Monday, January 21, 2013

புத்தஅவதாரம்

கிருஷ்ணர் வைகுண்டம் சென்ற பின்னர் கலியுகம் உண்டானது. இந்து மதம் தன்னுடைய புனித தன்மையை இழந்தது. வேதங்கள் அனைத்தும் கேள்வி குறியானது. தவறான முறையில் கடவுள் பூஜிக்கப்பட்டார்.
இதனால் மகாவிஷ்ணு மீண்டும் அவதாரம் எடுத்து மக்களை சரியான முறையில் வழி நடத்த தீர்மானித்தார்.
கபிலவஸ்து நகரை ஆட்சி புரிந்து வந்த சுத்தோதனர் என்ற மன்னரின் மனைவி மாயாதேவி. இவள் ஒருநாள் உறங்கி கொண்டு இருந்த போது ஒரு வெள்ளை யானை ஒன்று ஆறு தந்தங்களுடன் பிளிறிக் கொண்டு வருவது போல கனவு கண்டாள்.
சில மாதங்களுக்கு பிறகு மாயாதேவி கருவுற்றிருந்த போது தனது பெற்றாரினை காண 'லும்பினி பூங்கா' வழியே சென்றாள். அப்போது சற்றுநேரம் ஓய்வு எடுக்க அரச மரத்தடியில் அமர்ந்தாள்.
தீடீரென பிரசவ வலி எடுக்க, முழு பவுர்ணமி நிலவில் அங்கேயே தன் மகனை ஈன்றாள்.
இளவரசரை பார்க்க அரண்மனை வந்த அஷ்சிகா முனிவர் குழந்தையை பார்த்து 'இவன் ஒரு பெரும் சக்கிரவர்த்தியாக வருவான். அவ்வாறு இல்லையேல் முற்றும் துறந்த முனிவர் ஆவான்.' என்று கூறினார்.
குழந்தைக்கு 'சித்தார்த்தர்' என பெயரிட்டது. மகன் முனிவர் ஆவதனை விரும்பாத கபிலவஸ்து மன்னர், தன் மகன் வறுமை, நோய், முதிர்வு, இறப்பு, இவற்றைப் பற்றி எல்லாம் தெரியாமல் வளர வேண்டும் என நினைத்தார்.
அரண்மனை காவலரிடம் சித்தார்த்தர் அரண்மனையை விட்டு வெளியே போகாதவாறு பார்த்து கொள்ளுமாறு சொல்லி இருந்தார்.
வளர்ந்து குடும்ப வாழ்வில் ஈடுபடுகையில் முனிவர் ஆக விரும்பார் என கருதி இருந்தார்.
அதன்படியே சித்தார்த்தர் வறுமை, நோய், முதிர்வு, இறப்பு இவை எல்லாம் தெரியாமல் வளர்ந்தார். பருவ வயதினை அடைந்த பின் சாக்கிய மன்னர் மகள் யசோதாவை மணந்து ஒரு மகனை பெற்று கொண்டார்.
ஒரு நாள் தனது தந்தையிடம் சென்ற சித்தார்த்தர், தந்தையே! நான் வெளி உலகத்தினை பார்க்க விரும்புகிறேன் என்று கூறினார்.
தந்தையும் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.
சில நாட்களில் சன்னா என்பவர் ரதத்தினை ஓட்ட சித்தார்த்தர் அரண்மணையில் இருந்து வெளியேறி நகரின் எல்லைக்கு சென்றார்.
அரண்மனை திரும்ப முயன்ற சன்னாவிடம், நகருக்கு வெளியே ரதத்தினை ஒட்டுமாறு கூறினார் சித்தார்த்தர். சற்று தொலைவில் சென்றபின் ஒரு முதியவர் கோலுடன் கூனி நடப்பதனை பார்த்து அதற்கான காரணத்தினை சன்னாவிடம் கேட்டார்.
அதற்கு சன்னா, 'இளவரசே, அவருக்கு வயதாகிவிட்டது. இது போலவே எல்லாருக்கும் ஏற்படும். இப்படி தான் உங்களுக்கும் எனக்கும் ஏற்படும்.' என விளக்கமளித்தார்.
அரண்மனை திரும்பிய சித்தார்த்தர் மனது இது குறித்தே சிந்தித்தது. மறுநாளும் நகரை சுற்றி பார்க்க புறப்பட்ட அவர்கள் இம்முறை வலியினால் வருந்தும் நோயுற்ற மனிதர் ஒருவரை கண்டார்கள்.
அவர் ஏன் வலியினால் துடிக்கிறார் என சித்தார்த்தர் கேட்டார். அதற்கு சன்னா, 'இளவரசே, அவர் ஒரு வலி மிகுந்த நோயினால் வருந்துகிறார்', என்று கூறினார். 'நோய் விசித்திரமானதா?' என்று சித்தார்த்தர் கேட்டார்.
'இல்லை இளவரசே, நீங்களும், நானும் கூட நோய்வாய்ப் படலாம்' என்று சன்னா கூறினார்.
தான் வளரும் பருவத்தில் அறிந்து கொள்ள முடியாததை அறிந்து கொள்ள ஆவல் கொண்டு மேலும், மேலும் பயணங்களை மேற்கொண்டார். ஒருமுறை சிலர் ஒரு மனிதனை தூக்கி செல்வதனை அவதானித்தார்.
'ஏன் அந்த மனிதரை தூக்கி செல்கின்றனர்? அவருக்கு முதிர்வா?, நோயா?' என்று கேட்டார் சித்தார்த்தர்.
'இல்லை இளவரசே, அது மிகவும் துயரமானது. அந்த மனிதர் இறந்து விட்டார்'. அதனால் அவரை தூக்கி செல்கின்றனர்' என்று கூறினார். அதற்கு சித்தார்த்தர் 'நாம் கூட இறக்க வேண்டியவர்கள் தானா?' என்று கேட்டார்.
'ஆம் இளவரசே! நாம் எல்லோரும் இறக்க தான் வேண்டும்' என்று சன்னா கூறினார்.
சுகமான அரண்மனை வாழ்க்கை நடாத்தி வந்த சித்தார்த்தர் தாம் கண்ட காட்சிகளை பற்றியே சிந்திக்கலானார். எதிலும் நாட்டமின்றி, மகிழ்வின்றி துன்பப்பட்டார்.
மீண்டும் ஒரு பயணத்தின் போது அமைதி தவழும் ஒரு முதியவரை பார்த்தார், அவர் யார் என்ன சன்னாவிடம் கேட்டார். 'அவர் ஒரு முற்றும் துறந்த துறவி' என சன்னா கூறினார்.
அன்று இரவே ஒரு முடிவு எடுத்தார் சித்தார்த்தர். 'என்னுடைய ஆடம்பர வாழ்க்கையை துறந்து வாழ்வின் உண்மையான நோக்கத்தினை கண்டு கொள்வேன்' என்று தீர்மானம் செய்தார்.
அதன்படியே அரண்மனை வாழ்க்கையை துறந்து பல ஆண்டுகள் பல போராட்டங்களுக்கு பின்னர் போதி மரத்தின் அடியில் தியானத்தில் இருக்கையிலே ஞானோதயம் பெற்றார்.

சித்தார்த்தர், புத்தர் ஆக மெய்யறிவு பெற்றவராக மாறினார். தான் அறிந்து கொண்டவற்றை வாரணாசியில் சராநாத் எனும் இடத்தில் மான்கள் நிறைந்த பூங்காவில் தனது முதல் உபதேசத்தினை ஆரம்பித்தார்.
'ஆசையே துன்பத்திற்க்கு காரணம்'. ஆசையை ஒழித்தால் துன்பமின்றி வாழலாம். எனவே ஆசையை ஒழிக்க வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment