Wednesday, August 26, 2015

அரண்மனைக்கு வந்த ஒரு துறவிக்கு, மன்னன் தன் அரண்மனையைச் சுற்றிக் காண்பித்தான். பொன்னால் செய்த சிங்காதனங்கள், வைரம் பதித்த மணிமகுடங்கள், உண்பதற்குத் தங்கத் தாம்பாளம், பெரிய விளக்குகள், தங்கக் கட்டில்கள், மணிமாடங்கள்...வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
"சுவாமி, எப்படி இருக்கிறது என் அரண்மனை?''
"எனக்கென்னவோ என் அரண்மனை இதைவிடப் பல மடங்கு பிரமாதம் என்றுதான் தோன்றுகிறது.''
மன்னனின் மனதில் சஞ்சலம்...
எப்படியாவது துறவியின் அரண்மனையைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். பல தினங்கள் பயணம் செய்து ஒரு வழியாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஒரு கிராமத்தில் இருந்த துறவியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தான். அது மிகச் சிறிய குடிசை.. 
"இதுதானா தங்கள் பிரம்மாண்டமான அரண்மனை? உட்காரச் சரியான ஆசனம் கூட இல்லை. தங்கக் கட்டில்கள் இல்லை, சர விளக்குகள் இல்லை. அழகு ஓவியங்கள் எதுவுமே இல்லை...''
"அது இருக்கட்டும் அப்பனே! உன்னுடைய சிங்காதனம் பொற்கட்டில்கள், மணிமகுடங்கள் எதையுமே காணவில்லையே!''
"நான் இப்போது அரண்மனையில் இல்லையே! பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இங்கே நாட்டு மன்னனாக வரவில்லை. ஒரு 
வழிப்போக்கனாக வந்திருக்கிறேன்.''
"நானும் ஒரு வழிப்போக்கன்தான். இந்த உலகத்தின் வழியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ''
"உங்களுடைய பிரம்மாண்டமான அரண்மனை...?''
"இறைவனின் சன்னிதானம்... அதன் பிரம்மாண்டத்தின் முன் உன் சிங்காதனமும், மணிமகுடங்களும் அழகான குப்பைகளே.. நீ இருப்பதும் ஒரு சத்திரம் தான்.''
"என்ன சொல்கிறீர்கள்?''
"சரி, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நீ அந்த அரண்மனையில் இருந்தாயா?''
"இல்லை.''
"அப்போது யார் இருந்தார்கள்?''
"என் தந்தை.''
"நூறுவருடங்களுக்கு முன்னால்''
"என் தாத்தா''
"இன்னும் நூறுவருடங்கள் கழித்து நீ உன் அரண்மனையில் இருப்பாயா?''
"மாட்டேன். என் வம்சாவளியினர் இருப்பார்கள்.''
"சத்திரம் என்பது என்ன? பயணிகள் வந்து தங்கி இளைப்பாறி விட்டுப் போகும் இடம் சாதாரணச் சத்திரங்களில் இரண்டு மூன்று 
நாட்கள் இருந்துவிட்டுப் போய் விடுவார்கள். உன் அரண்மனை ஒரு வித்தியாசமான, விசாலமான சத்திரம். ஐம்பது அல்லது 
அதிகபட்சம் நூறு வருடம் இருந்துவிட்டுப் போய்விடுவாய். சத்திரத்தில் இருக்கும் பிரம்மாண்டத்தை என்னுடையது என்று நீயும் கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அது நேற்று யாருடையதாகவோ இருந்தது. நாளை வேறு யாருடையதாகவோ இருக்கப் போகிறது. நடுவில் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?''
மன்னன் அதிர்ச்சியில் மவுனமானான். 
அகந்தை அழிந்து, அவனுக்கு ஞானம் பிறந்தது.
இன்று பலரும் இந்த உலகில் ஆயிரம் ஆண்டுகள் இருக்கப்போகிறோம் என்ற நினைப்பில் கோடிக்கணக்காகச் சொத்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் நிரந்தரக் குடியுரிமை என்று யாருக்குமே வழங்கப்படவில்லை.
அமெரிக்காவிற்கு ஒரு சுற்றுலாப் பயணியாகச் செல்ல விரும்பினால் பி2 விசா கொடுப்பார்கள். அது ஆறே மாதங்களில் காலாவதியாகி விடும். மென்பொருள் நிறுவன வேலை விஷயமாகச் சென்றால் எச்1பி விசா கொடுப்பார்கள் - அது ஆறு வருடங்களில் காலாவதியாகிவிடும். தொழில் முறையாகப் பயணம் செய்ய பி 1 விசா. அதற்கான ஆயுட்காலம் பத்து ஆண்டுகள்.
