Wednesday, August 26, 2015

இனியாவது நமக்கு பிடித்ததைச் செய்து, மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நாட்டு மன்னன் கவலையில் ஆழ்ந்திருந்தான். அண்டைநாட்டு மன்னனுடன் போர் மூளும் சூழ்நிலை இருந்தது. போரில் யார் வெற்றி பெற்றாலும் உயிரிழப்பும் பொருள் இழப்பும் இரண்டு நாடுகளையும் பெரிய அளவில் பாதிக்கும். போரை எப்படி நிறுத்துவது?
இதற்கிடையில் தலைமை ஒற்றன் ஒரு முக்கியமான செய்தி கொண்டு வந்திருந்தான். அண்டைநாட்டு மன்னனுக்குப் போரில் 
நாட்டமில்லையாம். ரத்த வெறி பிடித்து அலையும் அவனுடைய தளபதி தான் போர் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறானாம். இந்த மன்னனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, அண்டைநாட்டு மன்னனைப் போருக்குச் சம்மதிக்க வைத்துவிட்டானாம். 
மன்னனுக்கு ஒரு யோசனை தோன்றியது. 
அரசவையில் இருக்கும் அறிஞர்களில் மிகச் சிறந்தவரான பிரம்மராயர் என்பவரை அழைத்துப் பேசினான்.
""நீங்கள் அண்டை நாட்டுக்குச் செல்ல வேண்டும். ஒரு அறிஞனாக. ஒரு கவிஞனாக. அங்கே போய் ஒரு தூதுவனின் வேலையைச் செய்ய வேண்டும். போர் நிகழ்வதால் இரண்டு நாடுகளுக்கும் பேரழிவு ஏற்படும் என்பதை உணர்த்தி எப்படியாவது தடுத்து நிறுத்த 
வேண்டும்.''
பிரம்மராயர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பயணமானார். அங்கே அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசவையில் முக்கியமான பதவி கொடுக்கப்பட்டது. ராயரோ வந்த வேலையை மறந்துவிட்டு, அண்டை நாட்டு மன்னனை புகழ்ந்து பாடி 
பரிசுகளைப் பெறுவதில் முனைப்பாக இருந்தார். இந்த நாட்டு மன்னன் பல நினைவூட்டல் ஓலைகளை அனுப்பியும் பயனில்லை.
போர் நிகழ்வது உறுதியாகிவிட்டது. ஒருநாள், தூது அனுப்பிய மன்னன் போர்க்குதிரைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, வயதான ஒரு குதிரைக்காரன் மன்னனின் முகத்தில் இருந்த சோர்வைக் கவனித்துவிட்டான். பயந்து பயந்து காரணம் கேட்டான். குதிரைக்காரனின் கனிவான முகத்தைப் பார்த்து நெகிழ்ந்த மன்னன் மனதில் இருந்ததைக் கொட்டினான்.
""அரசே! எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். நம் லாயத்திலேயே சிறந்த ஆறு குதிரைகளையும், செலவுக்கு பணமும் கொடுங்கள். போரைத் தடுத்து நிறுத்துவது என் பொறுப்பு.''
அந்த யோசனையை ஏற்றுக் கொண்டான் மன்னன்.
குதிரைக்காரனும் அண்டை நாட்டை அடைந்து மன்னனை சந்தித்தான்.
""நான் மேலைநாட்டிலிருந்து வருகிறேன் மன்னா. இந்தக் குதிரைகளை உங்களுக்குப் பரிசாகக் கொண்டு வந்திருக்கிறேன்.''
குதிரைக்காரன் சொல்வது கேட்டு மகிழ்ந்தான் அண்டை நாட்டு மன்னன். பதிலுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டான்.
""உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும். மற்றும் உங்கள் குதிரை லாயத்தில் ஒரு வேலை. எவ்வளவு முரட்டுக் குதிரையாக இருந்தாலும் அதை அடக்கி வழிக்குக் கொண்டு வரும் வித்தை எனக்குத் தெரியும் மன்னா.''
மன்னனின் மகிழ்ச்சி பன்மடங்காயிற்று. குதிரைக்காரனுக்கு வேலை கிடைத்தது. அந்த மன்னன் தினமும் குதிரை லாயத்திற்குச் சென்று வயதான குதிரைக்காரனுடன் அளவளாவுவதைப் பழக்கமாக வைத்திருந்தான். குதிரைக்காரனின் அறிவு மன்னனைப் பிரமிக்க வைத்தது. அவன் மேல் மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அவன் ஊதியம் இரு மடங்காக்கப்பட்டது.
ஒரு நாள் மாலை நேரத்தில் மன்னன் மட்டும் தனியாகக் குதிரை லாயத்திற்கு வந்திருந்தான். பொன்னான அந்த வாய்ப்பைக் குதிரைக்காரன் தவறவிடவில்லை.
மன்னனிடம் புதிதாக வந்திருந்த ஒரு பெரிய அரபுக் குதிரையைக் காண்பித்தான்.
