Wednesday, August 26, 2015

எதிர்காலம் பொன்னாகும்!

ஒரு சிறைச்சாலைக்கு புது கைதி ஒருவன் வந்தான். பழைய கைதிகளிடம், "ஏன் உள்ளே வந்தீர்கள்?' என விசாரித்தான்.
ஒருவர் "நான் செய்யாத குற்றத்திற்காக வந்தேன்' என்றார்.
ஒருவர் "போடா வேலையத்தவனே! காரணத்தைச் சொன்னால் என்னை விடுதலை செய்து விடுவாயாக்கும்' என எரிந்து விழுந்தார்.
ஒரே ஒருவர் மட்டும் "நான் பெருங்குற்றம் செய்தேன். அதற்குரிய தண்டனையை அனுபவிக்கிறேன். செய்த குற்றத்தை நினைத்து வருந்துகிறேன். என் குடும்பம் இப்போது கஷ்டப்படுவதை விட, என்னால் பாதிக்கப்பட்ட குடும்பம் கஷ்டப்படுமே... அதை நினைத்து ரொம்பவும் வருத்தப்படுகிறேன். நான் வெளியே சென்றதும் முதல் காரியமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அவர்கள் அறியாவண்ணம் உதவி செய்வேன்,'' எனச் சொல்லி கதறினார்.
புதுக்கைதி மந்திரியை அழைத்தான்.
"இவரை விடுதலை செய்,'' என்றான். 
மந்திரியும் விடுவித்து விட்டார். அந்த புதுக்கைதி வேறு யாருமல்ல, அந்நாட்டு ராஜா. மாறுவேடத்தில் வந்திருந்தார். தவறு செய்தவன் திருந்தியதுடன், தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையும் செய்ய வேண்டும் என விரும்பியதால், அவனை விடுதலை செய்தார். 
தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்திக் கொண்டால் எதிர்காலம் பயனுள்ளதாகும்.

No comments:

Post a Comment