Wednesday, August 26, 2015

அவர் மாபெரும் ஞானி. சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரிடம் பாடம் கற்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைச் சமாளிக்க ஒரு எளிய உத்தியைக் கையாண்டார் அவர். 
தன்னிடம் வாழ்வியல் தத்துவம் கற்க வேண்டுமென்றால் பல ஆயிரங்களைப் பயிற்சிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை போட்டார். ஏற்றுக்கொண்டார்கள். 
ஊருக்கு வெளியே ஒரு பெரிய கட்டடத்தில் ஞானியும், சீடர்களும் தங்கியிருந்தார்கள். 
சீடர்களே சமையல் செய்வது, இடத்தைச் சுத்தம் செய்வது, ஞானிக்குப் பணிவிடை செய்வது என்று அந்தக்கால குருகுல பாணியில் எல்லாம் இனிதே நடந்தன. 
பயிற்சிக்குச் சேர்ந்தவர்களில் ஒரு வயதான செல்வந்தரும் இருந்தார். அவர் மகா முசுடு. 
எந்த வேலையும் செய்யமாட்டார். வகுப்பில் அவ்வளவாகக் கவனம் செலுத்த மாட்டார். 
யாராவது அவரைப் பற்றிக் குறை கூறினால், பயங்கரமாகச் சண்டை போடுவார். 
சில சமயம் ஞானியுடன் கூட சண்டை போட்டிருக்கிறார். "இன்று பாத்திரம் கழுவுவது உங்கள் முறை' என்று யாராவது அவரிடம் மென்மையாக நினைவூட்டுவார்கள். மனிதன் பொங்கி எழுந்துவிடுவார்.
""என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய்? நான் என்ன உங்களை மாதிரி அல்லக்கையா? பாரீஸ் நகரத்தில் எனக்குப் பல கோடி சொத்து இருக்கிறது. உங்கள் எல்லோருடைய ஆண்டு வருமானத்தைக் கூட்டினால், என் ஒருவனின் ஆண்டு வருமானத்தில் நூறில் ஒரு பகுதி கூட இருக்காது. அப்படிப்பட்ட என்னை ஒரு பிச்சைக்காரனைப் போல் பாத்திரம் கழுவச் சொல்கிறீர்களா? என்ன திண்ணக்கம்? '' நினைவூட்டியவர் பயந்து நடுங்கி விலகிப் போனார். 
நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. செல்வந்தர் மற்ற சீடர்களுடன் மூர்க்கத்தனமாகச் சண்டை போட்டார். உணவின் தரம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் சமையல் செய்தவர்களிடம் சண்டைக்குப் போய்விடுவார். 
மாணவர்கள் அவரை விட்டு மனதளவில் விலகிப் போகத் தொடங்கினார்கள். செல்வந்தர் ஏதாவது கேட்டால் உடனே அவருக்குத் தந்துவிடுவார்கள். பெரும் பொருள் கொடுத்து வாழ்வியல் கற்றுக் கொள்ள வந்திருக்கும் நாம் ஏன் ஒரு வயதானவரிடம் வம்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள் அந்தப் புத்திசாலி மாணவர்கள். 
ஒரு கட்டத்தில் செல்வந்தருக்கு அங்கே இருப்பது சலித்துவிட்டது.. திடீரென்று
ஒரு நாள் அவர் அந்த இடத்தைவிட்டு வெளியேறி பாரீஸ் சென்றுவிட்டார்.
மற்ற மாணவர்களுக்கு பயிற்சி முடியும் நேரம். இன்னும் நான்கு நாட்கள்தான் வகுப்பு பாக்கியிருந்தது. அவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஞானி, செல்வந்தரைத் தேடிப் பாரீஸ் சென்றார். சிரமப்பட்டு அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார். பின் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். 
""உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். தயவு செய்து என் வகுப்புக்குத் திரும்பி 
வந்துவிடுங்கள்.''
""எனக்குப் பிடிக்கவில்லை.''
""அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நான் உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து 
தருகிறேன்.''
""அப்படியே வருவதால்தான் என்ன பயன்? எப்படியும் இன்னும் சில நாட்களில் 
வகுப்புக்கள் முடிந்துவிடுமே.''
""அதனால் என்ன? அடுத்து இதே போல் வகுப்புக்களைத் தொடங்கப் போகிறேன்..''
""ஆஹா! மீண்டும் ஒருமுறை என்னிடம் பணம் கறக்கலாம் என்று திட்டமா?''
""அதெல்லாம் இல்லை.''
""பின்னே ஏன் இப்படி என்னை வருந்தி வருந்தி அழைக்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவு அழைத்தாலும் நான் வருவதாயில்லை.''
