Monday, January 21, 2013

நரசிம்ம அவதாரம்

தன் தம்பி இரண்யாட்சன் வராகமூர்த்தியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த இரண்யகசிபு கொதித்தெழுந்தான்.
தேவர்களுக்கு மகாவிஷ்ணு துணையாக இருப்பதால், அவரைக் கொன்று விட்டால், தேவர்களை இலகுவாக வெல்ல முடியும் என்று தீர்மானித்தான்.
தேவர்களுக்கும், விஷ்ணுவுக்கும் பலத்தை அளிப்பது பூலோகத்தில் நடத்தப்படும் யாகங்கள்தான் என்பதை அறிந்த இரண்யகசிபு, எங்கெங்கு யாகங்கள் நடத்தப்படுகின்றனவோ, அந்த இடங்களை எல்லாம் நாசமாக்கினான். முனிவர்களை அடித்து வதைத்தான்.
இதனால், தேவர்கள் அனைவரும் அவதியுற்று, பூலோகத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.
இரண்யகசிபு பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார்.
இரண்யன், ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று லோகங்களையும் ஆட்சி செய்து வந்தான்.
தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தைத் தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகு விரைவில் இரண்யனைக் கொன்று, அவர்களைக் காப்பாற்றுவதாக அருளினார்.
தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான்.
இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.
அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான்.
அதைப் பொறுக்க முடியாத இரண்யன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான்; தீ மூட்டி அதனுள் தள்ளி விட்டான்; ஆழமான கடலுக்குள் தள்ளினான்; நச்சுப் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்தான். இப்படி எத்தனையோ கொடுமைகளைச் செய்தான்.
ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார்.
"தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்" என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், " அந்த ஹரி எங்கே இருக்கிறான் ? " என்று கேட்டான்.
அதற்க்கு பிரகலாதன், " எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் " என்று ஒரு தூணைக் காட்டினான்.
இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும்கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.
அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரண்யன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார்.
பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது.
மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவாதி தேவர்கள் எல்லாரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்த பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீ நரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார்.

No comments:

Post a Comment