இந்த உலகத்தில் வாழ நமக்கும் வாழ்க்கை என்னும் விசா கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். சிலருடைய விசா இருபது வருடங்களில் காலாவதியாகி விடும். சிலருடைய விசா 90 ஆண்டுகளுக்கு மேலும் இருக்கலாம். ஆனால், இன்றைய தேதியில் நூறாண்டுகள் கடந்தபின்னும் காலாவதியாகாத வாழ்க்கை விசா வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 
நமது நீண்ட நெடும் ஆன்மிகப் பயணத்தின் வழியில் இந்த உலகம் ஒரு சத்திரம். இங்கே ஐம்பது ஆண்டுகளோ, எண்பது ஆண்டுகளோ தங்கி இளைப்பாறி, நம் வேலைகளை முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடரவேண்டும்.
பயணிகளாக வந்திருக்கும் நமக்கு ஏன் பேராசை? ஏன் மற்ற பயணிகளுடன் சண்டை போட வேண்டும்?
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் போது அங்கே நாம் உபயோகித்த பொருட்களில் சிலவற்றையாவது நம்முடன் கொண்டு வந்து 
விடலாம். இந்த உலகத்தை விட்டு நாம் செல்லும்போது, ஊசியைக் கூடக் கொண்டு செல்ல முடியாது. இங்கே பெறப்பட்டதை இங்கேயே விட்டுவிட்டு, எப்படி வந்தோமோ அப்படியே செல்ல வேண்டும். 
ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி 
முன் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''
"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர்.
நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.
இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது. 
"பரவாயில்லை. இங்கேயே சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்துவிடுகிறேன்.''
இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார்.
"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிட்டுவிடுங்கள்.''
"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''
"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான். அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் 
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. அகந்தையின் தேவைகள்தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். உங்கள் அகந்தைக்கு... நான்காயிரம் கோடி என்ன... நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''
இயக்குனர் பெரிதாக அழ ஆரம்பித்தார். 
அவர் மீதம் வைத்த அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டும் இல்லை. நமக்கும் பல மகத்தான பாடங்களைச் சொல்லிக் 
கொடுக்கிறது.
"தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நாடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே''
என்று ஒரு புறநானூற்றுப் பாடல் சொல்கிறது. 
தென் தமிழகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளும் மன்னனுக்கும், பகலிலும் இரவிலும் தூங்காமல் விலங்குகளைப் பார்த்துக் 
கொண்டிருக்கும் படிக்காத ஒரு வேடனுக்கும் உண்பதற்குத் தேவை கால் படி உணவு. மேலாடை, கீழாடை என்பது இதன் பொருள்.
இதை மனதில் வைத்துக்கொண்டு வாழத் தொடங்குவோம். மூர்க்கத்தனமாகப் பொருட்களைச் சேகரிக்கும் முட்டாள் தனத்தை விட்டு விடுவோம். கொண்டு போக முடியாத பொருளைச் சேர்ப்பதைவிட இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம். 
இந்த உலகம் நமக்குப் பயன்பட்டதைப் போல், வருங்காலத்தில் வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும். நாம் நுழைந்த போது இருந்ததைவிட, இன்னும் சிறப்பான நிலையில் இந்த உலகத்தை விட்டுவிட்டு மேலே செல்வோம். இப்படி செய்தால், நம் 
உள்ளங்களில் மட்டுமல்ல... எதிர்கால சந்ததியின் இதயங்களிலும் மகிழ்ச்சி மலரும்.

No comments:

Post a Comment