Wednesday, August 26, 2015

கருணை மழை பொழியட்டும்

அரக்கர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் இருப்பிடம் எது என்றெல்லாம் தேட வேண்டாம். 
""இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர்'' என்கிறார் கம்பர். 
"இங்கு' என்பதற்கு எதிர்ப்பதம் "அங்கு' என்பது போல, "இரக்கம்' என்பதற்கு எதிர்ப்பதம் "அரக்கம்'. ஒருமுறை மன்னர் விக்ரமாதித்தர், காட்டுப் பகுதியில் குதிரையில் சென்று கொண்டிருந்தார். சற்று தூரத்தில் பசு ஒன்று பெரும் சேற்றில் சிக்கி மீள முடியாமல் 
தவித்துக் கொண்டிருந்தது. அதை.... 
வெளியே கொண்டு வர, மன்னர் கடுமையாக முயற்சித்தார். முயற்சி வீணானது. பொழுது சாயும் நேரம்.... மன்னர் திகைத்த வேளையில்.... 
உறுமல் சத்தம் கேட்டது. பசுவை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்த நேரத்தில், மன்னர் திரும்பிப் பார்த்தார். 
அங்கே..... 
ஒரு சிங்கம் பசுவின் மீது பாயத் தயாராக இருந்தது. 
அதைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் மன்னருக்கு உண்டானது. 
வாளை உருவிக் கொண்டு, சிங்கத்தை எதிர்கொள்ளத் தீர்மானித்தார். அவ்வப்போது சிங்கம் பசுவை நோக்கிப் பாய்வதும், அதை மன்னர் தடுப்பதுமாக இரவுப்பொழுது போய்க் கொண்டிருந்தது. அப்போது..... 
அங்கிருந்த மரத்தில் இருந்த ஒரு கிளி விக்ரமாதித்தரிடம், ""மன்னா! ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? சேற்றில் அகப்பட்ட பசு, எப்படியும் இறக்கத் தான் போகிறது. நீ களைத்து இருக்கும் போது, சிங்கம் உன் மீது பாய்ந்து உன்னைக் கொன்று விட்டால், என்ன செய்வாய்? ஆகையால், பசுவைக் காப்பாற்றுவதை விடு! நீ பாதுகாப்பாக இரு! உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்!'' என்றது. 
மன்னர் மறுத்தார். 
""கிளியே! நீ எனக்கு அதர்மமான வழியைக் காட்டாதே. எல்லா ஜீவராசிகளும் தான், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றன. ஆனால், அடுத்தவரைக் காப்பதற்காக, எவனொருவன் தன் உயிரைக் கொடுக்கிறானோ அவனே புண்ணியத்தை சம்பாதிக்கிறான். தலைவன் 
இல்லாத படை, எப்படி பயனில்லாமல் போகுமோ, அது போல இரக்கம் இல்லாத புண்ணிய செயலும் வீண் தான்'' என்றார். 
அதே விநாடியில்.... 
பொழுது விடிந்தது. பசு, சிங்கம், கிளி மூன்றையும் காணோம். அங்கே இந்திரன், தர்ம தேவதை, பூமாதேவி ஆகியோர் இருந்தார்கள். 
""விக்ரமாதித்தா! உன் இரக்கம் கண்டு மகிழ்ந்தோம்,'' என்று வாழ்த்தி, காமதேனுப் பசுவை பரிசாக அளித்து மறைந்தார்கள். 
இரக்கமே இன்பத்திற்கான திறவுகோல்.....!

No comments:

Post a Comment