Friday, January 18, 2013

ராமேசுவரம் கோவிலின் மூன்றாம் பிரகாரம்.

ராமேசுவரம் கோவிலில் எத்தனையோ அதிசயங்களும் அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. அதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு வரலாறு உளள்து. அவற்றையெல்லாம் நுட்பமாக அணுகிப் பார்த்தால்தான் ராமேசுவரம் கோவிலின் பழமை புனிதமும், ராமநாதரின் அருள் மகிமையும் நமக்கு புரியும்.

இந்த தலத்தில் ஆகம, ஐதீக விதிகளின்படி வழிபாடு செய்தால் நிச்சயம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்துக்கான ஒரு மாறுதல் உருவாகும். அடுத்த தடவை நீங்கள் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லும்போது ஒவ்வொரு பகுதியிலும் நிதானமாக நின்று பார்த்து வாருங்கள். அப்போதுதான் ராமநாதர் ஆலயத்தின் சிறப்பை உணர்வீர்கள்.


ராமேசுவரம் கோவிலில் உள்ள சிறப்புகளில் ஒரு சிறப்பு உலக அளவில் பேசப்படுகிறது. அது ராமேசுவரம் கோவிலின் மூன்றாம் பிரகாரம். மிகவும் பிரமாண்டமான பிரகாரம் இது. இந்தியாவில் வேறு எந்த ஒரு ஆலயத்திலும் அத்தகைய பிரகாரம் இல்லை என்பது குறிப்பித்தக்கது.


இந்த பிகாரத்தின் தொடக்கத்தில் இருந்து பார்த்தால் பிகாரத்தின் இருபுறமும் மிக, மிக நேர்த்தியாக வடிக்கப்பட்ட கல் தூண்கள் அழகுற அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். ஒரு தூண் இம்மி அளவு பிசகாமல் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை பார்க்கும்போது நாம் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுவோம்.


நம் மூததையர்களின் கலைச் சிறப்பையும், கை திறனையயும் நினைத்து நம்மை அறியாமலே நமக்குள் சர்வம் வந்து ஒட்டிக்கொள்ளும். ஒரு நாள்தான் லீவு போட்டுவிட்டு வந்தேன் என்று அரக்க, பரக்க சாமி கும்பிட்டு, விட்டு இந்த மூன்றாம் பிரகாரத்தை பார்க்காமல் வந்து விடாதீர்கள். அவசியம் பார்த்து விட்டு வாருங்கள்.


பக்தர்கள் வசதிக்காக மூன்றாம் பிரகாரம் எப்போதும் திறந்தே இருக்கும். மதியம் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டாலும் கூட முன்றாம் பிரகாரம் திறந்தே இருக்கும். முன்பு மூன்றாம் பிரகாரம் தூண்கள் இயற்கை அம்சத்துடன் இருந்தன. தற்போது அந்த பிரகார தூண்களுக்கு பல வர்ணம் பூசியுள்ளனர்.


இது மூன்றாம் பிரகாரத்தின் அழகை இரட்டிப்பாக்கி உள்ளது. ராமேஸ்வரம்தான் பிரகார மாளிகையில் தலைமையானது. வெளிநாட்டுக்கலைப் பேராசிரியர்களும், நம் நாட்டினரும் போற்றுவது இத்திருக்கோவிலின் பிரகாரங்களையே இது திருச்சுற்றுமாளிகை எனவும் அழைக்கப்படுகிறது.


இந்தியாவிலேயே திருச்சுற்று அமைப்புக்குப் பெயர் பெற்றது ராமேஷ்வரமேயாகும். அதை இம்மூன்றாம் சுற்றில்தான் கண்டு மகிழமுடியும். பல சந்நிதிகளும் போக்குவரவு மிகுதியுமான கிழக்குப்பகுதியை விட்டுத்தெற்கே இதே சுற்றைக் காணும்போது அதன் உண்மை புலப்படும்.


