Wednesday, August 26, 2015

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு

பேராசைக்கார அண்ணனும், அப்பாவி தம்பியும் ஒரு வீட்டில் இருந்தனர். சொத்தை அடைய விரும்பிய அண்ணன், தம்பியை துரத்தி விட்டான். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத தம்பி, ஒரு துறவியிடம் தன் கஷ்டத்தைச் சொல்லி அழுதான்.
இரக்கம் கொண்ட துறவி அவனுக்கு ஒரு அதிசயக் கருவியைக் கொடுத்தார். "கடவுள் உனக்கென கொடுத்தது ஒருநாளும் உன்னை விட்டுப் போகாது. ஆனாலும், இப்போதைக்கு இந்த கருவியை வைத்துப் பிழைத்துக் கொள். இதன் மேலுள்ள திருகையை வலப்பக்கம் சுற்றினால் காசு கொட்டும். போதுமான பணம் கிடைத்ததும் இடப்பக்கம் சுற்றினால் நின்று விடும்,'' என்றார்.
அன்றாடம் தேவையான பணத்தை அந்தக் கருவி மூலம் பெற்று வந்த தம்பி நிம்மதியாக வாழ்ந்தான்.
இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்து விட்டது.
தம்பிக்குத் தெரியாமல் கருவியைத் திருடிச் சென்றான். 
ஒரு ஆற்றைக் கடந்து வீட்டுக்குச் செல்ல பரிசலில் ஏறினான். 
நடு ஆற்றில் செல்லும் போது, ""யார் சுற்றினாலும் இந்தக் கருவியில் இருந்து காசு கொட்டுமா?'' என்று சந்தேகம் எழுந்தது. திருகையைச் சுற்றினான். காசு கொட்டியது. ஆனால், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. காசால் கனம் அதிகரித்த படகு ஆற்றில் மூழ்கத் தொடங்கியது. 
பரிசல்காரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனை ஆற்றில் தள்ளி விட்டான். அவன் கருவியுடன் மூழ்கி இறந்து போனான். அண்ணன் இறந்து போனதால் சொத்து மீண்டும் தம்பிக்கே கிடைத்தது.

No comments:

Post a Comment