Tuesday, March 3, 2015

துறவு என்றால் என்ன?

துறவு என்றால் என்ன? 
துறவு நிலை வாழ்க்கையின் நான்காவது படிக்கட்டு. கட்டுப்பாடு, புலனடக்கம்,மன ஒழுக்கம், வேதங்களைப் படித்தல் ஆகியவற்றில் பயிற்சிகளை மேற்கொண்டு பிரம்மச்சரிய நிலையில் வாழும் ஒரு மனிதன், இந்த நிலைக்கு அடுத்தபடியாக இல்லற வாழ்வில் ஈடுபடுகிறான். இந்த கிரஹஸ்தாஸ்ரமத்தில், மனிதன், குழந்தைகளைப் பெறுகிறான். அவர்களுக்கு கல்வி புகட்டுகிறான். இந்த ஆஸ்ரமத்துக்கே உரிய வினோதமான பண்புகளாகிய பொறுமை, தாராள மனப்பான்மை, கருணை ஆகியவற்றை வளர்த்துக்கொண்டே, வானப்ரஸ்த நிலையில் வாழ்வதற்கு தன்னை தயார் செய்துகொள்கிறான். வானப்ரஸ்த ஆஸ்ரமம் என்பது சந்நியாச நிலைக்கு மனிதன் தன்னை தயார் செய்துகொள்ளும் நிலை ஆகும். சந்நியாச ஆஸ்ரமத்தில் ஈடுபடும் மனிதன், ஆன்மாவைக் குறித்து தியானம் செய்து ஆன்ம ஞானம் பெறுகிறான்.
சந்நியாசம் என்பது ஒருவர் தனது சொந்த சச்சிதானந்த ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பதாகும். சந்நியாசம் என்பது ஆன்ம ஞானம் ஆகும்.
நமது முன்னோர்களாக, நமது குரு நாதர்களாக விளங்கிய சனக, சனந்தனர்களும், சனந்தன, சனத்குமாரர்களும் (நான்கு குமாரர்கள்) பிரம்மாவால் சிந்தித்த அளவில் சிருஷ்டிக்கப்பட்ட புதல்வர்கள். இல்லற வாழ்வில் ஈடுபடுமாறு இவர்களிடம் பிரம்மா கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். ஏனெனில் இல்லற வாழ்வின் தன்மை பற்றி அவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே, அவர்கள் உடனடியாக நிவ்ருத்தி மார்க்கத்தில் இறங்கினார்கள். இவர்கள் துறவு மேற்கொண்ட நமது முன்னோர்கள். புகழ்மிகு தெய்வீகத் தன்மையுடைய பிரம்ம ஞானிகளாக, உன்னதப் பரம்பொருளாகிய பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து தெய்வீக மணம் பரப்பிய ஸ்ரீசங்கரர், கௌடபாதர், தத்தாத்ரேயர் ஆகியோரின் குழந்தைகளாக சந்நியாசிகள் திகழ்கின்றனர்.
சந்நியாசம் என்பது சுய கட்டுப்பாடு; பற்றற்ற நிலை. உலகியல் பொருட்கள், உலகியற் செயல்கள் இவற்றை மட்டுமின்றி, அகந்தை, ஏக்கம்,வாசனைகள், நான்தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற இறுமாப்பு; ஒன்றிலிருந்து மற்றொன்றை பேதப்படுத்தி, ஒற்றுமைக்கு மாறாக வேற்றுமையைத் தோற்றுவிக்கும் புக்தி ஆகியவற்றையும் துறப்பதுதான் சந்நியாசம் ஆகும்.
புறத்தே மேற்கொள்ளும் துறவு, உலகியற் பொருட்கள், சுய நலச் செயல்கள் ஆகியவற்றைத் துறப்பதாகும். இதுவும் தேவைதான். ஆனால் மனத்தளவிலான துறவுதான் மிகவும் முக்கியமானது. உயிர் நாடி போன்றது.

No comments:

Post a Comment