Monday, January 21, 2013

வராக அவதாரம்

ஒரு சமயம், மகரிஷிகள் ( முனிவர்கள் ) நால்வர் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் செல்லும்போது, ஏழாவது நுழைவாயிலில் காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் அந்த மகரிஷிகளைத் தடுத்தார்கள்.
எந்த நேரத்திலும் பகவானைத் தரிசிக்கும் அருளைப் பெற்ற அந்த ரிஷிகள் கோபமடைந்து, " நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்" என்று சாபமிட்டார்கள்.
ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி, " உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும் " என்று கேட்டனர்.
மகாவிஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், " இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானதுதான்.
இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள் " என்று கூறினார்.
அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.
அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமிருந்து, ' எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது ' என்று வரம் பெற்று, மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான்.
இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களைப் பிடித்துக் கொன்று வந்தான்.
அவனுடைய கொடூரமான உருவத்தைப் பார்த்துத் தேவர்கள் அனைவரும் அவன் கண்ணில் படாமல் ஒளிந்து வாழ்ந்தார்கள்.
அவன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான். அதற்கு வருண பகவான், " அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் ( பன்றி உருவம்) எடுத்து வருவார். அவரிடம் போராடு " என்று சொன்னார்.
அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான்.
பூலோகம் நீர்ப் பிரளயத்தில் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ( பன்றி ) ஒன்று உருவாகிச் சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.
பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது.
இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து, அசுர லோகத்தில் சுகமாக இருந்தான்.
அப்போது நாரதர் அங்கே தோன்றி, " இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக்கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார் " என்று சொன்னார். உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.
வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது.
இரண்யாட்சன் அடித்த அடியால், மகாவிஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.
தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன கதாயுதத்தால் தாக்க, மகாவிஷ்ணு தம் இடக்காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.
இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப்பொடியானது. இரண்யாட்சன் ஆவேசத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பின்மீது ஓங்கிக் குத்தினான்.
பின், அவன் மாயமாக மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.
சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகாவிஷ்ணு. அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர்.
இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின்மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின்மீது விழுந்து மடிந்தான். தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்

No comments:

Post a Comment