Friday, March 27, 2015

சிதம்பரம் நடராஜர் ஆலய தல வரலாறு

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக்காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.

இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார்.

இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை. பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார்.

உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார்.

மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்களை கயிலையில் இருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இதுவே சிதம்பரம் நடராஜர் ஆலய தல வரலாறாகும்.

No comments:

Post a Comment