""அரசே! இது மிகவும் வலிமை வாய்ந்த குதிரை. மின்னல் வேகத்தில் ஓடக் கூடியது. பல நாட்கள் உணவில்லாமல் போரிடக் கூடியது. ஆனால். .. . ''
""என்ன இழுக்கிறாய்?''
""இது எப்போதுமே தன்போக்கில் தான் செயல்படும். குதிரைக்காரன் சொல்வதை ஒரு நாளும் கேட்காது. எவ்வளவு பயிற்சி 
கொடுத்தாலும் கீழ்ப்படிந்து நடக்கும் தன்மை இதற்கு வரவில்லை. இதை என்ன செய்வது.. .. .''
""இது என்ன கேள்வி? தன் போக்கில் செல்லும் குதிரையால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. இதை துரத்தி விடு.''
""அப்படியானால் இந்தக் குதிரையைப் போல் இருக்கும் மனிதக் குதிரைகளை.. .""
""என்ன சொல்கிறாய்?'' - மன்னன் உறுமினான்.
""உண்மையை தான் மன்னா சொல்கிறேன்... வரவிருக்கும் போரில் உங்களுக்கு நாட்டமில்லை என்று நான் அறிவேன். தளபதியின் பேச்சைக் கேட்டுத்தான் போருக்குச் சம்மதித்தீர்கள். போரின் விளைவுகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள் மன்னா. இரண்டு நாடுகளும் ஏறக்குறைய சம அளவு படை பலம் பெற்றவை. வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், இருபக்கத்திலும் பெருத்த உயிரிழப்பும் பொருளிழப்பும் ஏற்படும். இரண்டு நாடுகளுமே பலவீனமாகிவிடும். வடக்கே இருக்கும் பாமினி சுல்தான்கள் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாடுகளையுமே சூறையாடி விடுவார்கள்.''
""ஆனால், அந்த மன்னன் என் மேல் போர் தொடுத்துவிட்டால்''
""நிச்சயம் நடக்காது மன்னா''
""எப்படிச் சொல்கிறாய்?''
""அந்த மன்னனிடம் ரத்த வெறிபிடித்த தளபதி இல்லை. போரினால் பேரிழப்பு உண்டாகும் என்ற அறிவு இருக்கிறது.''
""எப்படிச் சொல்கிறாய்?''
""என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா. நான் அந்த நாட்டைச் சேர்ந்தவன். போரை நிறுத்தவே இப்படி செய்தேன்...''
அண்டை நாட்டு மன்னனின் மனம் இளகியது. போர் நிறுத்தப்பட்டது. 
இப்போது சொல்லுங்கள் - பிரம்மராயர், குதிரைக்காரன் இருவரில் யார் சிறந்தவர்? ராயரிடம் கல்வி இருந்தது. கவி புனையும் ஆற்றலும் இருந்தது. ஆனால், வந்த வேலையை மறந்து சொந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். குதிரைக்காரன் வந்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டான். அந்தக் குதிரைக்காரனைத் தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டான் மன்னன். 
அந்த மன்னன் தான் இறைவன். நம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வேலைக்காக இந்த உலகிற்கு அனுப்பியிருக்கிறான். சிலருக்கு நாட்டையாளும் வேலை, சிலருக்கு வீட்டையாளும் வேலை. 
சிலருக்கு நோய் தீர்க்கும் வேலை. சிலருக்குச் செடிகளுக்கு நீர் ஊற்றும் வேலை... நம்மில் பலர் வந்த வேலையை விட்டுவிட்டு சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வேலை செய்யாமல் மது, மாது, கேளிக்கைகளில் மகிழ்ச்சி கிடைக்குமென நம்பிக் கொண்டிருக்கிறோம். 
சரி.. நமக்கு இறைவன் இட்ட பணி எது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? எந்தப் பணியை நம் மனம் அதிதீவிரமாக நாடுகிறதோ, அதுவே இறைவன் நமக்காகக் கொடுத்த பணி. அந்தப் பணியைச் செய்யும் போது நம் உடல் நலம் நன்றாக இருக்கும். மன அழுத்தம் இருக்காது. இன்று பொருளாதாரத் தேவைக்காகக் கவிஞர்கள் பொறியாளர்களாக இருக்கிறார்கள், கலைஞர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள், மருத்துவர்கள் குமாஸ்தாக்களாக இருக்கிறார்கள். 
கல்லூரியில் படிக்கும் நம் மகன் வகுப்புகளை "கட்' அடித்துவிட்டு சினிமாவுக்குப் போனால் எப்படிக் கத்துகிறோம்?
"காலேஜுக்குப் போறது படிக்க; சினிமா பார்க்க இல்ல... போனமா.. படிச்சமா.. பாஸ் பண்ணமா... நல்ல வேலைல சேந்தோமான்னு இருக்க வேணாம்? ஏன் இப்படிப் பொறுப்பு இல்லாம ஊர் சுத்திக்கிட்டு இருக்க?''
இதே போல் இறைவன் நம் வாழ்க்கையின் முடிவில் நம்மைத் திட்டினால்...வேண்டாம் அந்த நிலைமை. இனியாவது நமக்கு பிடித்ததைச் செய்து, மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment