Wednesday, August 26, 2015

வேலை செய்யாமல் வாழ முடியும் என்று கனவுகூடக் காணாதீர்கள்.

மாறனும், அவனது மனைவியும் ஒரு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தனர். பெரிய வயல்.. அது போக ஏராளமான மாடுகளும் ஆடுகளும் அந்தப் பண்ணையில் இருந்தன. வருடம் முழுவதும் அவர்களுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும். அதுவும் அறுவடைக் காலங்களில் இருட்டிய பிறகுதான் வீடு திரும்புவார்கள். 
நாட்கள் செல்லச் செல்ல மாறனுக்கு வேலை செய்யப் பிடிக்காமல் போனது. காலம் முழுவதும், எப்படி தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டேயிருக்க முடியும்? கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும், ஒரு வேலையும் செய்யாமல் காலை ஆட்டிக்கொண்டு வாழ வேண்டும் என்பது அவனது நீண்டநாள் கனவு. 
எப்போது கோவிலுக்குப் போனாலும் அது ஒன்று மட்டுமே அவனது பிரார்த்தனையாக இருந்தது. அது அறுவடைக்காலம். அந்த வருடம் மகசூல் அமோகமாக இருந்தபடியால் வேலை இன்னும் அதிகமாக இருந்தது. அதிலும், ஒரு நாள் மதியம் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் போனது. அன்று இரவு அவனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. அசந்து படுக்கையில் விழுந்தான். மறுநாள், சீக்கிரம் எழுந்து வேலை செய்யவேண்டுமே என்று வெறுப்பாக இருந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டிருந்தது அவனுக்கு...
அன்று ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது மாறன் இறந்து போனான். அவனது ஆவி ஒரு அரண்மனைக்குள் சென்றது. அந்த அரண்மனை தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது.. அழகாக, பிரமாண்டமாக இருந்தது.
அங்கே காவல்காரனைப் போல் இருந்த ஒருவன் மாறனின் ஆவியிடம், ""இது ஒரு மாய அரண்மணை. சாப்பிட, குடிக்க, பொழுதுபோக்க நீ எது கேட்டாலும் கிடைக்கும்.''
வாழ்க்கை முழுவதும் பழைய சோற்றையும் பச்சை மிளகாயையுமே உண்டு செத்துப் போயிருந்த மாறனின் நாக்கு அறுசுவை உணவைத் தேடியது. அடுத்த நொடி அழகான பெண்கள் அவனுக்குச் சுடுசோறு, சாம்பார், ரசம், தயிர், பாயாசம், வடை என்று தடபுடலாக விருந்து பரிமாறினார்கள். உண்ட களைப்பு அவனை அசத்தியது. படுக்க மென்மையான பஞ்சு மெத்தை கேட்டான். கிடைத்தது... கால்களை அமுக்கிவிடப் பெண்கள் வேண்டும் என்றான். வந்தார்கள். நன்றாகத் தூங்கினான்.
மீண்டும் நல்ல உணவு. மீண்டும் தூக்கம். நடுவே ஆடல் பாடல்... இதைவிடச் சிறந்த சொர்க்கம் எங்கே இருக்க முடியும் என்று நினைத்தான். 
ஒரு மாதம் இப்படியே கழிந்தது. வயிறு நிறைய உணவு... பின் தூக்கம்... என்ற சோம்பேறியான வாழ்க்கை அவனுக்கு அலுத்துவிட்டது. 
அரண்மனைக் காவல்காரரிடம் கெஞ்சாத குறையாகக் கேட்டது மாறனின் ஆவி:
""ஐயா ஏதாவது வேலை கொடுங்கள். தோட்டத்தைக் கொத்திவிடுகிறேன். இல்லை என்றால் இந்த அரண்மணையைக் கூட்டி மெழுகிச் சுத்தம் செய்கிறேன். பக்கத்தில் வயல் வெளி இருந்தால் சொல்லுங்கள். உழவு, நடவு, அறுவடை என்று எந்த வேலை இருந்தாலும் 
செய்கிறேன்...''
""உணவு, மது, மாது, கேளிக்கை என்று நீ எது கேட்டாலும் உடனே தருகிறேன். ஆனால் வேலை மட்டும் இங்கே கிடையாது.''
""என்ன சொல்கிறாய், இங்கு வேலையே செய்ய முடியாதா... இங்கே இருப்பதைவிட நான் நரகத்திற்கே போய்விடுகிறேன்.''
"":முட்டாள் மானிடா! நீ இருப்பதே நரகம் தானடா. பூவுலக வாழ்க்கையில் செய்யும் தொழிலை வெறுப்பவர்களுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்ப்ட்ட நரகம் இது. இங்கே எல்லா சுகமும் கிடைக்கும். ஆனால், எந்த வேலையும் செய்ய முடியாது.''
""ஐயையோ!''
""இப்போது கத்தி என்ன பயன்? இன்னும் ஆயிரம் வருஷம் நீ இங்கே வேலையில்லாமல் இருக்க வேண்டும். அதன்பிறகுதான் உனக்கு அடுத்த பிறவி. நன்றாகக் கிடந்து அனுபவி.''
