Monday, August 24, 2015

பிறருக்கு உதவுவோம்! - அட்சயதிரிதியை உறுதிமொழி

அட்சய திரிதியை நாளில் செய்யும் தானம் பன்மடங்கு புண்ணியம் தரும். இந்த நன்னாளில், காஞ்சிப் பெரியவரின் பக்தர் வாழ்வில் நடந்ததைக் கேளுங்கள்.

தினமும் பிடி அரிசி தானமளித்தல், முடிந்த சேவையைச் செய்தல், அனாதையாக இறந்தவரை அடக்கம் செய்வதற்கு உதவுதல் ஆகியவற்றைக் காஞ்சிப் பெரியவர் வலியுறுத்தி வந்தார். இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம் என்பார் அவர். பெரியவரின் இந்தக் கொள்கைகளை டில்லியில் வசித்த பெரியவர் பக்தர் ஒருவர் கடைபிடித்து வந்தார். 
ஒருநாள், கரோல் பாக் பகுதிக்குச் சென்றார். நடைபாதையில் வசித்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி இறந்ததை அறிந்தார். உடலை அடக்கம் செய்ய பணமின்றி, அவரது மனைவி, குழந்தைகள் செய்வதறியாமல் நின்றனர். அந்த பக்தர் அவர்களுக்கு உதவியதோடு, அவர்களுக்கு தேவையான கோதுமை மாவை தினமும் வழங்க ஏற்பாடு செய்தார். வீட்டு வேலை செய்து சம்பாதிக்கவும் வழிகாட்டினார். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி விட்டனர். 
ஒருநாள் தொழிலாளியின் மனைவி பக்தரைச் சந்தித்து, ""ஐயா! இவ்வளவு காலம் உதவி செய்தீர்கள். இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டோம். ஆதரவின்றி வாடும் ஏழைகளுக்கு நானும் உதவ விரும்புகிறேன்,'' என்றார்.
பக்தரும், ""காஞ்சிப்பெரியவர் அருளால் உங்கள் தர்மச்செயல்கள் நல்லபடியாக அமையட்டும்,'' என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த அம்மையாரும் தன்னால் முடிந்த உதவிகளை வாழ்நாள் முழுக்க செய்தார். பக்தர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவமும் உண்டு. 
ஒருநாள் காலை 3 மணிக்கு யாரோ ஒருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார். 
வந்தவர், தன் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும், அவர் உடலை சென்னைக்கு அனுப்ப உதவுமாறும் வேண்டினார். பக்தரும் உடலை விமானம் மூலமாக அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.
இதைக் கவனித்த டாக்சி டிரைவர் ஒருவர் வலிய உதவி செய்ய வந்தார். சவப்பெட்டி ஒன்றைத் தன் செலவில் தயார் செய்து, அதை விமானத்தில் ஏற்றும் வரை பக்தருக்கு உதவியாக உடனிருந்தார். டிரைவருக்கு பணம் கொடுக்க முன் வந்தார் பக்தர். அவர் மறுத்ததோடு, ""ஐயா! உங்களை எனக்குத் தெரியும். சாலை விபத்தில் சிக்கிய நான் மருத்துவமனையில் இருந்த போது, நீங்கள் நோயாளிகளுக்கு காஞ்சிப் பெரியவரின் பிரசாதம் அளித்ததோடு, விரைவில் உடல்நலம் பெறவும் பிரார்த்திக் கொண்டீர்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களைச் சந்திக்க எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் இன்று நிறைவேறியது,'' என்று சொல்லி கண் கலங்கினார். 
"பெரியவர் திருவருளால் நன்மை உண்டாகும்' என்று பக்தர் அவருக்கு நன்றி கூறினார்.
அட்சய திரிதியை என்றாலே தானத்திருநாள் தான். அவரவர் சக்திக்கேற்ப ஆதரவற்றோருக்கு உதவி செய்ய இந்நாளில் உறுதியெடுப்போம்.
காஞ்சிப்பெரியவரின் நல்லருள் பெறுவோம்.

No comments:

Post a Comment