Friday, January 18, 2013

சுதர்சன ஹோமம்

நமது வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின் போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்துவார்கள். அதேபோல் பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும். வீட்டில் நடத்தப்படும் சுதர்சன ஹோம - தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-


சூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்கள் கொண்டவரும் சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும் பலமான - பயம் தரும் சிரிப்புக் கொண்டவரும், வலுவான பல் உடையவரும், பெரிய வாய் உள்ளவரும், செப்பு நிறத் தலைமுடி வாய்த்தவரும், கைகளில் சக்கரம் - கதை - சங்கு - தாமரைப்பூ - உலக்கை - பாசம் - அங்குசம் - தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.


அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பிரமாண்டமாக நடத்தப்படும் சுதர்சன ஹோம, தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-


சங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, சூலம், கயிறு, அங்குசம், கேடயம், கலப்பை, இரும்பு உலக்கை, அக்னி, கவசம், கதை, மூன்று முனைகள் கொண்ட சூலம் போன்ற ஆயுதம் ஆகியவற்றுடன் திகழும் பதினாறு கைகள் கொண்டவரும், பலமான பல் பெற்றவரும், மஞ்சள் நிறத் தலைமுடி உடையவரும், மூன்று கண்களுடன் தங்க நிற சரீரம் பெற்றிருப்பவரும், சகல சத்ருக்களின் உயிர்களை எடுப்பபவரும், அதி கயங்கரத் தோற்றம் உடையவருமான ஸ்ரீசுதர்சனரை ஷட்கோணத்தில் அமர வைத்துப் பிரார்த்திக்கிறேன்.


சுதர்சன ஹோமத்தின் போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரி, ஸ்ரீசதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வதால் பலன் அதிகமாக கிடைக்கும்.


ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான பலன் கிடைக்கும். எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயாசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை உளமார உச்சரித்து ஜெபிக்க வேண்டும்.


முழுமனதோடு மிகுந்த முயற்சியுடள் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும். ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் பண்ணுகிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில் நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன் என்கிறார் பகவான். எனவே வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.


சத்ரு உபத்திரவம் நீங்க.


வழக்கமான வகையில் நெய்யை அக்னியில் சேர்த்து இந்த ஹேமத்தைச் செய்யவேண்டும். திங்கட்கிழமையில் ஆரம்பித்து ஒரு மண்டலம் வரை (41 நாட்கள்) இந்த ஹோமம் செய்ய வேண்டும்.


பூதம், பிசாசு குறித்த பயம் விலக:


நாயுருவி சமித்தை நெய்யில் முக்கி எடுத்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும்.


மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக: கரு நொச்சி, இருமுள், நீல ஊமத்தம்பூ, வெள்ளை பிளாச்சு இவற்றைக் கொண்டு மூவாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். ஒரு மண்டல காலம் இதைத் தொடர்ந்து செய்து வந்தால், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறுவார்கள்.


ஏவல் எடுப்பதற்கு: நாயுருவி, சர்க்கரை, நெய் இவற்றைக் கொண்டு 108 தடவை ஹோமம் செய்ய வேண்டும். எந்த ஏவல் ஏவப்பட்டிருந்தாலும் அது சட்டென விலகி விடும். ஏவலை மிகச் சரியாகக் கணித்து இது செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் ஹோமம் செய்தவரையே பின்விளைவு தாக்கும்.


ஏவி விடப்பட்ட அதிபயங்கர பூதங்கள் ஓடிப் போவதற்கு: நெய், நாயுருவி, அரிசி, கடுகு, எள், பால் பாயாசம், பஞ்சகவ்யம் இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கொண்டு 126 தடவை ஹோமம் செய்ய வேண்டும். இவை முடிந்ததும் மீதி இருக்கும் நெய்யை (ஒவ்வொரு முறையும் ஹோம குண்டத்தில் நெய் விடும்போது ஹோமம் செய்யப் பயன்படுத்தும் நாயுருவி சமித்தை ஒரு சின்ன பாத்திரத்தில் வைக்க வேண்டும்.