இந்தக் கதையில் வரும் மாறனைப் போல்,"ஐயோ... வேலை செய்ய வேண்டியிருக்கிறதே' என்று அலுத்துக் கொள்ளாதவர்கள் மிகவும் குறைவு.. இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வேலை எதுவும் செய்ய முடியாத நிலை வரும்போது, நரகத்தில் இருப்பது போல் துடிக்கிறார்கள்.
நல்ல ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றவர்கள், செய்ய வேலை இல்லாமல் படும்பாடு சொல்லி மாளாது. எனக்குத் தெரிந்த ஒருவர் மதுரையில் ஒரு பெரிய நிறுவனத்தில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தார். சரியாகக் காலை 8 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவார். மாலை ஐந்து மணி வரை வேலை இருக்கும். ஓய்வு பெற்று ஒரு வாரம்தான் அலுவலத்திற்கு வராமல் இருந்தார். 
அதன்பின் சரியாகக் காலை எட்டு மணிக்கு மீண்டும் அலுவலகம் வரத் தொடங்கினார்.. 
மேலதிகாரிகள், "ஏன் வருகிறாய்...' என்று கேட்டார்கள்.
""வீட்டில் சும்மா உட்கார முடியவில்லை ஐயா! நீங்கள் எனக்குச் சம்பளமே தர வேண்டாம். தினம் தினம் இங்கே வந்துவிடுகிறேன். ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள். வேலை செய்யாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்கிறது,'' என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்.
அவர்களும் இரக்கப்பட்டு ஏதோ வேலையும், கொஞ்சம் சம்பளமும் கொடுத்தார்கள். 75 வயதில் அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன் வரை விடாமல் வேலை பார்த்தார் அந்த விந்தை மனிதர். 
எனக்குத் தெரிந்த இன்னொருவர் டில்லியில் ஒரு பெரிய நிறுவனத்தின் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அழுத்தம் நிறைந்த பரபரப்பான வேலை... அடிக்கடி வெளியூர்ப் பிரயாணம்... ஞாயிறு கூட ஓய்வு எடுத்துக் கொள்ள முடியாது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் கொடைக்கானலில் ஒரு அமைதியான இடத்தில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு போய்விட வேண்டும் என்று திட்டம் போட்டார். 
ஒரு சுபயோக சுபதினத்தில் ஓய்வு பெற்றார். கொடைக்கானலில் குறிஞ்சியாண்டவர் கோவில் அருகே மிகவும் அமைதியான ஒரு இடத்தில் வீடு பார்த்தார். என்னையும் கூட்டிப்போய்க் காண்பித்தார். 
""இந்த வீட்டை இப்போது வாங்காதீர்கள். ஒரு வருடம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வருடம் இங்கே இருந்து பாருங்கள். பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளலாம்.'' என்று அறிவுரை சொன்னேன்...ஏற்றுக் கொண்டார்.
அமைதியான கொடைக்கானல் வாழ்க்கை ஒரே மாதத்தில் அவருக்குச் சலித்துவிட்டது ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை பார்த்துப் பழகியவரால் எப்படி நாளெல்லாம் இயற்கைக் காட்சியைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? இரண்டே மாதத்தில் வீட்டைக் காலி செய்து விட்டு, மீண்டும் டில்லிக்கே சென்றுவிட்டார். இப்போது அரை டஜன் கம்பெனிகளுக்கு ஆலோசகராக இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொன்னார்.
மனிதன் உயிர்வாழ உணவு, உடை உறைவிடம் போக இன்னொரு அத்தியாவசியத் தேவையும் இருக்கிறது. அதுதான் வேலை. 
முழுமையான ஆன்மிகப் பக்குவம் பெற்று நாம் ஒரு புனிதராக வளரும் வரை, ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே இருந்தால்தான் நாம் ஆரோக்கியமான மனதுடன் வாழ முடியும். 
"சோம்பேறியின் மனம் சாத்தானின் பட்டறை' என்ற பழமொழியில் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவம் அடங்கியிருக்கிறது.
வேலையை வெறுக்காதீர்கள். இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் வேறு வேலை செய்யுங்கள். டில்லி பிடிக்கவில்லையென்றால் சென்னையில் வேலை செய்யுங்கள். ஆனால், வேலை செய்யாமல் வாழ முடியும் என்று கனவுகூடக் காணாதீர்கள். 58 வயதிலோ 
60 வயதிலோ உங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம். ஆனால், சாகும் வரை எதையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

No comments:

Post a Comment