Wednesday, August 26, 2015

தெய்வீக கதைகள் (1) - அமைச்சர் வழங்கிய அறிவுரை

பெரிய பணக்காரனிடம், அறிவொளி என்ற அடிமை வேலை செய்து வந்தான். அவன் தன் எஜமானனுக்கு உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும், நம்பிக்கைக்குப் பெரிதும் உரியவனாகவும் நடந்துகொண்டான். 
அதனால் மகிழ்ச்சி அடைந்த பணக்காரன், அறிவொளிக்கு விடுதலை கொடுத்தான். மேலும், அவனுக்கு ஒரு கப்பல் நிறைய சரக்குகள் கொடுத்து, "இந்தச் சரக்குகளை நீ வெளிநாட்டில் விற்று, பணக்காரனாகி நன்றாக வாழ வேண்டும்,'' என்றுகூறினான். 
அறிவொளி தன் எஜமானனை வணங்கி, புறப்பட்டான்.
ஒரு நாள் புயலிலும் சூறாவளியிலும் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்தவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 
அறிவொளி, உடைந்த கப்பலின் ஏதோ ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு ஒரு தீவில் ஒதுங்கினான். தன்னுடைய ஆதரவற்ற நிலையை நினைத்து கண்ணீர்விட்டு அழுதான். 
"இனி நான் என்ன செய்வேன்? இப்படிப்பட்ட அவலநிலை எனக்கு வந்துவிட்டதே! இனி நான் ஏன் வாழ வேண்டும்?'' என்றெல்லாம் கூறி, அழுது புலம்பினான். 
அப்போது எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
அவனை நோக்கிப் பலர் மேளதாளம் முழங்க, "அரசரே வருக, வருக! அரசர் வாழ்க, வாழ்க!'' என்றபடியே ஒரு யானையுடன் வந்தார்கள். 
அறிவொளியின் அருகில் வந்ததும், யானை அவன் கழுத்தில் மாலை அணிவித்தது! பிறகு, தன் முதுகில் வைத்துக்கொண்டு புறப்பட்டது. 
எல்லாரும் அவனை, ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். 
சிம்மாசனத்தில் அமர வைத்து, "இந்த விநாடியிலிருந்து நீங்கள்தான் எங்கள் தீவுக்கு அரசர்!'' என்று கூறினார்கள்.
அறிவொளிக்கு அதிசயமாக இருந்தது. 
தன் அருகில் நின்ற முதியவரிடம், "இது எல்லாம் என்ன? எனக்கும் இந்தத் தீவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே! என்னைப்போய் இவர்கள் "ராஜா!' என்கிறார்களே... எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் யார்?'' என்று கேட்டான். 
முதியவர், "அரசே! நான் இந்த நாட்டின் அமைச்சர். எங்கள் தீவில் ஒரு வழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்தத் தீவில் அநாதையாக வந்து ஒதுங்குபவரை, நாங்கள் அரசராக்கி விடுவோம். அந்த வழக்கத்தையொட்டி, இப்போது நீங்கள் தான் எங்கள் தீவுக்கு அரசர்,'' என்று தெரிவித்தார்.
அறிவொளி: அப்படியா! இதற்கு முன்பு இந்தத் தீவிற்கு அரசர் இல்லாமலா இருந்தார்?
அமைச்சர்: முன்பு ஒருவர் இருந்தார். 
அறிவொளி: இப்போது அவர் எங்கே? 
அமைச்சர்: எங்கள் தீவில் அநாதையாக வந்து ஒதுங்குபவரை, நாங்கள் அரசராக ஆக்கி விடுவோம் என்று கூறினேன் அல்லவா?'' 
அறிவொளி: ஆமாம், கூறினீர்கள்.
அமைச்சர்: அப்படி அரசரான ஒருவர், இந்தத் தீவில் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் அரசராக இருக்க முடியும். 
அறிவொளி: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு...?
அமைச்சர்: "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தீவில் அரசராக இருப்பவரை, தூரத்தில் இருக்கும் ஒரு தீவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.
