Friday, January 18, 2013

மாட்டுப்பொங்கல் வைப்பதன் தத்துவம் என்ன

தைப்பொங்லகன்று மகிழ்ச்சியில் திளைத்து விட்ட மனிதர்கள் அனைவரும் மறுநாள் கொண்டாடுவது மாட்டுப்பொங்கல். இதை கோபூஜைத்திருநாள் பட்டிப்பொங்கல்,கன்றுப் பொங்கல் என்றும் கூறுவர். இந்த பூஜைகள் ஆகமம், சாஸ்திரங்களில் அமையாமல் வழக்கத்தில் தான் கொண்டாடப்படுகிறது.

பசுக்களின் உடம்பில் எல்லா தேவர்களும் ரிஷிகளும் இருப்பதாகக் கருதி, அவை தினமும் பிள்ளை வளர்க்கும் பாலைக் கொடுப்பதால் வருடத்தில ஒரு நாளேனும் அதை பூஜை செய்ய வேண்டும் என்று சாத்திரங்கள் வற்புறுத்துகின்றன. அதாவது உத்தராயண புண்யகாலம் தொடங்குகிற தை மாதத்தில் ஒளி தரும் சூரியனை வணங்கிவிட்டு நல்ல செயல்களைத் தொடங்குகிறோம்.


மறு நாள் கோபூஜையைச் செய்து திருமகள் அருள் பெற முயல்கின்றனர். ஒரு சமயம் மகாலெட்சுமி தேவியை அரக்கர்கள் துரத்தி வந்த போது மகரிஷிகள் தங்குகிற பசுவின் உடலுக்குள் தங்க இடம் கேட்ட போது கடைவாய்ப்பகுதியில் தான் இடம் இருக்கிறது என்று தேவிக்குத்தந்தார்கள், மாட்டுப்பொங்கலன்று பசுவின் பின் பகுதியில் மகாலட்சுமியை குறித்தும் எருதுவின் முன் பக்கம் நந்தியாரை நினைத்தும் விசேஷ பூஜைகள் செய்வது வழக்கம்.


வாக்குக்கு நாயகன் நந்தி, வளங்களின் நாயகி கோமாதா இவர்களை ஒரே தினத்தில் வழிபடும் நியதியைத்தான் மாட்டுப்பொங்கலின் முக் கியத்துவசாரம். மாட்டுப்பொங்கலுக்கு ஏன் பட்டிப்பொங்கல் என்று பெயர் வந்ததெனில், பட்டி என்றால் காமதேனுவின் மகள்- கன்று எனப்பெயர் ஒன்று வழக்கத்தில் உள்ளது.


காளை, காமதேனு, பட்டி ஆகிய குடும்பத்தைத் தெய்வமெனக் கருதி பூஜை செய்பவர்களுக்கு போகபாக்கியங்களுக்குக் குறைவு இருப்பதில்லை. இந்நாளில் உழவர்கள் அனைவரும் தங் கள் வளர்க்கும் பசு கன்று எருதுகளை கொம்பு சீவி வண்ணம் தீட்டி, வண்ணமயமான நெட்டி மாலைகள் அணிவித்து மஞ்சள் குங்குமம் இட்டுச் சர்க்கரை அன்னம் வெண்பொங்கல் பழங்கள் வெல்ல அரிசி இட்டுப்படைத்து ஆரத்தி காட்டி வணங்குவர்.


யான் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உழைக்கும் மாடுகளுக்கும் பசுக் கூட்டங்களுக்கும் குதூகலமான நாள் ஒன்றை அறிவித்துள்ளனர்.


மஞ்சு விரட்டு:-


மாட்டுப்பொங்கல் அன்று காலை பசுக்களுக்கும் எருதுகளுக்கும் பூஜை செய்து மரியாதை செலுத்திய பிறகு மாலையில் அவற்றை மகிழ்ச்சிப்படுத்த எல்லா மாடுகளையும் பசுக்களையும் ஒரே இடத்தில் கூடச் செய்து பொங்கலோ பொங்கல் என்ற கூறிக்கொண்டு மஞ்சள் நீரை அவற்றின் மேல் தெளித்த படி சுற்றி வருவார்கள்.


கிராமப்புறங்களில் விவசாயிகள் எருதுகளை வண்டியில் பூட்டி அலங்கரித்து `மாட்டுச்சவாரி' என்றவாறு குடும்பத்துடன் ஊரைச்சுற்றி வந்து ஆலயவாசல்களில் சென்றுவணங்கி அவற்றுக்கு வாழைப்பழம் கீரை இவற்றைக்கொடுத்து மகிழ்ச்சி அடையச் செய்வார்கள் அவையும் துள்ளிக்குதித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்.


மஞ்சு விரட்டு என்பது காலப்போக்கில் காளைகள் போட்டியிடும் ஜல்லிக்கட்டு முறை வருவதற்கு வித்திட்டது. அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு விழா இந்தத்தமிழ் மண்ணுக்கு அயல்நாடுகள் வரை சென்று புகழ் சேர்த்திருக்கிறது.


காளை கட்டும் திருவிழா:-


இந்திய நாட்டின் பழைய கிராமங்களில் இன்றும் மாட்டுப்பொங்கல் அன்று காளைகட்டும் திருவிழாவை நடத்துவார்கள். கிராமப்புற தனவந்தர்கள் தன் வீட்டுக்கன்னிப் பெண்களுக் கென்று ஒரு காளையை வளர்ப்பார்கள் பெண்களும் அதை அன்புடன் பராமரித்து வருவர்.


மாட்டுப்பொங்கலன்று மாலையில் பொது இடத்தில் அவிழ்ந்து விட்டு அதன் கொம்படியில் வண்ணக் கொடி ஒன்றைக் கட்டி அவற்றை அடக்கி எந்த இளைஞர் வெற்றி பெறுகிறாரோ! அவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாகத் தெரிவிப்பார்கள். கால மாற்றங்கனாலும் நாகரீக வளர்ச்சியாலும் இம்முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment