Wednesday, August 26, 2015

லட்சுமி வந்தாச்சு!

செல்வபுரம் கிராமத்தில் வசித்த பண்ணையார் நல்லபெருமாளுக்கு மூன்று மகன்கள். மூவருக்கும் வசதியான இடத்தில் பெண் அமைந்தது. மாமனார் செல்வந்தர் என்பதால் மருமகள்களும் விழுந்து விழுந்து கவனித்தனர். நல்ல பெருமாள் லட்சுமி தாயாரின் பக்தர். அதற்கேற்றாற் போல், நல்ல பெருமாளின் பக்கம் தன் கடைக்கண் பார்வையை வைத்திருந்தாள் லட்சுமி. செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.
எவ்வளவு பெரியவரானாலும், தெய்வம் அவரை சோதிக்காமல் விடுவதில்லை. நல்ல பெருமாளுக்கும் சோதனையான காலகட்டம் வந்தது. ஒருநாள், லட்சுமி தாயாரே நல்ல பெருமாளின் கனவில் வந்து,""பக்தனே! உனக்கு வேண்டுமளவு செல்வம் தந்து விட்டேன். இனி உன் வீட்டை விட்டு வேறு இடத்துக்கு போக இருக்கிறேன். நீ என்னிடம் என்னென்ன கேட்க வேண்டுமோ, அதைக் கேட்டு வாங்கிக் கொள். நாளை நான் நேரிலேயே உன் முன் தோன்றுவேன். அப்போது வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொள்,'' என்றாள். 
பண்ணையாரும் தலையாட்டினார். கனவு கலைந்தது. விழித்துக் கொண்ட அவர், லட்சுமி தன் வீட்டை விட்டு கிளம்பி விட்டால், நிலைமை என்னாகுமோ என கவலைப்பட்டார்.
மறுநாள் தன் மூன்று மருமகள்களையும் அழைத்து, ""மருமகள்களே! விஷயம் இப்படி... லட்சுமி நம் வீட்டை விட்டு கிளம்பப் போகிறாள். அதற்குள் வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள சொல்லியிருக்கிறாள். இன்று மாலை பூஜையின் போது, என் கண்ணுக்கு மட்டும் தெரிவாள். அவளிடம் நீங்கள் சொன்னதைச் சொல்லப் போகிறேன். என்ன கேட்கலாம்?'' என்றார்.
மூத்தவள் அவரிடம்,""மாமா! இதென்ன பிரமாதம். இப்போது நம்மிடம் இருப்பது போல, பத்து மடங்கு தங்கம் கேளுங்கள். அதை விற்றுச் சாப்பிட்டாலே, நம் தலைமுறைக்கும் சரியாக இருக்கும்,'' என்று யோசனை சொன்னாள்.
அடுத்தவள்,""தங்கம் கிடக்கட்டும்... மாடமாளிகை போன்ற பத்து, இருபது வீடுகளைக் கேளுங்கள். பல கோடி ரூபாய் பணம் கிடைக்கும் வகையில் அனுக்கிரகம் செய்யச் சொல்லுங்கள். வீடுகளை கொழுத்த வாடகைக்கு விட்டு விடலாம். பணமும் கையில் இருக்கும். பிறகென்ன...நான் கேட்பது சரி தானே!'' என்றாள்.
கடைசி மருமகளைப் பார்த்தார் பண்ணையார்.
""மாமா! மன அமைதியும், நிம்மதியுமே அழியாத செல்வம். எவ்வளவு பணம் இருந்து என்ன செய்ய! இந்த இரண்டும் இல்லாவிட்டால் அந்த பணத்தால் என்ன பலன்? எனவே, இவை இரண்டையும் கேட்டுப் பெறுங்கள்,'' என்றாள். மறுநாள் லட்சுமி வந்தாள். பண்ணையார் மூவர் கோரிக்கையையும் அடுக்கினார்.
கடைசி கோரிக்கையை கேட்ட லட்சுமி திகைத்து விட்டாள்.
""பக்தனே! மன அமைதியும், நிம்மதியும் வேண்டுமானால் நான் இங்கே தங்கியே ஆக வேண்டும். நான் இருக்கும் இடத்தில் தான் அது 
சாத்தியம். உன் கோரிக்கையை ஏற்று இங்கேயே தொடர்ந்து தங்குகிறேன்,'' என்றாள்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்யும் போது, தாயாரிடம் நீங்கள் கேட்க வேண்டியது இந்த இரண்டு மட்டும் தான்!

No comments:

Post a Comment