அறிவொளி: "இதற்கு முன்பு இங்கு அரசராக இருந்தவர்கள் எல்லாரும், இப்போது அந்தத் தீவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?'' 
அமைச்சர்: அவர்கள் எப்படி இப்போது அந்தத் தீவில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்? அவர்கள் அங்கு சென்றதுமே, அங்குள்ள காட்டு மிருகங்கள் அவர்களை அடித்துக் கொன்று விடும் 
அறிவொளி: "ஐயோ! என்னையும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீவில் கொண்டுபோய்விடும்போது, காட்டு மிருகங்கள் அடித்துக் கொன்றுவிடுமா? 
அமைச்சர்: ஆமாம். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், உங்களுக்கும் அந்த நிலை தான் ஏற்படும்! அதில் என்ன சந்தேகம்?'' 
அறிவொளி: நான் எச்சரிக்கையாக எப்படி இருப்பது? நான் எச்சரிக்கையாக இருந்தால், அந்த நிலையை என்னால் தவிர்க்க முடியுமா?
அமைச்சர்: முடியும்... நீங்கள் இப்போது இந்தத் தீவின் அரசர். எனவே உங்கள் விருப்பம் எதுவோ அது உடனே நிறைவேற்றப்படும். நீங்கள் அந்தத் தீவிற்கு இங்குள்ள மக்களை அனுப்பி, காடுகளை அழித்து, மக்கள் வாழ்வதற்கு உரிய இடமாக மாற்றுங்கள். அதன்பின்னர் இப்போது நாம் இருக்கும் இந்தத் தீவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினரை, அங்கு குடியேறும்படிச் செய்யுங்கள். அங்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துங்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை அங்கு கொண்டுபோய் விடும்போது, நீங்கள் அந்த நாட்டின் அரசராகி விடுங்கள்!'' 
அறிவொளி: இது மிகவும் நல்ல யோசனையாக இருக்கிறதே! இதற்கு முன்பு அரசர்களாக இருந்தவர்களுக்கு, நீங்கள் இந்த யோசனையைச் சொல்லவில்லையா?
அமைச்சர்: சொன்னேன். ஆனால், அவர்கள் நான் கூறிய இந்த யோசனையைப் பின்பற்றவில்லை. 
அறிவொளி: நான் அப்படிச் செய்யமாட்டேன். நீங்கள் கூறிய யோசனையை எழுத்துக்கு எழுத்து அப்படியே நான் பின்பற்றப் போகிறேன். 
நான் இங்கு அரசனாக இருக்கும்போதே, நீங்கள் கூறிய அந்தத் தீவில் ஒரு நாட்டை உருவாக்கப் போகிறேன். 
அமைச்சர்: அரசே! நீங்கள் இங்கு அரசராக இருக்கப் போகும் ஐந்தாண்டு காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், நிச்சயமாக நீங்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீவின் அரசர் ஆகிவிடுவீர்கள். இதுபோல்தான் அரசே! மனிதன் இந்த உலகில் அதிகபட்சம் நூறு ஆண்டுகள்தான் வாழ்கிறான். அவன் வாழும் காலத்தில் அற்ப உலக ஆசைகளுக்குத் தன் உள்ளத்தில் இடம் கொடுக்கிறான். அவ்வாறு இல்லாமல் தெய்வபக்தி, ஆன்மிக சாதனைகள், மனஅடக்கம், ஒழுக்கம், தியாகம், தொண்டு போன்ற தெய்விகக் குணங்களுடன் - வாழ வேண்டும். அவ்விதம் வாழ்ந்தால் அவனுக்கு என்றென்றும் அழியாத நிலையாகிய நித்திய வாழ்க்கை, மோட்சம், அமர வாழ்க்கை கிடைத்துவிடும்.'' அமைச்சரின் அறிவுரைப்படி அறிவொளி வாழ்ந்தான். அதனால் அமைச்சர் கூறிய அனைத்து நன்மைகளும் அவனுக்குக் 
கிடைத்தன. நிலையற்ற உலக வாழ்க்கையை முறையாகப் பயன்படுத்தினால், நிலையான இறைவனையே பெற்றுவிட முடியும். 

No comments:

Post a Comment