Friday, January 18, 2013

அம்பரீஷனை காப்பாற்றிய சக்கரத்தாழ்வார்

அம்பரீஷன்! எனும் அரசன் மனம் எப்போதும் விஷ்ணுவின் மலர்ப்பதங்களையே எண்ணியபடி இருக்கும். மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் இருந்து வந்தான். விரதத்தை தசமியில் தொடங்கினான். ஏகாதசி உபவாசம் முடிந்து, துவாதசி திதி வந்து விட்டது.

விரதத்தை முடித்து பாரணை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சமயத்தில் அங்கு துர்வாசர் வந்து சேர்ந்தார். துர்வாச முனிவரை வரவேற்று உபசரித்தான் அம்பரீஷன். பிறகு தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்தான். மன்னா! இதோ யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன் என்று போனார் துர்வாசர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.


பாரணையை நிறைவு செய்வதற்கான காலம் முடியப் போகிறது. அதைச் செய்யாவிடில், அதுவே தோஷமாகி விடும். என்ன செய்வதுப மன்னனின் கவலையை அறிந்த மந்திரிகள், மன்னா! கொஞ்சம் துளசி தீர்த்தத்தைப் பருகி, நீங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம். துர்வாச மகரிஷி வந்தவுடன் அவருடன் சேர்ந்து நீங்கள் உணவருந்தலாம்.


அதனால், விரதமும் நிறைவேறும். அதிதியை விட்டுவிட்டு சாப்பிடும் தோஷமும் ஏற்படாது என்றனர். அவன் துளசி தீர்த்தத்தைப் பருகி பாரணை செய்த சிறிது நேரத்தில் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். தன்னை உணவருந்த அழைத்து விட்டு மன்னன் மட்டும் துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்து விட்டான் என்பதை உணர்ந்தார்.


அவருக்கு கோபம் தலைக்கேறியது. `அம்பரீஷா! என்னை அவமதித்து விட்டாய் அல்லவாப இதே பார்! என்று துர்வாசர் சீறினார். பிறகு தன் ஜடாமுடியில் ஒரு முடியைப் பிய்த்து வீசினார். அந்த முடியில் இருந்து ஒரு பெரிய பூதம் பயங்கர உருவில் வெளிப்பட்டது. அந்த பூதத்தை பார்த்த உடனே உண்டு பூதம் அம்பரீஷனை நெருங்கியது.


அப்போது தீப்பிழம்புகளை கக்கிக்கொண்டு, படுவேகமாகச் சுழன்றபடி வெளிப்பட்டது ஸ்ரீசுதர்சன சக்கரம். அதிர்ந்து போனார் துர்வாசர். இது ஏன் வெளிப்பட்டதுப இது மகாவிஷ்ணுவின் ஆயுதமாயிற்றே! இப்போது வெளிப்பட்டது ஏன் என்று கேள்விகள் ஓடின அவருக்குள். இதை எதிர்கொள்ள பூதத்தாலும் முடியாதே என்று தோன்றியது அவருக்கு. ஸ்ரீசுதர்சனத்தை சக்ரராஜன் என்பார்கள்.


உலகிலுள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவன். அம்பரீஷனைப் பிடிக்க முயன்ற பூதத்தை சுதர்சன சக்கரம் வெட்டித்தள்ளியது. அதன் பிறகு அது துர்வாசரை நோக்கித் திரும்பியது. இதுதான் சுதர்சனத்தின் சிறப்பு. அம்பை மட்டும் அது கவனிக்காது. ஏவியவரையும் அது கண்டுபிடித்து தண்டிக்கும். அப்படித்தான் பூதத்தை ஏவிய துர்வாசரை நோக்கிப் பாய்ந்தது சுதர்சனம். துர்வாசருக்கு அதிர்ச்சியாகி விட்டது.


அவர் பிரம்மனிடம் சரண் அடைந்து சிருஷ்டி கர்த்தாவே, என்னைக் காப்பாற்றுங்கள் என்றாÖë. அதற்கு இல்லை. இது என்னால் ஆகக்கூடியதல்ல. நீர் சிவபிரானிடம் சென்று கேட்டுப் பாரும் என்று பிரம்மன் கைவிரித்து விட்டார். அடுத்து துர்வாசர் சிவனிடம் ஓடினார். கயிலைநாயகா, காப்பாற்று என்னை என்று கூக்குரல் எழுப்பினார்.


`மகரிஷி! என்னால் சுதர்சனத்தைத் தடுக்க முடியாது. எனவே விஷ்ணுவைச் சரண் அடையுங்கள் என்று விலகிக் கொண்டார் சிவபெருமான். சுதர்சன சக்கரம் அனல் பறக்க சுழன்று கொண்டே வருவதை பார்த்ததும், துர்வாசர் விஷ்ணுவிடம் சரண் புகுந்தார். லட்சுமி நாயகா! உன்னுடைய ஆயுதம் என்னைத் துரத்துகிறது அதைத் தடுத்து நிறுத்தி என்னைக் காப்பாற்று என்றார்.


உடனே விஷ்ணு, "துர்வாசரே, சுதர்சனம் கோபப்படுமாறு நீர் என்ன செய்தீர்? என்ன நடந்ததுப என்று கேட்டார். இதையடுத்து துர்வாசர் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறினார். துர்வாசரின் விளக்கத்தைக் கேட்ட விஷ்ணு வருத்தம் ததும்ப மகிரிஷியே சக்கரத்தின் சினத்தைக் குறைக்க என்னாலும் முடியாது.


ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று மெல்ல இழுத்தார். என்ன வழிப அதை உடனே சொல்லுங்கள் என்றார் துர்வாசர். அதற்கு விஷ்ணு, துர்வாசரே இது என்னால் செலுத்தப்பட்டிருந்தால் என்னால் நிறுத்திவிட முடியும். அம்பரீஷனும் இதை செலுத்தவில்லை. அவனுக்கு ஆபத்து என்பதால் தானாகவே கோபத்தில் சுதர்சனம் சுழல்கிறது.


எனவே அம்பரீஷன் சுதர்சனத்தை பிரார்த்தித்தால், அதன் சினம் அடங்கும், உங்கள் ஆபத்தும் நீங்கும். இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார். துர்வாசருக்கு தனக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை தெளிவாகப் புரிந்து விட்டது. யாரை அழிக்க முற்பட்டாரோ, அந்த அம்பரீஷனிடமே அபயம் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவுக்கு வந்தார்.


அம்பரீஷா, என்னைக் காப்பாற்று என்ற படியே யமுனை நதிக்கரைக்கு விரைந்தார். அங்கே அம்பரீஷன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். மகிகரிஷியின் குரலைக் கேட்டு கண் விழித்தான். துர்வாசரை துரத்திக் கொண்டு வரும் சுதர்சன சக்கரத்தையும் பார்த்தான். என்னை நடந்ததென்று அவனுக்கு புரிந்து விட்டது.


சக்ர ராஜனே உலகம் அனைத்தையும் அழிக்க வல்லவரே உன்னை வணங்குகிறேன். மகிரிஷி என்னுடைய விருந்தாளி. அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படா வண்ணம் காத்து அருள்புரிவாயாக என்று சுதர்சனரைத் துதித்தான். அனல் பறக்கச் சுழன்று வந்து கொண்டிருந்த சக்கரம் மறைந்து போயிற்று. துர்வாசர் மனம் அமைதி பெற்று மன்னனோடு உணவருந்தி புறப்பட்டு போனார். இது சக்கரத்தாழ்வாரின் மகிமைக்கு சான்றாகும். *

No comments:

Post a Comment