இதுதான் மீதி நெய்), சர்க்கரைப் பொங்கலுடன் பிண்டம் மாதிரி கலந்து ஒரு தனி கலசத்தில் போடவேண்டும். பிறகு, ஹோமத்தில் வைத்த கலச தீர்த்தத்தை எடுத்து பாதிக்கப் பட்டவரை தெற்குப் பார்த்து அமர வைத்து நீராட்ட வேண்டும். நெய்யுடன் கலந்து கலசத்தில் வைத்த சர்க்கரைப் பொங்கலை துர் - தேவைதை களுக்கு பலியிட வேண்டும். குழி தோண்டிப் புதைக்கப்பட்ட இந்த பலியை மண் போட்டு நன்றாக மூடிவிட வேண்டும்.


தீர்க்க ஆயுசு கிடைக்க: அறுகம்புல்லை பசும்பாலில் தோய்த்து எடுத்து, அதை அப்படியே அக்னியில் சேர்ப்பிக்கவேண்டும். இப்படி பத்தாயிரம் முறை ஹோமத்தில் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால், பூரண ஆயுள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க: தாமரைப்பூவை நெய்யில் தோய்த்து எடுத்து, அதை அப்படியே அக்னியில் சேர்க்க வேண்டும். இப்படி பத்தாயிரம் முறை ஹோமத்தில் சேர்க்கவேண்டும். இதனால் செல்வம் பல வாய்க்கப்பெறுவர்.


எளிதில் கிரகிக்கும் ஆற்றல்: ஷமதப்பூவை (ஒரு வகையான பூ) நெய்யில் தோய்த்து எடுத்து, அக்னிக்கு சமர்ப்பித்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்யவேண்டும்.


ஆபத்து வராமல் தடுக்க: கோலிக்குண்டு மாதிரி உருண்டை யாக இருக்கக்கூடிய குக்குலு என்ற மருந்துப் பொருளை அக்னியில் சமர்ப் பித்து ஆயிரத்தெட்டு தடவை ஹோமம் செய்யவேண்டும்.கறவை மாடு அதிக அளவில் பால் கறக்க: கிண்ணம் போல் மடிக்கப்பட்டதில் இருந்து, மாவிலையில் நெய் எடுத்து, அதை அக்னியில் அப்படியே சேர்க்கவேண்டும். இப்படி பத்தாயிரம் தடவை ஹோமம் செய்யவேண்டும்.


கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்கு தெரியாத நோய்கள் நீங்குவதற்கு: பஞ்சகவ்யம் உருவாக்கி நாயுருவியால் பத்தாயிரம் தடவை ஹோமம் செய்யவேண்டும். இந்த ஹோமம் முடிந்ததும் ஹோமத்தின் சாம்பலை தயிருடன் கலந்து வீட்டைச் சுற்றிலும் எட்டுத் திசைகளிலும் ஆகாயம், பூமி ஆகிய இரண்டிலும் சேர்த்து வீசி எறிய வேண்டும்.


சுகப் பிரசவம் ஆவதற்கு: கலசத்தில் நீரை நிரப்பி, சுதர்சனரை ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்தக்கலச நீரைக்கொண்டு தொடர்ந்து ஏழு நாட்களுக்கு பிரசவம் ஆகவேண்டிய பெண்ணை நீராட்ட வேண்டும்.


கோபம் வராமல் இருப்பதற்கு ஹோமம்... ஆலமர சமித்தைக் கொண்டு சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும். பால், நெய், சர்க்கரைப் பொங்கல் இவற்றை இந்த சமித்து மூலம் எடுத்து அக்னியில் விட்டு ஹோமம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் தனித் தனியாக நான்காயிரம் தடவை செய்யவேண்டும்.


இந்த ஹோமம் செய்வதன் மூலம் கோபத்தை முற்றிலுமாகக் குறைக்கலாம். குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் சுதர்சன ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.

1 comment: