Wednesday, August 26, 2015

தெய்வீக கதைகள் (4) - சிங்கார முனிவர் பெற்ற எள் தானம்

ராமரின் பட்டாபிஷேகத்தை முன்னிட்டும், ராவணனுடன் செய்த போரில் பலர் கொல்லப்பட்ட பாவம் அவரை விட்டு நீங்கும் பொருட்டும், எல்லாருக்கும் தானம் வழங்க வசிஷ்டர் ஏற்பாடு செய்தார். 
இதுபற்றி முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தார்கள். அரண்மனைக்கு மக்கள் வந்து, தானங்களைப் பெற்றுச் சென்றார்கள். 
வசிஷ்டர் அறிவித்த தானங்களில் எள் தானமும் ஒன்று. இதைப் பெறுபவர்கள் பாவத்தையும் பெற்றுக் கொள்ள நேரிடும் என்பதால் இதைப் பெற முன் வரமாட்டார்கள். அதனால் இந்த தானம் பெறுபவருக்கு, பெரிய தங்கக்கட்டிகள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
அயோத்தி எல்லையில், சிங்கார முனிவர் என்பவர் தன் மனைவி சொர்ணவல்லியுடன் வாழ்ந்து வந்தார். சொர்ணவல்லி நல்ல குணவதியாகவும், ஆன்ம பக்குவம் உடையவளாகவும் இருந்தாள். அவர்கள் வறுமையில் வாழ்ந்தனர்.
"தன் கணவரின் மனம் அருட்செல்வத்தையே நாடும், பொருட்செல்வத்தை நாடாது' என்பதை, சொர்ணவல்லி நன்றாகவே அறிந்திருந்தாள். அதேநேரம், வறுமையை அவளால் தாங்க முடியவில்லை. 
அவள் எள் தானம் பற்றிய அறிவிப்பைக் கேட்டாள். இந்த தானத்தால் பாவம் சேரும் என்றாலும், ஏழ்மையை விரட்ட அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தாள். கணவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னாள்.
அவள் கூறியதைக் கேட்டதும் சாந்தசொரூபியான முனிவர் கடுமையான குரலில், "பொன்னுக்கு ஆசைப்பட்டு என்னுடைய தவத்தையும் தேஜஸையும் இழக்கச் சொல்கிறாயா? என்னைப் பாவியாகச் சொல்கிறாயா?'' என்று வெடித்து அலறினார். 
அதற்கு சொர்ணவல்லி கைகூப்பி வணங்கியபடியே பணிவுடன் கம்மிய குரலில், ""சுவாமி! நீங்கள் உங்கள் தவத்தை இழப்பதற்கு நான் 
சம்மதிப்பேனா? உங்களுக்குப் பாவம் வரட்டும் என்று நான் நினைப்பேனா? கணவன் செய்யும் தர்மத்திற்குத் துணையாக இருப்பவள்தான் 
தர்மபத்தினி. கணவனைப் பாவம் செய்யத் தூண்டுபவள் எப்படி தர்மபத்தினியாவாள்? ராமபிரான் யார்? அவர் சாட்சாத் பரப்பிரம்மம், பரமாத்ம சொரூபம், பரம்பொருள். அவர் இப்போது மனிதவடிவத்தில் வந்திருக்கிறார். நீங்கள் எள் தானம் பெற்றதும், ராமர் முகத்தைப் பாருங்கள்! அப்போது, எள் தானம் பெற்றதால் வந்த பாவம், உங்களை விட்டு அந்த விநாடியே நீங்கிவிடும். எவ்வளவு பெரிய காட்டையும் சிறிய ஒரு நெருப்புப் பொறியே எரித்துவிடுகிறது அல்லவா! அதுபோல, பரமாத்மாவான ராமரின் திவ்ய முகத்தை நீங்கள் தரிசித்த உடனேயே, எள் தானம் பெற்ற பாவம் உங்களை விட்டு நீங்கிவிடும்,'' என்றாள்.
சொர்ணவல்லியின் விளக்கம் கேட்டு, முனிவரின் மனம் சிறிது சமாதானம் அடைந்தது. 
அவர் அரை மனதுடன் சம்மதித்தார். இந்த செய்தி, வசிஷ்ட மகரிஷிக்குத் தெரிய வந்தது. 
அவருக்கு, சிங்கார முனிவர் மிகவும் உயர்ந்த தபஸ்வி என்பது நன்றாகத் தெரியும். இதற்கான காரணத்தை ஆழ்ந்து யோசித்த போது, "சிங்கார முனிவர் தங்கத்திற்கு ஆசைப்படுபவர் அல்ல. அவர் பரம ஏழை. மனைவி கூறியதற்கிணங்க, வறுமையைப் போக்கிக்கொள்ள எள் தானம் பெற முன்வந்திருக்கிறார். தானம் பெற்றதும், ஸ்ரீ ராமர் முகத்தைத் தரிசித்து பாவம் நீக்கிக்கொள்ள நினைக்கிறார்' என்று யூகித்து புரிந்து கொண்டார்.
அதே நேரம் அவர் எள் தானம் பெற்றதும், ராமர் முகத்தைப் பார்த்து விட்டால், எள் தானம் பயன் தராமல் போய்விடும். ஆதலால் தானம் 
பெற்றதும், ராமர் முகத்தை முனிவர் பார்ப்பதை திரையிட்டுத் தடுக்க வேண்டும்' என்று முடிவு செய்தார். 
குறிப்பிட்ட நாளில் சிங்கார முனிவர் அரண்மனைக்குச் சென்றார். எள் தானம் பெறுவதற்கு உரிய வேத மந்திரங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. தானம் பெற்றதும், ராமரின் திவ்ய முகத்தைத் தரிசிக்க வேண்டும்!' என்ற எண்ணத்துடன் சிங்கார முனிவர் மேடைக்குச் சென்றார்.
அங்கு ராமர் எள்ளைத் தாரை வார்த்து முனிவருக்குத் தானம் கொடுத்தார். அவ்வளவுதான்! திடீரென்று ராமருக்கும் முனிவருக்கும் இடையில் ஒரு திரை விழுந்தது! இப்படி ஒரு நிகழ்ச்சி அங்கு நிகழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 
முனிவர் அதிர்ந்து போனார். அவரது மனம் கவலையில் மூழ்கியது. "இப்போது எள் தானம் பெற்றதால், எனக்குப் பாவம் அல்லவா வந்து சேர்ந்திருக்கிறது!' என்று நினைத்து நினைத்து, அவரது உள்ளம் பதறியது. நடை தள்ளாடியது. நடைபிணமாகத் தள்ளாடித் தள்ளாடி நடந்து, ஒருவாறு தன் குடிலை அடைந்தார். 
அதற்குள் அரண்மனை வீரர்கள் ஒரு வாகனத்தில், சிங்கார முனிவர் குடிலில் தங்கக்கட்டிகளை இறக்கிவிட்டுச் சென்றிருந்தார்கள். 
சொர்ணவல்லி முனிவரை வரவேற்க மகிழ்ச்சியுடன் தயாராகிக் கொண்டிருந்தாள். 
உற்சாகம் இழந்து கவலையுடன் வந்த முனிவரைப் பார்த்து, சொர்ணவல்லி பதறிப் போனாள். 
நடந்ததை அறிந்து, தன் தலையில் இடி விழுந்ததுபோல் நடுங்கினாள். 
அப்போது அவள் சிந்தனையில், முனிவரின் கவலையைப் போக்குவதற்கு உரிய ஒரு வழி பிறந்தது. 
"சுவாமி! நடந்தது நடந்துவிட்டது! இன்னும் சில நாட்களில் பட்டாபிஷேக விழாவின் கடைசி நாளன்று, மங்கள வாத்தியங்கள் முழங்க ராமர் தேரில் பவனி வரவிருக்கிறார். அந்த நேரத்தில் நீங்கள் அருகில் சென்று தரிசனம் செய்யுங்கள். பாவம் நீங்கிவிடும்,'' என்று ஆறுதல் கூறினாள்.
இந்த யோசனை முனிவருக்கு சரியாக பட்டது. 
அன்ன ஆகாரமின்றி கவலையுடன், ராமரின் தேர் நகர்வலம் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார். 
அந்த நாளும் வந்தது. முனிவர் ஓடிச் சென்று பக்தியுடன் கண்ணீர் வழிய, ""ராமா, ராமா!'' என்று அழைத்தபடியே, தேரில் இருந்த ராமரைக் கண் குளிரத் தரிசித்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். 
எழுந்து நின்ற முனிவரின் கைகளை, ராமரின் காக்கும் கரங்கள் அன்புடன் பற்றிக்கொண்டன.
"எள் தானம் பெற்ற பாவம் காரணமாக, நீங்கள் சிறிது காலம் துன்பப்பட நேர்ந்தது. இப்போது அந்தத் துன்பம் உங்களைவிட்டு முழுமையாக நீங்கிவிட்டது. இனி உங்கள் தவவாழ்க்கை என்றும் வளமானதாக இருக்கும்,'' என்று கூறி ஆசீர்வதித்தார். 
அந்தக் கணமே முனிவர் இழந்த தவத்தையும், தேஜஸையும் மீண்டும் பெற்று, பாவம் நீங்கி குடிலுக்குத் திரும்பினார். 
அதன்பிறகும் முனிவர் தங்கக்கட்டிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 
சிங்கார முனிவர் பற்றி நாம் மேலே பார்த்த நிகழ்ச்சியை தியாகராஜர் ஒரு கீர்த்தனையில், ""சிங்கார முனிவர் எள் தானம் பெற்றதன் பயனாகிய தங்கத்தை அனுபவித்தாரா? விபீஷணன் வேண்டியும் ரங்கநாதர் இலங்கைக்குச் சென்றாரா? எந்தச் செயலும் விதிப்படித்தான் நடக்கும்,'' என்று கூறியிருக்கிறார்.
இன்னும் கேட்போம்...

சுவாமி கமலாத்மானந்தர்

No comments:

Post a Comment