைக்கப்படுவாய்,'' என்றார்.
துறவி சொன்னது போல் நடந்தது. இது ஒரு சீனக்கதை.
நாம் என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பொறுத்து, நம் வெற்றியும் முன்னேற்றமும் அமைவதில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் நம் வெற்றி, தோல்வி இருக்கிறது. வேலையில் உயர்ந்த வேலை, மட்டமான வேலை என்று எதுவும் கிடையாது. எந்த வேலையையும் மனம் ஒருமித்துச் செய்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும், இதை ஜென் மதம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. மரம் வெட்டுபவர்களும் கசாப்புக் கடைக்காரர்களும் பெரிய ஜென் ஞானிகளாக விளங்கியிருக்கிறார்கள்.
ஓஷோ சொல்வார் ""மூன்றாம் தரமாகக் கவிதை எழுதுபவனைவிட, முதல் தரமாக சூப் வைக்கத் தெரிந்தவன் ஆயிரம் மடங்கு உயர்ந்தவன்.''
""நான் என்ன அரசியல் தலைவனா? இல்லை சினிமா நடிகனா? எழுத்தாளனா அல்லது கவிஞனா? அரசு வங்கியில் சாதாரண குமாஸ்தாவா...'' எந்த தொழிலாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உங்கள் வேலையை முழுமையான ஈடுபாட்டுடன் செய்தால், நீங்களும் தலைமைப் பதவியில் மகிழ்ச்சியுடன் அமரலாம். 

No comments:

Post a Comment