Monday, January 21, 2013

தீர்க்க சுமங்கலியாக இரு!'' என வாழ்த்திய பெரியவர்

நடமாடும் தெய்வம்' என பக்தர்களால் போற்றப்பட்ட காஞ்சி மகாபெரியவர், அன்றைய தினம் நித்யபூஜைகளை முடித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பலரும் அவரவர் குறைகளைக்கூறி, அதற்குரிய தீர்வை அருளுமாறு வேண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருபெண் மட்டும் அழுது கொண்டிருந்தாள். அவளது நெற்றியில் திலகமில்லை. தலையில் பூ வைக்கவில்லை. தோற்றமோ இளமையாயிருந்தது.
அவளைத் தன்முன் அழைத்து வரும்படி, சீடர்களுக்கு உத்தரவிட்டார்.
கனிவுடன்,""என்னம்மா உன் பிரச்னை! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?'' என்றார்.
""ஐயா! என் கணவர் வெளிமாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. அவரது உடலை இங்கு கொண்டு வருவது, கொண்டு வந்தாலும்
இறுதிக்காரியங்களை எப்படி செய்வது என தெரியவில்லை,'' என்று கதறினாள்.
முக்காலமும் உணர்ந்த முனிவரான மகாபெரியவர், இதற்கு பதிலேதும் சொல்லவில்லை. அவளை நோக்கி நான்கு விரல்களை மட்டும் நீட்டினார். அவளை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி சீடர்களிடம் கூறினார். அந்தப்பெண்ணுக்கு ஏதும் புரியவில்லை.
தன்னுடன் வந்த சீடர்களிடம், ""பெரியவர் என்னிடம் நான்கு விரல்களைக் காட்டினாரே! அதன் பொருள் புரியவில்லையே!''
என்று கேட்டாள்.
""அம்மா! இன்னும் நான்கு நாட்கள் நீங்கள் எந்தக் "காரியமும்' செய்ய வேண்டாம். பொறுமையாக இருங்கள்,'' என்றனர் அவர்கள்.
அவளும் வீடு திரும்பி விட்டாள். என்ன ஆச்சரியம்! மூன்றாம் நாள் மாலையில் அவளது கணவர் வீடு வந்து சேர்ந்தார். அவளோ, ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விட்டாள். அவர் கையாலேயே பொட்டு வைக்கச்சொல்லி, பூச்சூடினாள். மறுநாள் காலையில், ஆனந்தக்கண்ணீர் பொங்க, கணவருடன் மகாபெரியவர் முன் வந்து நின்றாள்.
""தீர்க்க சுமங்கலியாக இரு!'' என வாழ்த்திய பெரியவர், அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
தன் ஞானத்தால், ஒரு சுமங்கலியின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெரியவரின் கருணையை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அன்று மட்டுமல்ல! இன்றும் அவரை நம்பி வணங்குவோரின் குறைகளைத் தீர்த்து கருணையுடன் அருள்கிறார்.

No comments:

Post a Comment