Monday, January 21, 2013

செய்ததை அனுபவித்தாக வேண்டும்

அசோகவனத்தில் இருந்த சீதாதேவியை கொடிய அரக்கியர் துன்புறுத்தினார்கள். அப்போது ஆஞ்சநேயர் வந்தார்.
""ஸ்ரீராமஜெயம், ராவணன் கொல்லப்பட்டான்,'' என்றார். சீதாதேவி மகிழ்ந்தாள்.
""மகனே! இந்த நல்ல செய்தியை அறிவித்த உனக்கு வரம் தருகிறேன், கேள்,''என்றாள்.
""தாயே! உங்களைத் துன்பம் செய்த இந்த அரக்கியரை தீயில் இட்டுக் கொளுத்த வேண்டும், அனுமதியுங்கள்,'' என்றார்.
சீதாதேவி சிரித்தாள்.
""அப்பா ஆஞ்சநேயா! நீ சொல்வது விந்தையாக இருக்கிறது. என் கணவரிடம் நான் மாயமானை பொன்மான் எனக்கருதி விரும்பிக்கேட்டேன். அவர் திரும்பி வருவதற்குள் அவசரப்பட்டு, என் கொழுந்தன் லட்சுமணனை மனம் புண்படும்படி பேசினேன். இதெல்லாம் நான் செய்த வினைகள். அந்த வினைப்பயனையே இங்கு அனுபவித்தேன். செய்வினை என்றால் என்ன தெரியுமா? அவரவர் அவரவருக்கே செய்து கொள்ளும் வினை தான். என் வீட்டில், என் சோற்றைத் தின்ற கூனி எங்களுக்கு துரோகம் செய்தாள். அதையே நான் பொறுத்துக் கொண்டேன். இந்த அரக்கிகள் ராவணனின் வேலைக்காரிகள். எஜமான் இட்ட பணியைக் கருத்தாகச் செய்தவர்கள். அவர்கள் மேல் கோபிக்க என்ன இருக்கிறது? எனவே, கூனியை விட இவர்கள் ஒன்றும் கொடியவர்கள் அல்ல. நடந்ததை மறந்து விடுவதே என்றைக்குமே நல்லது,'' என்றாள்.
துன்பத்தை அனுபவிப்பவர்கள் கடவுளையோ மற்றவர்களையோ நோகக்கூடாது. நம் வினையைத் தான் நோக வேண்டும். முன்பு என்னவெல்லாம் செய்தோம் என்று பட்டியலிட்டு பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவரை சுயசோதனை செய்துகொள்ள வேண்டும். செய்த பாவம் தொலைய இறைவனை வணங்க வேண்டும். இப்படி செய்தாலே, துன்பங்கள் காணாமல் போய்விடும்

No comments:

Post a Comment