""என்னிடம் மாணவனாகச் சேர்வதற்கு நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நீங்கள் 
என்னிடம் ஏற்கனவே தந்த பயிற்சிக் கட்டணத்தைப் போல் இரண்டு மடங்கு தருகிறேன். தயவு செய்து வாருங்கள்.''
செல்வந்தருக்குப் பணத்தாசை. ஒத்துக்கொண்டு ஞானியுடன் கிளம்பி வந்துவிட்டார். 
நடந்தது தெரிந்ததும் மற்ற சீடர்கள் கொதித்தார்கள். 
எங்களிடம் பயிற்சிக் கட்டணமாகப் பல ஆயிரங்களைக் கறந்துவிட்டு இந்த ஒன்றுக்கும் உதவாத சிடுமூஞ்சிக் கிழவருக்குக் காசு கொடுத்து அழைத்து வந்திருக்கிறீர்களே! நியாயமா? என்று கேட்டார்கள். 
செல்வந்தர் இல்லாத சமயத்தில் அவர்களிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார் ஞானி.
""இவர் முசுடு. மரியாதை தெரியாதவர். கடமை உணர்வு இல்லாதவர். பாடங்களை 
ஊன்றிக் கவனிக்க மாட்டார். எல்லாம் உண்மை.. ஆனால் அவரைப் பார்த்ததும் நீங்கள் அனைவரும் "இவரைப் போல் நாம் இருக்கக் கூடாது' என்று நினைத்தீர்கள். உங்களில் யாராவது சற்றுக் குரலை உயர்த்திப் பேசினால் "ஏன் அந்தப் பணக்காரக் கிழவனைப் போல் எரிந்து விழுகிறாய்?' என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டு உங்களைத் திருத்திக் கொண்டீர்கள். ஒரு கட்டத்தில் "அவர் அப்படித்தான். அதனால் நாம் ஏன் உணர்ச்சிவசப்பட வேண்டும்' என்று அவரோடு சேர்ந்து வாழவும் பழகிக் கொண்டீர்கள்.
இவரைப் பார்க்கும் வரை நீங்கள் பாலாக இருந்தீர்கள். இவர் சிறிது மோராக வந்து 
உங்களிடம் சேர்ந்தார். நீங்கள் பாலிலிருந்து தயிர், வெண்ணெய், நெய் என்று படிப்படியாக ஆன்மிக வளர்ச்சியடைந்தீர்கள்.
உங்களுக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பு அடுத்து என்னிடம் பயிற்சி பெறும் 
மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்பதற்காகத்தான் இவரைக் காசு கொடுத்து அழைத்து வந்தேன். புரிகிறதா?''
இந்த நிகழ்வைக் கொஞ்சம் உன்னிப்பாய்க் கவனியுங்கள். இதில் பொதிந்திருக்கும் 
வாழ்வியல் பாடம் நன்றாக விளங்கும். 
ஒரு நோய் வராமல் இருக்க எப்படித் தடுப்பூசி போடுகிறார்கள்? தடுப்பூசியில் மறைந்திருக்கும் தத்துவம் என்ன?
பெரியம்மை நோய்க்குத் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அந்த நோயின் 
பலவீனமான கிருமிகளை நம் உடலில் ஊசி மூலம் செலுத்திவிடுவார்கள். நம்மிடம் 
இயல்பாகவே அமைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடும். உள்ளே செலுத்தப்பட்டது பலவீனமான கிருமிவகை என்பதால் அதனை நம் உடல் எளிதாக வெற்றி கொண்டுவிடும். இப்போது நம் உடலுக்குப் பெரிய அம்மை நோய்கிருமியின் அமைப்பு அத்துப்படியாகிவிட்டது. இதை நம் உடல், நாம் சாகும் வரை மறப்பதில்லை. 
பிற்காலத்தில் உண்மையிலேயே பெரியம்மை நோய் நம்மைத் தாக்க முற்பட்டால், நம் உடல் அதனைச் சுலபமாக வெற்றி கொண்டுவிடும். காலகாலத்திற்கும் அந்த நோய் நம்மைத் தாக்காது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் அந்த சிடுமூஞ்சிச் செல்வந்தர் தீமை என்னும் நோயின் ஒரு பலவீனமான கிருமி. அவரை முதலில் எதிர்கொண்டதால், மாணவர்களுக்குத் தீமையை எதிர்க்கும் சக்தி வந்துவிட்டது. பின்னாளில் பெரிய அளவில் தீமை செய்வோரையும் அவர்களால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். அந்தக் கிழட்டுச் செல்வந்தர் ஒரு வகையில் தடுப்பூசி. 
மற்ற மாணவர்கள் செல்வந்தரைப் புறக்கணிக்க ஆரம்பித்ததும் அவர் சலித்துப் போய் விலகிக்கொண்டார் அல்லவா? அது போல் பொருட்படுத்தப்படாத தீமையும் விலகிச் சென்றுவிடும். அந்த முறையில் கொஞ்சம் தீமையும் வேண்டும். கொஞ்சம் மோர் இருந்தால்தானே பாலைத் தயிராக்க முடியும்? பால் தயிரானால்தானே வெண்ணெய், நெய் என்று அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைய முடியும்

No comments:

Post a Comment