Thursday, March 12, 2015

பாற்கடல் ஓர் விளக்கம்


பாற்கடல் ஓர் விளக்கம் 


பாற்கடலை கடைவது என்பது புராணங்களில் அடிக்கடி விவரிக்கப்படும் மாபெரும் விஷயமாகும். இந்த பாற்கடல் கடைதல் என்பதற்கு அகநோக்கு, புறநோக்கு என்று இரண்டு தளங்கள் உண்டு
யோக மார்க்கத்திலும் சரி, பக்தி மார்க்கத்திலும் சரி அதற்கான தனித்துவத்தை இந்த பாற்கடல் கடைதல் பெற்றிருக்கிறது. பேரலைகளால் கொந்தளித்துக் கிடந்த பெருங்கடலின் மையமாக நிமிர்ந்திருந்த மேருவின் உச்சியில் சூரியனின் பொன்கிரணங்கள் பட்டு பாற்கடல் தங்கமாக தகதகத்திருந்தது. 

வாசுகி எனும் மாபெரும் பாம்பை மேருவைச் சுற்றி வலிமையாக இறுக்கினார்கள். எம்பெருமானான மகாவிஷ்ணு பாற்கடல் பரந்தாமன் எவராலும் பிளக்க முடியாத, வஜ்ஜிரம் போன்ற ஓடுகளையுடைய கூர்மம் எனும் ஆமை வடிவில் அவதரித்து மேருவின் கீழ் அமர்ந்தார். மேரு நிலை பெற்றது. 

மேரு எனும் மந்திர மலையை வாசுகிப் பாம்பு இடதும், வலதும் தன்னை அசைத்துச் சுழற்ற அகிலமே அதிர்ந்தது. தேவர்களும் அசுரர்களும் அசைவுக்கு உந்தம் சேர்த்தனர். கடைதல் துரிதமாகியது. பெருவட்டச் சக்கரத்தின் மையத்திலிருந்து அற்புதமான விஷயங்கள் பொத்துக் கொண்டு கிளர்ந்தெழுந்தன. திருமகள் திவ்ய வடிவோடும், வெண் குதிரையான உச்சைச்சிரவஸ் அதிவேகத்தோடும், ஐராவதம் அசைந்தெழுந்து வந்தது பார்த்து பரவசமாயினர்.

அதன் பிறகு ஆலகாளம் என்ற கடும் விஷத்தை வாசுகி கக்கியது. கடும் நெடியில் தேவர்களும், அசுரர்களும் கலங்கித் தவித்தனர். கயிலை நாயகனின் திருவடி பற்றினர். ஈசன் கலங்காது தன் கண்டத்தின் மேலேற்றி அடைத்து திருநீலகண்டனாக காட்சி தந்தான். இறுதியில் பேரொளி பெருமையத்தின் நடுவே அமிர்தகுடம் நிறைந்து தளும்பியது. ஆராவமுதனான நாராயணன் அமிர்தத்தை அள்ளி எடுத்து வந்தார். 

சகல தேவர்களும், அசுரர்களும் அதைப் பெற போட்டியிட்டனர். மகாவிஷ்ணு யாரும் அறியாத வண்ணம் மோகினி அவதாரமெடுத்தார். மோகினியின் பேரழகில் மயங்கிய அசுரர்கள், மரணமிலாப் பெருவாழ்வு தரும் அமிர்தத்தைவிட மாயப்பெண் மோகினியின் அழகில் தங்களை தொலைத்தனர். 

புலனின்பங்களில் ஆசை கொண்டனர். தேவர்கள் தவமிருந்த ரிஷிகள்போல காத்திருந்து அமிர்தத்தை பெற்றனர். எல்லா லீலைகளுக்கும் காரணமான அந்த கூர்மத்தை எவர் வணங்குகிறார்களோ அவர்கள் உடையாத பிறவிச் சுழற்சியை உடைத்து பிறவா நிலையை அடைவர். 

இந்தப் பாற்கடல் எப்போதோ யுகாந்திரங்களில் கடையப்பட்ட விஷயமல்ல. நமக்குள் யோக விஷயமாக இடகலை, பிங்கலை, சூட்சும நாடிகள் மூலம் கடைந்து கடைந்து மேலேற்றுகிற விஷயம்தான். குண்டலினி எனும் சுருண்டு கிடக்கும் பாம்புசக்தியை மந்திரங்கள் எனும் மந்தார மலையை கடையும்போது எல்லா சக்திகளும் கைகூடும். ஆனால், எச்சரிக்கையோடு இருந்து அமுதத்தை பருகுவதில்தான் நமது வைராக்கியம் இருக்கிறது. 
-

No comments:

Post a Comment