ஒரு தூண்கூட முன்பின் நகராமல் ஆனால் எல்லாத்தூண்களும் தெரியுமாறுள்ள தென் திருச்சுற்றிற்கு மறக்காமல் சென்று வாருங்கள். இந்த மூன்றாம் சுற்று முத்துராமலிங்கச் சேதுபதி (கி.பி. 1740-1770) கட்டியதாகும். இந்தச்சுற்றுச்சுவர் உட்பட வெளியிலிருந்து கிழக்கு மேற்காக ஒவ்வொன்றும் 690 அடி நீளமுடையன உட்புறமாக இவை 649 அடி நீளமுடையவை.


வடக்குத்தெற்காக வெளிப்புறத்தில் ஒவ்வொன்றும் 435 அடி நீளமுடையவை. இவையே உட்புறமாக ஒவ்வொன்றும் 395 அடி நீளமுடையவை. இத்திருச்சுற்று முழுதும் 4000 அடி சுற்றளவுடையது. ஐந்தடி உயரமான திண்ணைகள் இருபுறமும் அமைக்கப்பெற்று 22 அடி 7.5 அங்குல உயரமான தூண்கள் உள்ளன.


அத்தூண்கள் மென்மையான கருங்கல்லினால் ஆனவை பிரகாரம் முழுவதும் மொத்தம் 1212 தூண்கள் உள்ளன. கடல்காற்று இக்கல் தூண்களை அரிக்கத் தொடங்கியதால் சிமெண்ட் பூச்சு செய்து ஸ்நோசெம் என்னும் வண்ணப் பூச்சும் பூசப்பட்டு இப்போது காப்பாற்றப்பட்டுள்ளது. இதனால் பழைய தூண் அழகு வேலைப்பாடுகள் உள்மறைந்துள்ளன.


எனினும் இரண்டு பழைய தூண்களைப் பழைய முறையிலேயே வைத்துள்ளனர். இந்த பிரகாரம்,தரையிலிருந்து 30 அடி உயரம் உடையவை பிராங்க்ளின் எட்கர்டன் எனும் அமெரிக்கர் கோவில் வருகையில் எழுதியதைக் கவனியுங்கள் "மேல் தளத்திலிருந்து கோவிலின் உட்புறம் முழுதும் கோபுரம் வரை காண முடிகிறது.


இதுவரை நான் பார்த்த எந்தக் கோவிலிலும் காண இயலாத காட்சி இது'' என்று வியக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இச்சுற்றைக் கண்டவர்களிடம் இது பற்றிக்கேட்டால் கதைகள் பல கூறுவர். ராமமேஸ்வரத்திற்கு வடகிழக்கே இந்தத் தீவில் சுடுகாட்டான்பட்டி என்றொரு சிற்றூர் உள்ளது.


அப்பகுதியின் பெண்டிரில் பெரும்பாலோர் இப்பெரிய சுற்றிலே தான் நெல் குத்திப் பிழைப்பு நடத்தினார்களாம். தரையில் நெல்லைக்குவித்து, கையில் உலக்கை பற்றி ஒரு காலால் நெல்லை உலக்கை வாய்க்குத் தள்ளியபடி பகல் முழுதும் நெல் குத்துவார்களாம். ஒரு நேரத்தில் நூறு பெண்டிராவது இப்பணியில் ஈடுபட்டிருப்பார்களாம்.


ராமநாதருக்குக் கைக்குத்தல் அரிசியே படையலாய்த்திருவமுது செய்தார்கள் என்பதாலும் நாள்தோறும் 90 படியரிசி வடிக்கப்படும் என்பதாலும் இப்பணி தொடர்ந்து வந்தது. அத்திட்டப்படி நாள்தோறும் 360 பேர் குறைந்த அளவு உண்ணும்படியாக வடிக்கப்பட்டிருக்கும் இதைமடைப்பள்ளியைப் பார்த்தால் விளங்கும்.

No comments:

Post a Comment